Published : 11 Feb 2025 07:37 AM
Last Updated : 11 Feb 2025 07:37 AM
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான இளம்பெண் பரினிதா ஜெயின், விதிஷா மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியொன்றில் நடனமாடிக் கொண்டிருந்தபோது, மேடையிலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்ணின் 12 வயது தம்பியும் சமீபத்தில் இதயக் கோளாறால் உயிரிழந்திருப்பது மேலும் திகைப்பூட்டும் தகவலாக அமைந்துள்ளது.
அதேபோன்று, சில தினங்களுக்கு முன் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நண்பர்கள் கிரிக்கெட்டில் வெற்றிபெற்றதை கொண்டாட நடனமாடிய 25 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதயக் கோளாறு பாதிப்புகள் இருந்தநிலையில், சமீபகாலமாக 20, 30-களில் உள்ள இளம் பருவத்தினர் பலர் இதயக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் போடப்பட்ட தடுப்பூசியின் பின்விளைவே இது என்ற கருத்தை ஒரு சிலர் பரப்பி, அதற்கு மத்திய அரசே பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் 95 சதவீதம் பேர் ஒருமுறையும், 88 சதவீதம் பேர் இரண்டு முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், தடுப்பூசி குறித்த சந்தேகம் நாட்டு மக்கள் மத்தியில் பரவலாக எழுந்ததில் ஆச்சர்யமில்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இதுகுறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு சமீபகாலமாக ஏற்படும் இதயக் கோளாறுகளுக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இன்னும் சொல்லப் போனால், தடுப்பூசியால் தான் 42 லட்சம் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்களின் பரம்பரை ஆரோக்கிய நிலை, தனிப்பட்ட வாழ்க்கை முறை, புகையிலை பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல் போன்ற பழக்கவழக்கங்களே அதிகமான இதயக் கோளாறு மற்றும் அதையடுத்து நடைபெறும் மரணங்களுக்கு காரணம் என்று வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மருத்துவ நிபுணர்களும் விளக்கமளித்து வருகின்றனர்.
நிபுணர்களின் கருத்து ஏற்புடையதாக இருந்தாலும், மருத்துவர்கள் சொல்லும் காரணங்கள் நடுத்தர வயதுடையவர்கள் மற்றும் முறையற்ற உணவு, தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டவர்களுக்கு பொருத்தமானதாக இருக்கும். ஆனால், 20 வயதை ஒட்டியுள்ள இளம் பருவத்தினர், நல்ல திடகாத்திரமான தோற்றத்தில் இருப்பவர்கள், பாடலுக்கு மேடையில் நடனமாடும் அளவுக்கு ஆரோக்கியமாக இருப்பவர்கள், உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு திடீரென இதயக் கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது என்பது எங்கோ தவறு நடக்கிறது என்பதையே உணர்த்துகிறது.
தடுப்பூசி காரணமல்ல என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் நிரூபிக்கப்பட்டு விட்டாலும், இதுபோன்ற இளம் வயதினரின் திடீர் மரணங்கள் குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ நிபுணர்களும், சுகாதாரம் தொடர்பான ஆய்வு அமைப்புகளும் கூடுதல் அக்கறை எடுத்து சரியான காரணத்தைக் கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT