Last Updated : 22 Feb, 2025 07:21 AM

8  

Published : 22 Feb 2025 07:21 AM
Last Updated : 22 Feb 2025 07:21 AM

மொழிக் கொள்கையை ஆய்வு செய்யலாமே?

பிரதிநிதித்துவப் படம்

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாவிட்டால் தமிழகத்திற்கு நிதி கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேட்டியளித்ததையடுத்து தமிழகத்தின் மொழிக் கொள்கை சர்ச்சையாகியுள்ளது.

தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு பயணத்திற்கு நீண்டகால வரலாறு உண்டு. ராஜாஜி காலத்தில் ‘இந்துஸ்தானி’ மொழியை 1938-ம் ஆண்டு தமிழக பள்ளிகளில் அறிமுகம் செய்ய முயன்றபோது தொடங்கியது இந்தி எதிர்ப்பு. அந்த முயற்சி அப்போது கைவிடப்பட்டு, 1963-ல் அண்ணாதுரை கைது செய்யப்பட்டபோது போராட்டமாக வெடித்தது. மீண்டும் 1965-ம் ஆண்டு அண்ணாதுரை கைதானபோது இந்தி எதிர்ப்பு போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது.

லால் பகதூர் சாஸ்திரி உள்ளிட்ட தலைவர்கள் அளித்த உறுதிமொழியால் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. இருந்தாலும், தமிழகத்திற்குள் இந்தியை நுழைக்கும் முயற்சி அவ்வப்போது நடந்துகொண்டுதான் இருந்தது. ரயில் முன்பதிவு மற்றும் மணியார்டர் விண்ணப்பங்கள், போட்டித் தேர்வுகள் என இந்தி நுழைய முயன்ற போதெல்லாம் தமிழகம் எதிர்ப்பைக் காட்டி வந்துள்ளது.

இந்தி நுழைந்தால் தமிழ் அழியும் நிலை ஏற்படும் என்ற பார்வையே இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் அன்று வலுத்ததற்கான காரணம். அதுவே ஒரு பெரிய அரசியல் கோஷமாக உருவாகி தமிழகத்தில் திமுக வலுப்பெற முக்கிய காரணியாக அமைந்தது. இந்த விவகாரம் துவங்கி 87 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இன்றைக்கும் அதே சூழ்நிலையில் தான் இருக்கிறதா என்பதை ஆய்வுசெய்து முடிவுக்கு வருவதே அறிவார்ந்த சமூகத்திற்கு அழகு.

ஒருபுறம் மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியை திணிக்கும் கொள்கைதான் என்ற பார்வை சரிதானா என்பதில் தெளிவு வேண்டும். இந்தியை மட்டுமல்ல, வேறு சில இந்திய
மற்றும் வெளிநாட்டு மொழிகளையும் மூன்றாவது மொழியாக வகுப்பில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தான் மத்திய அரசின் கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது என்று பாஜக தரப்பில் இருந்து அழுத்தம் திருத்தமாக சொல்லப்படுவதையும் கவனிக்க வேண்டும்.

அதேபோல தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டும் இருமொழிக் கொள்கையை வைத்துக்கொண்டு, மெட்ரிகுலேஷன் உள்ளிட்ட பலரும் நடத்தும் தனியார் பள்ளிகளில் மூன்றாவது மொழிப்பாடத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தரப்படுகிறது என்பதை ஆளும் திமுக அரசு இதுவரை மறுக்கவில்லை. பலகோடி ரூபாய் புழங்கும் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையை அனுமதித்துவிட்டு சாமானியர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அரசியல் மற்றும் பொருளாதார லாபம் கருதிய அணுகுமுறை என்ற குற்றச்சாட்டிற்கும் திமுக அரசு தெளிவான பதில் சொல்ல வேண்டும்.

பள்ளிகளில் கல்வி பயிலும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, இன்றைய காலகட்டத்திற்கு எது தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல விஷயங்கள் உலகமயமாகிவிட்ட சூழ்நிலையில், அன்றைக்கு தலைவர்கள் எடுத்த இருமொழிக் கொள்கை இன்றைக்கும் பொருத்தமாக இருக்கிறதா என்பதை அறிவார்ந்த கல்வியாளர்களை வைத்து விவாதித்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவெடுப்பதே எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் கடமை.-

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x