Last Updated : 25 Feb, 2025 07:21 AM

6  

Published : 25 Feb 2025 07:21 AM
Last Updated : 25 Feb 2025 07:21 AM

பெலகாவி சம்பவம்: மொழி விஷயத்தில் குறுகிய கண்ணோட்டம் கூடாது!

கர்நாடக மாநில போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மகாராஷ்டிராவில் நுழைந்தபோது, பயணி ஒருவருடன் ஏற்பட்ட தகராறில் கர்நாடக மாநில நடத்துநர் தாக்கப்பட்ட சம்பவம், இருமாநில மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில பயணி மராட்டி மொழியில் பேசியதும், நடத்துநர் கன்னட மொழியில் பேசியதும் மோதல் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கர்நாடகா வந்த மகாராஷ்டிர மாநில பேருந்து ஓட்டுநர் ஒருவர் தாக்கப்பட்டதும் மோதல் இருதரப்பிலும் வலுக்க காரணமாக அமைந்துவிட்டது. இருமாநில போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக ரக் ஷனவேதிகே அமைப்பு ‘சலோ பெலகாவி’ போராட்டம் அறிவித்துள்ளது. மராட்டிய அமைப்புகளும் எதிர் கருத்துகளை தெரிவித்து நிலைமையை மோசமடையச் செய்துள்ளன.

கர்நாடகா - மகாராஷ்டிர மாநிலங்கள் இடையே ஏற்கெனவே எல்லைத் தகராறு இருந்து வந்த நிலையில், தற்போதைய விவகாரம் அந்த பிரச்சினையை தூசி தட்டி எடுக்க வைத்துள்ளது. இருமாநில தலைவர்கள் தங்கள் மொழியை விட்டுக் கொடுக்காமல் உணர்ச்சிவசப்பட்டு பேசி வருவது அமைதியை விரும்பும் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ், தெலுங்கு, மலையாளம் பேசும் தென்னிந்தியர்கள் மட்டுமே அதிகம் வசித்து வந்த நிலையில், சமீபகாலமாக இந்தி பேசும் வடமாநில மக்கள் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றி வருவது உள்ளூர் மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளது.

இந்த விவகாரம் அரசியல்ரீதியாக கையாளப்பட்டு, பொது இடங்களில் ‘கன்னடத்தில் பேசுங்கள் (Communicate in Kannada)’ என்று வெளிப்படையாக எழுதிப் போடுமளவுக்கு அங்கு நிலைமை மோசமடைந்துள்ளது. போதாக்குறைக்கு பெங்களூருவில் 20 சதவீதம் மக்கள் மட்டுமே கன்னடர்கள் உள்ளனர் என்று அம்மாநில அரசியல் கட்சி தலைவர்களும் மக்களின் உணர்வுகளை தூண்டிவிடும் வகையில் பேசுவது கவலையளிக்கும் விஷயமாகும்.

இந்தியாவில் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எந்த மாநிலத்துக்கும் சென்று வருவதற்கான அடிப்படைச் சுதந்திரம் உண்டு. எந்த மாநிலத்திலும் சுதந்திரமாக தொழில் செய்யவும், பணிபுரியவும் அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்குகிறது. தற்போதுள்ள உலகமயமாக்கல் சூழலில், மக்கள் தங்கள் முன்னேற்றத்துக்கு வேலைவாய்ப்பு குறைவான பகுதிகளில் இருந்து வேலைவாய்ப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு இடம்பெயர்வது இயற்கையானதே.

இதுபோன்ற மாற்றங்கள் நடைபெறும்போது, மொழி, இனம், சொந்த ஊர் என உணர்வுப்பூர்வமான விஷயங்களை சுட்டிக்காட்டி பிரித்துப் பேசும்போது, மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு விதைக்கப்படுகிறது.

குறிப்பாக, மொழியை அடிப்படையாக வைத்து பேசப்படும் கருத்துகள் மக்களை எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்களும், செல்வாக்கு மிக்கவர்களும் இந்த விஷயங்களை மையப்படுத்தி வெளியிடும் கருத்துகள் மக்களிடம் ஆழமாக பதிந்து அவர்களும் குறுகிய கண்ணோட்டத்துக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. தாய்மொழி உணர்வு என்பது மற்ற மொழியினரை காயப்படுத்தும் அளவுக்கு வெறியாக மாறிவிடாமல் கட்டுக்குள் இருப்பதே அமைதிக்கு வழிவகுக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x