Last Updated : 24 Feb, 2025 08:04 AM

4  

Published : 24 Feb 2025 08:04 AM
Last Updated : 24 Feb 2025 08:04 AM

அமெரிக்க உதவி குறித்த உண்மை வெளிவர வேண்டும்!

இந்தியாவில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க 21 மில்லியன் அமெரிக்க டாலர்(சுமார் ரூ.181 கோடி) அளவுக்கு நிதியுதவி வழங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்தியாவில் ஓட்டுப்பதிவை அதிகரிக்க அமெரிக்கா ஏன் உதவ வேண்டும் என்ற கேள்விக்கு விடைதெரியாமல் நாட்டு மக்கள் குழம்பிப் போயுள்ள நிலையில், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா வெளியிட்டுள்ள தகவல்கள் இன்னும் அதிர்ச்சியளிப்பவையாக அமைந்துள்ளன.

கடந்த 2001 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவிற்கு அமெரிக்கா 2.9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.25000 கோடி) அளவுக்கு உதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் 44.4 சதவீதம் தொகை பாஜக தலைமையிலான 2014 - 24 ஆட்சிக் காலத்திலும், 41.3 சதவீதம் தொகை 2004 – 2013 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் காலகட்டத்திலும் பெறப்பட்டுள்ளதாக கூறியிருப்பது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

முந்தைய பைடன் அரசு வேறு யாரோ ஒருவர் ஆட்சிக்கு வர பண உதவி அளித்துள்ளதாக ட்ரம்ப் மறைமுக குற்றச்சாட்டு ஒன்றையும் கூறியிருப்பது, இதுகுறித்த முழு உண்மையையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வத்தை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சார்பில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘நல்ல நோக்கத்திற்காக அமெரிக்க உதவி இந்தியாவிற்குள் வர அனுமதிக்கப்பட்டது. ஆனால், கெட்ட நோக்கம் இருப்பதைப் போன்ற ஒரு தகவல் வெளிவருவதால் இதுகுறித்த உண்மையை தெரிந்து கொள்வது அவசியம்’’ என்று தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற முதிர்ச்சிபெற்ற ஜனநாயக நாட்டில் ஓட்டுப்பதிவை அதிகரிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து பணம் உள்ளே வருவதற்கான அவசியம் இல்லை.

இந்த நிலையில், அந்தப் பணம் உண்மையில் எதற்காக இங்கு வந்தது, இங்கு என்ன வேலை செய்தது என்று தெரிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. அதை ஒளிவுமறைவின்றி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமையும் மத்திய அரசுக்கு உண்டு.

இதற்கிடையே, அமெரிக்காவின் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில், அதிபர் ட்ரம்ப் தெரிவித்ததைப் போன்று இந்தியாவிற்கு நிதியுதவிகள் சென்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பங்களாதேஷ் நாட்டிற்கு 21 மில்லியன் டாலர்கள் உதவி வழங்கியிருப்பதை தெரிவித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் அந்தஸ்தில் உள்ள ஒருவர், இல்லாத ஒன்றைச் சொல்வதற்கு வாய்ப்பில்லை. இந்தியாவிற்குள் அமெரிக்கப் பணம் வந்துள்ளதை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஒப்புக் கொண்டுள்ள நிலையில், முன்னுக்குப் பின் வரும் தகவல்களில் எது உண்மை, எது பொய் என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவது மத்திய அரசின் தலையாய கடமையாகும். உண்மையில் தவறு நடந்திருந்தால், அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x