Published : 03 Mar 2025 07:03 AM
Last Updated : 03 Mar 2025 07:03 AM
இந்திய பங்குச் சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, தொடர்ந்து 5 மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது இந்திய பங்குச் சந்தையில் ‘எப் அண்டு ஓ’ வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட பின், இதுவரை இல்லாத நெருக்கடியாக கருதப்படுகிறது.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் பங்குகளின் விலை ஏறுவதும், இறங்குவதும் வாடிக்கையான நடைமுறையாக இருந்தாலும், தொடர்ந்து இறங்கிக் கொண்டே இருப்பது பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்கும் என்பதால் இதுகுறித்து மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே நிபுணர்களின் எச்சரிக்கையாக ஒலிக்கிறது.
லீமென் பிரதர்ஸ், கரோனா உள்ளிட்ட நிகழ்வுகளின்போது ஏற்பட்ட சரிவை விட மோசமான சரிவாக தற்போதைய வீழ்ச்சி கணிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை வாபஸ் பெற்றுக் கொண்டு தொடர்ந்து வெளியேறி வருவதே சரிவுக்கான பிரதான காரணம். கடந்த 5 மாதங்களில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஏறக்குறைய 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை வாபஸ் பெற்று வெளியேறியிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் பெரும்பங்கு வகித்து வருகிறது. வெளிநாட்டு முதலீடுகளைப் பெற ஒவ்வொரு மாநில அரசும் மாநாடுகளை நடத்தி, அவர்களுக்கு சலுகைகளை வழங்கி, நிபந்தனைகளை தளர்த்தி, நடைமுறைகளை எளிமையாக்கி இன்னும் என்னவெல்லாம் உதவிகள் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்து சிரமப்பட்டு முதலீடுகளை ஈர்க்கின்றன.
அவர்கள் முதலீடு செய்தால், வேலைவாய்ப்பு பெருகும், தொழில்துறையில் முன்னேற்றம் ஏற்படும், நாட்டின் பொருளாதாரம் வளரும் என்ற நல்ல நோக்கத்தில் மாநில அரசுகள் போட்டி போட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. ஆனால், மறுபுறம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் செய்துள்ள முதலீடுகளை 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விற்றுவிட்டு வெளியேறுவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது ஏற்க முடியாதது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து தங்களது முதலீட்டை வாபஸ் பெறுவது நிச்சயம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. பங்கு வர்த்தக வரி (STT), நீண்டகால முதலீட்டு லாப வரி (LTCG), குறுகிய கால முதலீட்டு லாப வரி (STCG) ஆகியவற்றை உயர்த்தியதே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கான முக்கிய காரணமாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
STT வரி மூலம் மத்திய அரசுக்கு ரூ.44,538 கோடி வருவாய் கிடைத்துள்ளது. அடுத்த ஆண்டு ரூ.78,000 கோடி வருவாய் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் வரி உயர்வுக்குப்பின், அதாவது கடந்த செப்டம்பரில் ரூ.537 டிரில்லியனாக இருந்த பங்கு வர்த்தக அளவு, 44 சதவீதம் சரிந்து ரூ.298 டிரில்லியனாக குறைந்துள்ளது.
இத்தகைய சரிவு தொடர்வது நாட்டின் நலனுக்கு நல்லதல்ல; வரி இலக்கையும் எட்ட முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மனதில் கொண்டு மத்திய நிதியமைச்சகம் தலையிட்டு இந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT