Published : 20 Feb 2025 11:02 AM
Last Updated : 20 Feb 2025 11:02 AM
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவதைப் பதைபதைப்புடன் பார்த்துவருகிறோம். 2015-2022 காலக்கட்டத்தில் மட்டும் இந்திய அளவில் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் சதவீதம் 217 ஆக அதிகரித்து 2,26,728 வழக்குகள் விசாரணைக்குக் காத்திருந்தன.
புதிய வழக்குகள் எதுவும் விசாரணைக்கு வராத நிலையில், இந்த வழக்குகளை முடிக்க மட்டும் ஆறு ஆண்டுகள் ஆகலாம் என வழக்கறிஞர்கள் கணித்தனர். ஆனால், சில மணி நேரத்துக்கு ஒரு வன்முறை என்கிற கணக்கில் நிலைமை படுமோசமாகச் சென்றுகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2012 - ஜூன் 2022 காலக்கட்டத்தில் 20,829 போக்சோ வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் 8,190 வழக்குகள் முடிக்கப்பட்டு 5,631 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதம் 8,000க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருந்த நிலையில் 3,500 வழக்குகள் விசாரணைக்குக் காத்திருக்கின்றன. போக்சோ வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த 19 மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட நிலையில், அவற்றில் 8 நீதிமன்றங்களில் மட்டும் 200க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
முடிவுக்கு வராத குற்றங்கள்: 2012இல் உருவாக்கப்பட்ட ‘போக்சோ சட்டம்’ குழந்தைகள் பாதுகாப்புக்கான விரிவான சட்டம் என்று எல்லாத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகள் மீது கொடூரமாக நிகழ்த்தப்படுகிற செயல் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அது தவறு. குழந்தைகளைத் தவறான எண்ணத்துடன் தொடுதல், தடவுதல், தீங்கிழைத்தல் போன்ற எல்லா வகையான வன்முறைகளும் அந்தச் சட்டத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவ்வளவு விரிவான சட்டங்கள் இருந்தும், குழந்தைகள் மீதான குற்றங்கள் குறையவே இல்லை.
அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்கள் - குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதற்கான சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவந்திருக்கிறார். 12 வயதுக்கு உள்பட்ட பெண் குழந்தைகளிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் மரண தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். அதன் பிறகும் எவ்வித அச்ச உணர்வுமின்றிக் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது.
‘தகாத முறையில் குழந்தைகளிடம் நடந்துகொள்ளுதல்’ (Child Abuse) குறித்த மத்திய அரசின் 2007 ஆய்வறிக்கையானது, குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான - நெருங்கிய உறவினர்கள், சுற்றத்தினர், பெற்றோரின் நண்பர்கள் போன்றவர்கள் மூலமாகத்தான் பாலியல் வன்முறை நடைபெறுகிறது என்று தெரிவிக்கிறது. நம் தேசியக் குற்றவியல் ஆய்வறிக்கையில் 97% குற்றங்கள் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான, நெருங்கிப் பழகக்கூடியவர்களால்தான் குற்றங்கள் நடை பெறுவதாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பற்ற குழந்தைகள்: நம் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதற்கு ஏற்ற இடமாக நாம் நம்பி ஒப்படைத்துவருகிற பள்ளிகளிலேயே இத்தகைய கொடுமை நடப்பது ஏற்கவே முடியாதது. அடிப்படையில், பள்ளிகள் என்பவை குழந்தைகளுக்கான பகல் நேரப் பாதுகாப்பு மையம்தான். கல்வி, ஆளுமைவளர்ச்சி யாவும் அத்துடன் இணைந்ததுதான்.
இன்றைக்கு ஒருங்கிணைக்கப்படாத கூலித் தொழிலாளர்கள், விளிம்புநிலைச் சமூகத்தினர் தங்கள் குழந்தைகளைப் படிப்பதற்கு மட்டுமல்லாமல், பாதுகாப்பாக இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில்தான் பள்ளிக்கூடத்தில் ஒப்படைத்துவிட்டு வேலைக்குப் போகிறார்கள்.
பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழந்தைகள்தான் இன்றைக்குக் குழந்தைத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். குழந்தைத் திருமணத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள். உலகத்தில் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் குழந்தைகள். குழந்தைகள் குரலற்றவர்கள், எதிர்க்கும் ஆற்றல் அற்றவர்கள்.
ஆகவே, நாம் அவர்களின் குரலாக, சக்திகளாக மாற வேண்டும். 18 வயது வரை குழந்தைகள் என்கிறோம். அவர்களிடம் வாக்கு வங்கி இல்லை என்பதாலேயே அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லையோ என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் பாதுகாப்பு நிதி குறைக்கப்பட்டுவருகிறது. குழந்தைகளுக்கான அரசு அமைப்புகள் சரியாக இயங்குவது இல்லை.
ஒரு குழந்தை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறது என்றால், அக்குழந்தை பால்யத்தை இழக்கிறது. அந்த வன்முறை குழந்தைகளிடம் உளவியல் சிக்கலை உண்டாக்குகிறது. எளிதில் மறையாத அந்த வடுவானது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தையின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருபுறம், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், போக்சோ சட்டம் மூலம் யாரும் பெரிய அளவில் தண்டனை பெற்றதாகத் தெரியவில்லை.
என்ன செய்ய வேண்டும்? - போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களில் 16% பேர்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தண்டனை பெறுகிறார்கள். மற்றவர்கள் எல்லாம் தண்டனையிலிருந்து விடுபட்டுவிடுகிறார்கள். எனவே, குழந்தைகள் பாதுகாப்பு என்பது அனைவரின் கடமை. அதை உறுதிப்படுத்த, பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, அனைத்துப் பள்ளிகளிலும் ‘குழந்தை பாதுகாப்புக் கொள்கை’யை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
கேரளம் போன்ற மாநிலங்களில் குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை நடைமுறையில் உள்ளது. ஒரு பள்ளிக்கூடத்தில் யாரெல்லாம் உள்ளே நுழையலாம், பள்ளியின் தர நிர்ணயம் என்ன என்பது தொடங்கி, பள்ளி ஆண்டு தொடங்கியவுடன் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு வழங்க வேண்டும் என்பன போன்ற அனைத்து அம்சங்களும் குழந்தை பாதுகாப்புக் கொள்கையில் இடம்பெற்றிருக்கும். அதைத் தமிழ்நாட்டிலும் உறுதிப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்குத் தீங்கிழைத்தல் என்றால் என்ன என்கிற அடிப்படைப் புரிதல் அனைவருக்கும் இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், அந்தப் பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆகியோரை உள்ளடக்கிய ‘குழந்தைகள் பாதுகாப்புக் குழுக்கள்’ உருவாக்கப்பட வேண்டும்.
குழந்தைகள் தங்களுடைய கருத்துகளையும் பிரச்சினைகளையும் சொல்வதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு முன் ‘மாணவர் மனசு’ என்றொரு பெட்டி பள்ளிகளில் வைக்கப்பட்டது. அந்த முறை சரியாக இயங்கவில்லை. பல பள்ளிகளில் அந்தப் பெட்டிகளையே காணவில்லை என்று சொல்லப்படுகிறது.
அரசாணை 121, 2012இன்படி - பள்ளிகளில் ஏதாவது பாலியல் வன்முறை நிகழ்ந்தால், அந்த ஆசிரியரின் சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும். அத்துடன் பணிநீக்கமும் செய்யப்படுவார். இதுவரை எவர் மீதும் இந்த அரசாணையின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது, தமிழகப் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் இந்த ஆணையின் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். அதன்படி நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால்தான் இதுபோன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்கப்படும்.
பள்ளிகளில் குழந்தைநேய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும். குழந்தைகளுக்கான பாலினச் சமத்துவம் தொடர்பான, பாலின நீதி தொடர்பான வாழ்க்கைத்திறன் சார்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் உள்ள குழந்தை நேய அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளிக் கல்வித் துறை என்பது திறந்த மனதோடு குழந்தைகள் தொடர்புடைய மற்ற துறை நிபுணர்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.
பள்ளிக் கல்வித் துறை அவர்களுக்குள்ளேயே ஆலோசனை சொல்லிக்கொள்கிற அமைப்பாக இல்லாமல், மற்ற அமைப்பினரோடும் சேர்ந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் ‘குழந்தைநேயப் பள்ளி’ என்பதை உறுதிப்படுத்த முடியும். குழந்தைகளுக்கு இத்தகைய கொடுமைகள் நிகழும்போது ஆசிரியர் அமைப்புகள் எவ்விதக் குரலையும் எழுப்பாமல் மௌனமாக இருப்பது வருந்தத்தக்கது.
ஆசிரியர் அமைப்புகள் இது குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டும். ஆசிரியர்களுக்கு இது குறித்த விரிவான விளக்கத்தைக் கூற வேண்டும். ஆசிரியர் அமைப்புகள் அரசுடன் பேச வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு சமூகத்தில் உள்ள அனைவரது கடமை, இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் குரல்கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
- தொடர்புக்கு: thozhamai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT