Published : 17 Feb 2025 08:57 AM
Last Updated : 17 Feb 2025 08:57 AM
புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் 13 மற்றும் 14வது நடைமேடைகளில் உள்ள ரயில்களின் தாமதத்தால் கூட்டம் நிரம்பி வழிந்துள்ளது. கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகள் 12வது நடைமேடையில் அளவுக்கு அதிகமாக குவிந்துள்ளனர்.
பிரயாக்ராஜ் செல்லும் ரயில் 16வது நடைமேடைக்கு வரும் என்று கடைசி நேரத்தில் வெளியான அறிவிப்பால் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு, ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்துள்ள 13, 14வது நடைமேடைகளைக் கடந்து சென்றபோது பெரும் குழப்பம் ஏற்பட்டு உயிர்ச்சேதத்திற்கு வழிவகுத்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் அளிக்கும் வசதிக்கும், மக்களின் தேவைக்கும் இடையிலுள்ள இடைவெளி தான் இந்த கூட்ட நெரிசல். டெல்லி ரயில் நிலையத்தில் அதிகப்படியான மக்கள் குவிந்துள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 1,500முன்பதிவில்லா டிக்கெட்டுகளை கவுன்டர்களில் விநியோகித்துள்ளனர்.
இந்தளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகும்போதே உயரதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு மக்களின் தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. இப்படியொரு அசம்பாவித சம்பவம் நடந்தபிறகு இரவு 10 மணிக்கு மேல் 4 சிறப்பு ரயில்களை பிரயாக்ராஜூக்கு இயக்கி கூட்டத்தை வெளியேற்றியுள்ளனர். இதை முன்பே செய்திருந்தால், 4 குழந்தைகள் உள்ளிட்ட 18 உயிர்களை பலி கொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.
நம் அரசு நிர்வாகமும், அதிகாரிகளும் இன்னும் விழிப்படையவில்லை என்பதையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் கடந்த மாதம் 30 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜூலை மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் போலே பாபா பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்தனர். இவை வெறும் எச்சரிக்கை மணிமட்டுமே. இதுபோன்ற சம்பவங்களில் இருந்து என்ன பாடங்களை நாம் கற்றுக் கொள்கிறோம் என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி.
நாட்டின் மக்கள்தொகை 142 கோடியை எட்டி, உலகின் மிகப்பெரிய ஜன நெருக்கடியான நாடாக இந்தியா மாறியுள்ளது. அதற்கேற்க நமது சிந்தனையும், செயல்பாடுகளும் மாற வேண்டும். 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டமைப்புகள், செயல்பாடுகள் இன்றைய காலகட்டத்திற்கு பொருந்தாது. நாட்டின் மிகப்பெரும் போக்குவரத்து வசதியாக உள்ள ரயில்வே நிர்வாகம் மக்கள் தொகை பெருக்கத்தைக் கணக்கில் கொண்டு அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் வசதிகளை உருவாக்க வேண்டும்.
மக்களின் தேவைகளுக்கு ஏற்ப ரயில் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும். நடைமேடைகள், படிக்கட்டுகள், போக்குவரத்து வசதிகள், அவசர கால வசதிகள், அடிப்படை கட்டுமானங்கள் என அனைத்திலும் 142 கோடி எண்ணிக்கையை மனதில் நிலைநிறுத்தி பிரமாண்டமாக உருவாக்க வேண்டும். அதேபோன்று, மக்கள் கூட்டம் எங்கு, எப்படி குவியும் என்பது காவல்துறைக்கு தெரியாததல்ல. முக்கிய நிகழ்வுகளின்போது மக்கள் கூடும் இடங்களில் கூட்டத்தின் அளவைக் கணித்து,அரசு நிர்வாகத்துடன் இணைந்து கூட்டத்தை ஒழுங்குபடுத்து வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதும் காவல்துறை யின் கடமை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT