Published : 14 Feb 2025 06:15 AM
Last Updated : 14 Feb 2025 06:15 AM
உலகின் பழமையான நாகரிகம் சிந்துவெளியில் நிலவியது என இந்தியத் தொல்லியல் கழகத்தின் அப்போதைய தலைமை இயக்குநர் சர் ஜான் மார்ஷல் அறிவித்ததன் நூற்றாண்டு விழாவை அண்மையில் தமிழக அரசு கொண்டாடியது.
இந்த நிலையில், சிந்துவெளிப் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளைக் கொண்டுள்ள கீழடி குறித்த அறிதல்கள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. கீழடி அகழாய்வில் முதல் இரண்டு கட்டங்களுக்குத் தலைமையேற்ற கே.அமர்நாத் ராமகிருஷ்ணன், தற்போது இந்தியத் தொல்லியல் துறையின் தொல்லியல் பிரிவின் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். அவரைச் சந்தித்தோம்.
கீழடிக் கண்டுபிடிப்புகள் தமிழரின் வரலாறு குறித்த உரையாடலில் பெரும் மலர்ச்சியை ஏற்படுத்தின. அடுத்த கட்டமாக நாம் செய்ய வேண்டியது என்ன? - நமது தேடலைக் கீழடியோடு மட்டும் நிறுத்திவிடக் கூடாது. வைகை ஆற்றங்கரையில் 293 ஆய்விடங்கள் உள்ளன. ஆய்வை இன்னும் விரிவுபடுத்த வேண்டும். எல்லை வகுக்கும்போது ஹரப்பாவும் மொகஞ்சதாரோவும் பாகிஸ்தானுக்குப் போய்விட்ட காரணத்தால்தான், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளைத் தேடி இந்தியாவுக்குள் நமது ஆய்வுகள் தொடர்ந்தன.
தோலவிரா, காளிபங்கன், ரோபர், லோத்தல் போன்ற இடங்களைக் கண்டறிய முடிந்தது. மொகஞ்சதாரோவையும் குஜராத்தில் உள்ள தோலவிராவையும் ஒப்பிட முடிவதுபோல, கீழடி ஆய்விலும் சாத்தியங்கள் உள்ளன. அவ்வாறு ஒப்பிடும்போதுதான் கீழடியில் கண்டறியப்பட்ட நாகரிகம் எவ்வளவு பரந்து விரிந்திருந்தது எனத் தெரியும்.
கீழடி ஆய்வறிக்கையை நீங்கள் அரசுக்கு அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகியும் அது வெளியிடப்படவில்லையே? குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் வெளியிட வேண்டும் என ஏதேனும் நடைமுறை உள்ளதா? - ஆய்வறிக்கையை வெளியிடக் காலக்கெடு ஏதும் இல்லை. ஆனால், நான் அனுப்பியுள்ள அறிக்கை, தகுதி அறிதலுக்கு (vetting) உட்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. இந்த வழக்கம் இதற்கு முன் இருந்ததில்லை. ஒருகாலத்தில் அறிக்கையில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை ஏதேனும் இருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். தகுதி அறிதல் என்கிற சொல்லே பயன்படுத்தப்பட்டதில்லை.
அறிக்கை குறித்து யாரும் விமர்சனம் செய்யலாம். அதைப் பற்றித் தெரியாத இன்னொருவர் தகுதி அறிதல் செய்ய முடியாது. அயோத்தியா அகழாய்வுகளைப் பார்த்துவரச் சொன்னால் என்னால் செய்ய முடியாது. காரணம், அங்கு நான் ஆய்வு செய்ததில்லை. தென்னிந்தியாவில் ஆய்வு செய்தவர்கள்தான் கீழடி ஆய்வறிக்கையைப் படிக்க முடியும். இல்லையெனில், தவறாகத்தான் முடிவெடுக்கப்படும்.
என்னுடைய கடமையை முடித்துவிட்டேன். அது எப்படிக் கண்டறியப்பட்டது, நாங்கள் என்னென்ன செய்தோம், என்னென்ன பொருள்கள் கிடைத்தன, அங்குள்ள மண் அடுக்குகள் மூலம் தொன்மை எவ்வாறு கணக்கிடப்பட்டது என்பது உள்பட அனைத்துத் தகவல்களும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நகர நாகரிகம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன என்பதுதான் ஆய்வின் அடிப்படைச் செய்தி. அறிவியல்முறைப்படி அடையப்பட்ட முடிவை மாற்ற யாருக்கும் உரிமை இல்லை.
கீழடிக் கண்டுபிடிப்புகள் குறித்துத் தேசிய அளவிலான ஆய்வாளர்களின் பார்வை என்ன? - கீழடி ஆய்வின்போது தேவகி நந்தன் டெமினி, ஜமால் ஹசன் ஆகிய இந்தியத் தொல்லியல் துறை இயக்குநர்கள் வந்து பார்த்து எங்களைப் பாராட்டினார்கள். பழங்கால நகர வாழ்விடம் தமிழ்நாட்டில் கண்டறியப்பட வாய்ப்பு இல்லை என்றே பலர் கருதியிருந்தனர். வட இந்தியாவில்தான் இப்படிப்பட்ட இடம் இருக்கும் என்கிற கருத்தை கீழடி ஆய்வு மாற்றியமைத்தது. தேடினால்தானே இதெல்லாம் தெரியவரும்? பல ஆய்வாளர்கள் கீழடியை வந்து பார்க்கவில்லை. ஆய்வறிக்கையும் இன்னும் வெளியாகவில்லை. இந்த இரண்டும் நிகழாமல் அவர்களால் கருத்துக் கூற முடியாது.
கீழடி ஆய்விலிருந்து மாற்றப்பட்ட பின்னர் நீங்கள் செய்த பணிகள் என்னென்ன? - அசாம் மாநிலத்தில் நினைவுச்சின்னங்களுக்கான பராமரிப்பு (maintenance) பிரிவுக்கு நான் நியமிக்கப்பட்டேன். அடுத்ததாக, கோவாவிலும் அதே வகைப் பணிதான். அங்குள்ள பழமையான தேவாலயங்களை, நினைவுச்சின்னங்களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டேன். அங்கிருந்து, தென்னிந்தியக் கோயில்கள் பற்றிய ஆய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டபோது, வரலாற்றில் அவ்வளவாக அறியப்படாத கோயில்கள் எப்படிக் கட்டப்பட்டன என்பதை அறியும் பணியைத் தேர்வுசெய்தேன்.
பொதுவாக, மகேந்திரவர்மன் கல்வெட்டுச் செய்திகளின் அடிப்படையில், பல்லவர் காலத்தில்தான் கோயில் கட்டுமானம் வளர்ச்சி அடைந்தது எனக் கருதப்படுகிறது. அதற்கு முன்பும் கோயில் கட்டுமானம் வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்திருக்கலாம். அதற்கான தடயங்களைச் சேகரிப்பதற்கான ஆய்வைத் தொடங்கினேன். அந்த ஆய்வை ஓராண்டுகூடச் செய்ய முடியவில்லை. அதற்குள் டெல்லிக்கு அழைத்துக்கொள்ளப்பட்டேன்.
கீழடியிலிருந்து நீங்கள் மாற்றப்பட்டதை அடுத்து, ஆய்வில் உங்கள் பங்களிப்பு தொடர வலியுறுத்தி நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதற்கு முன்னர், ஒரு தொல்லியல் ஆய்வாளருக்காக வழக்கு போடப்பட்டிருக்கிறதா? - அதுதான் முதல் முறை. இதுபோன்ற தகவல்கள் ஊடகங்களுக்கே முன்பு வராது. அகழாய்வு நடத்தியவர் யார் என்பது உள்பட எந்தச் செய்தியும் வெளியே தெரியாது. கீழடி குறித்த தரவுகளைப் பத்திரிகையாளர்கள் வெளியே கொண்டுசென்றதால்தான் இன்று அவை பிழைத்திருக்கின்றன.
அதனால்தான் ஜான் மார்ஷல், சிந்துவெளி ஆய்வு குறித்த கண்டறிதலை முதலில் செய்தித்தாளில் வெளியிடச் செய்தார். பின்னர்தான் அறிக்கை தாக்கல் செய்தார். செய்தி முதலில் மக்களிடம் போய்ச் சேரட்டும் என அவர் கருதினார். மக்கள் ஆயிரம் கேள்விகளை முன்வைப்பார்கள். நாம் பதில் சொல்லத் தொடங்குவோம். அதன் பின்னர்தான் மக்களுக்குத் தேடல் அதிகரிக்கும். சிந்தனை வளரும்.
சில நூறு ஆண்டுகளே தொன்மை கொண்டதாக இருப்பினும், தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அமெரிக்கா போன்ற நாடுகள் அதிகக் கவனம் செலுத்துகின்றனவே? - அமெரிக்கா போன்ற நாடுகளில் எல்லாத் துறைகளும் கூட்டாகச் செயல்படுகின்றன. நாம் தனித்தனியாகச் செயல்படுகிறோம். நம் நாட்டில் மரபணுவியல் ஆய்வு தனியாக நடைபெறும். தாவரத் தொல்படிமங்கள் குறித்த ஆய்வு இன்னொரு பக்கம் நடக்கும்.
மானுடவியல், வரலாற்று ஆய்வுகள் போன்றவையும் இப்படித்தான். அமெரிக்காவில் தொல்லியலோடு பிற துறைகளும் இணைந்து செயல்படுவதால், அந்நாட்டு ஆய்வாளர்களுக்கு எளிதாக வெற்றி கிடைக்கிறது. இங்கு ஆய்வில் ஒவ்வொரு துறை சார்ந்த தகவலையும் இணைத்துப் புரிந்துகொள்வதற்குள் ஆய்வாளரின் ஆற்றல் விரயமாகிவிடுகிறது.
நீண்ட வரலாறு கொண்ட சமூகம் என்கிற பெருமிதத்தைக் கடந்து நாம் செய்ய வேண்டியது என்ன? - ஆய்வு முடிவுகள், அதனால் உருவாகும் பெருமிதம் ஆகியவற்றின் பின்னணியில் இன்றைய நிலையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் எப்படி வந்தோம், எப்படி இருக்கிறோம் என்பதைத்தான் வரலாறு கூறுகிறது. நமது பாடத்திட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் குறித்து தொடக்க காலச் செய்திகள்தான் உள்ளன. அந்த நிலை மாற வேண்டும்.
- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT