Last Updated : 19 Feb, 2025 06:30 AM

1  

Published : 19 Feb 2025 06:30 AM
Last Updated : 19 Feb 2025 06:30 AM

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் | சொல்... பொருள்... தெளிவு

ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான சிறுவர், சிறுமியர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகக் குழந்தை நல அமைப்பான யுனிசெஃப் கூறுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்ச்சியாக அதிகரித்துவருகிறது.

இந்தியாவில் 2022இல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் 8.7% ஆக அதிகரித்துள்ளது; அந்த ஆண்டில் மட்டும் சுமார் 1,62,000 பாலியல் குற்றங்கள் பதிவானதாகத் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவிக்கிறது. குறிப்பாக, தமிழ்​நாட்டில் குழந்தை​களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்​தல்கள் அதிகரித்து​வருவது பொதுத்​தளத்தில் அதிர்​வலைகளை எற்படுத்​தி​யிருக்​கிறது.

தரவுகள் என்ன கூறுகின்றன? - உடல்ரீ​தியாக, மனரீதியாக, பாலியல்​ரீ​தியாக 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுரண்​டலுக்கு உள்ளாக்​கப்​படுவது குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் என வரையறுக்​கப்​படு​கிறது. குழந்தைகள் பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாகும் இடங்களைக் குறிப்​பிட்டுக் கூற முடியாது என்றாலும், வீடுகள், பள்ளிகள், குழந்தை பராமரிப்பு நிலையங்கள் போன்றவை குழந்தைகள் அதிகளவு பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாகும் இடங்களாக அறியப்​படு​கின்றன.

இந்தியாவில் குழந்தை​களுக்கு எதிரான குற்றங்​களில் 46% கடத்தல் தொடர்​பானவை. கடத்தலைத் தொடர்ந்து குழந்தைகள் அதிகம் பாதிக்​கப்​படும் குற்றச்​செய​லாகப் பாலியல் துன்புறுத்தல் உள்ளது. 69% குழந்தைகள் உடல்ரீ​தி​யாகப் பாதிப்பு​களுக்கு உள்ளாவ​தாக​வும், இதில் 48.7% குடும்ப உறுப்​பினர்​களாலும், 34% பிற நபர்களாலும் நிகழ்த்​தப்​படு​வ​தாகத் தமிழக அரசின் தரவுகள் சுட்டிக்​காட்டு​கின்றன.

பெண் குழந்தை​களில் 50.7% பேர் பாலியல் துன்புறுத்​தலினால் அதிகளவு பாதிக்​கப்​படு​கின்​றனர். இந்தியாவில் 2019 முதல் 2022 வரையிலான காலக்​கட்​டத்தில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் 96% வரை அதிகரித்​துள்ளது என ‘சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ’ (CRY) அமைப்பு குறிப்​பிடு​கிறது.

தென்னிந்தியா​வில்... 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக 50,935 வழக்குகள் பதிவு செய்யப்​பட்​டுள்ளன; இதில் நான்கில் ஒரு பங்கு (13,089 வழக்குகள்) தென்னிந்தியாவில் பதிவு செய்யப்​பட்​டுள்ளன. 2021இல் தேசியக் குற்ற​வியல் ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கை​யில், தென்னிந்திய மாநிலங்​களில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 2021இல் 24.47% அதிகரித்​துள்ள​தாக​வும், குழந்தை​களுக்கு எதிரான பாலியல் குற்றங்​களில் தென்னிந்திய மாநிலங்​களில் தமிழ்நாடு 4,465 வழக்கு​களுடன் முதலிடத்தில் இருப்​ப​தாகவும் தெரிவிக்​கப்​பட்​டுள்ளது.

தமிழ்​நாட்டைத் தொடர்ந்து, கர்நாடகம் (2,813), தெலங்கானா (2,698), கேரளம் (2,647), ஆந்திரம் (446) ஆகிய மாநிலங்கள் அடுத்​தடுத்த இடங்களில் உள்ளன. பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விழிப்பு​ணர்வு மக்களிடம் அதிகரித்​துள்ளதே வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்​திருப்​ப​தற்குக் காரணம் எனக் குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்​கின்​றனர். அதேவேளையில் வழக்குகளின் எண்ணிக்கை குழந்தைகள் பாதுகாப்பு சார்ந்த கேள்வியையும் எழுப்​பி​யுள்ளது.

இந்தியா​வில்... தேசிய அளவில், குழந்தைகள் மீதான பாலியல் குற்றச் செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் உத்தரப் பிரதேசம். சிறாருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் வழக்கு​களில் உத்தரப் ​பிரதேசம், மகாராஷ்டிரம், மத்தி​யப்​ பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 2010, 2021 ஆண்டு​களில் தொடர்ச்​சியாக முதல் மூன்று இடங்களில் உள்ளன.

2020ஆம் ஆண்டில் உத்தரப் ​பிரதேசத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 6,898 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 2021 இல் 6,970 வழக்குகள் பதிவு செய்யப்​பட்டன. மகாராஷ்டிரத்தில் 2020, 2021இல் பாலியல் துன்புறுத்தல் வழக்கு​களின் எண்ணிக்கை 6,116, 5,687 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 6,012, 5,648 ஆகவும் பதிவாகி​யுள்ளன.

போக்சோ சட்டம்: இந்தியாவில் குழந்தை​களின் நலனுக்காக நான்கு முக்கியச் சட்டங்கள் உள்ளன. அவை, குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் தடைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், போக்சோ சட்டம். இதில் போக்சோ சட்டம் (Protection of Children from Sexual Offences – POCSO), 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகளைப் பாலியல் துன்புறுத்​தல்​களி​லிருந்து பாதுகாக்க 2012இல் கொண்டு​வரப்​பட்டது. இதன்படி, குழந்தை மீது நிகழ்த்​தப்​படும் பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, குழந்தை​களின் ஒளிப்​படங்​களைப் பாலியல் பட நோக்கத்​துடன் சித்திரித்தல் போன்றவை கடுமையான குற்ற​ங்களாகக் கருதப்​படு​கின்றன.

போக்சோ வழக்கில் குற்றம்சாட்​டப்பட்ட நபருக்குத் தற்போது குறைந்​த​பட்சத் தண்டனையாக 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்​படு​கிறது. 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாகும்போது குறைந்​தபட்ச தண்டனைக் காலமானது 20 ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை​யாகவும் விதிக்​கப்​படலாம்.

இந்த நிலையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க வகை செய்யும் 2 சட்ட மசோதாக்கள் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சிக்கல்கள்: பாலியல் வன்கொடுமை வழக்குகள், போக்சோ வழக்கு​களின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில், விரைவு சிறப்பு நீதிமன்​றங் களை 2019 அக்டோபரில் மத்திய அரசு அறிமுகப்​படுத்​தியது. அதன்படி, போக்சோ வழக்கில் சிறப்பு நீதிமன்றம் குற்றத்தை விசாரணைக்கு எடுத்​துக்​கொண்ட 30 நாள்களுக்குள் குழந்​தையின் சாட்சி​யங்கள் பதிவுசெய்​யப்பட வேண்டும், சிறப்பு நீதிமன்றம் குற்றத்தை விசாரணைக்கு எடுத்​துக்​கொண்ட நாளிலிருந்து ஒரு வருட காலத்​துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என வலியுறுத்​தப்​பட்டது. ஆனால், இந்தியச் சட்ட அமைப்பில் நிலவும் சிக்கல் காரணமாக வழக்கு விசாரணை முடிவதில் தாமதம் ஏற்படு​கிறது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு​களில் சாட்சி​யங்​களைப் பாதுகாப்​பதில் தொடர்ந்து குறைபாடுகள் நீடிக்​கின்றன. ஒரு குழந்தை பாலியல் துன்புறுத்​தலுக்கு உள்ளாக்கப்படும்​போது, பாதிக்​கப்பட்ட குழந்​தை​யிடம் மீண்டும் மீண்டும் நடத்தப்​படும் விசாரணைகள், அக்குழந்தைக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்து​வ​தாகக் குழந்தை நல ஆர்வலர்கள் தெரிவிக்​கின்​றனர்.

தீர்வுகள்: பாலியல் துன்புறுத்​தல்​களைத் தடுக்கக் குழந்தை​களுக்கு முதல் படியாக, சரியான தொடுதல் (Good touch), தவறான தொடுதல் (bad touch), பாதுகாப்பான தொடுதல் (safe touch), பாதுகாப்பற்ற தொடுதல் (unsafe touch) குறித்துப் பள்ளி​களிலும் வீடுகளிலும் கற்பிக்​கப்பட வேண்டும். குழந்தை​களிடம் யாராவது அத்துமீற முயன்​றால், அதிலிருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு முறையான ‘No-Go-Tell’ வழிமுறையைப் பின்பற்ற பயிற்சி அளிக்க வேண்டும்.

அதன்படி யாரவது குழந்தை​களைத் தொட முயன்றால் முதல் எதிர்​வினையாக, தொட வேண்டாம் (No) எனச் சத்தம் எழுப்ப வேண்டும், அங்கிருந்து எப்படி வெளியேறுவது என (Go) குழந்தைகள் சிந்திக்க வேண்டும்; இறுதியாகக் குழந்தைகள் யாரை நம்பு​கிறார்களோ அவர்களிடம் நடந்ததைக் கூறி (Tell) உதவியைப் பெறலாம்.

குழந்தை​களுக்கான ‘ஹெல்ப்​லைன்’ எண்ணான 1098ஐத் தொடர்​பு​கொண்டு புகார் தெரிவிக்​கலாம். அனைத்து வகையான பாலியல் வன்முறை​களி​லிருந்தும் குழந்தை​களைப் பாதுகாக்கச் சட்டங்கள், வரைமுறைகளை அரசு வலுப்​படுத்த வேண்டும். குழந்தை​களுக்காக அரசு அறிவித்​துள்ள ஹெல்ப்லைன் 1098 போன்றவை முறையாகச் செயல்​படு​கின்றனவா எனக் கண்​காணிக்க வேண்​டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x