Published : 10 Feb 2025 07:03 AM
Last Updated : 10 Feb 2025 07:03 AM
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்டாலும் தேர்தல் களத்தில் பெரியார், பிரபாகரன், திராவிடம் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்த விமர்சனங்கள் இன்னமும் சூடான விவாதத்தில் இருக்கின்றன. இந்நிலையில், அரசியலாளரும் பிரபாகரனுக்கு நன்கு பரிச்சயமானவரும் ‘கதைச் சொல்லி’ ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.
பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
1978 முதல் 1980 வரை இலங்கைக்கும் தமிழகத்துக்கும் போக வர இருந்தார் பிரபாகரன். 1981 முதல் 1987-ல் இலங்கை - இந்தியா ஒப்பந்தம் ஏற்படும் வரை தமிழகத்தில் இருந்தார். தமிழகத்தில் நான், நெடுமாறன் உள்பட நான்கைந்து பேர்தான் பிரபாகரனுக்கு அறிமுகமாகியிருந்தோம். தன்னுடைய போராட்ட உத்திகள், வாழ்க்கை முறையைப் பற்றியெல்லாம் தினசரி அவர் என்னோடு பேசியதுண்டு. 10 ஆண்டுகாலம் அவருடன் பழக்கவழக்கம் உண்டு. பிறகு நானும் வவுனியாவுக்கு சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் பெரியார் பற்றி பிரபாகரன் பேசியதில்லை. எதிர்வினையாற்றியதில்லை. எம்ஜிஆரை மலை போல் நம்பினார். அவர் திராவிட இயக்கத்தின் தலைவர்தானே. மு.கருணாநிதியை எனது திருமணத்தில் சந்தித்துப் பேசினார்.
எனக்குத் தெரிந்து திராவிட இயக்கங்கள் பற்றியோ அதன் தலைவர்கள் பற்றியோ பிரபாகரன் குறை சொல்லி எதுவும் பேசியதில்லை. ஆனைமுத்து தொகுத்து எழுதிய ‘பெரியார் சிந்தனைகள்’ பற்றிய 3 தொகுதிகளை பிரபாகரன் வாங்கிச் சென்றார். பிரபாகரன் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது, அப்போராட்டத்தை கி.வீரமணிதான் பழச்சாறு கொடுத்து முடித்து வைத்தார். திராவிட தலைவர்களோடு முரண் இருந்தால், கி.வீரமணி வேண்டாம் என்று சொல்லியிருப்பார் அல்லவா? கோவை ராமகிருஷ்ணன், கொளத்தூர் மணி போன்ற பெரியாரிஸ்டுகளும் அவரோடு நெருக்கமாகத்தான் இருந்தனர்.
பெரியாரை சரமாரியாக சீமான் விமர்சிக்கும் நிலையில், அதற்கு திராவிட இயக்கங்கள் சரியாக எதிர்வினையாற்றியதாக நினைக்கிறீர்களா?
எதிர்வினை எங்கே ஆற்றினார்கள்? அங்குதான் (திமுக) தகுதியான ஆட்களை வைத்துக் கொள்ளமாட்டார்களே. தகுதிதான் அங்கு தடை. நானும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டவன்தானே. இப்போது திமுக-வில் இருப்பவர்களுக்கு திமுக-வின் வரலாறு தெரியுமா? திராவிடம் என்று பெயர் வைத்தவர்கள் யாரென்று இவர்களுக்குத் தெரியுமா? இந்து மதம் சம்பந்தப்பட்டவர்கள் வைத்த பெயர்தான் திராவிடம். இதைச் சொல்லக்கூடியவர்கள் இன்று திமுக-வில் யார் இருக்கிறார்கள்? இன்றைய திமுக-வில் சிந்தனையாளர்களுக்கு வேலை இல்லை. திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எங்களைப் போன்றவர்கள் முட்டு கொடுக்க வேண்டும்.
திமுகவை எதிர் முகாமிலிருந்து திட்டிக் கொண்டிந்தவர்கள், திமுக ஆளுங்கட்சியான பிறகு இந்திரனே, சந்திரனே என்று பேசுகிறார்கள். இதெல்லாம் என்ன நியாயம் என்றுதான் தெரியவில்லை. அதனால்தான் இன்று யார் வேண்டுமானாலும் திராவிட இயக்கங்களைப் பற்றி பேசலாம் என்றாகிவிட்டது. தகுதியானவர்கள் இருந்திருந்தால் சரியாக எதிர்வினையாற்றியிருப்பார்கள். ஒரு காலத்தில் அற்புதமாகப் பேசக்கூடிய தலைவர்கள் திமுக-வில் இருந்தார்கள். இன்றோ ஓட்டுக்கு காசு, லஞ்சம் வாங்குபவர், தொடர்ந்து எம்எல்ஏ, வெள்ளை வேட்டி, சட்டை அணிந்துகொண்டு பெரிய காரில் முரட்டுத்தனமாக ஹாரன் அடிப்பவர்கள் இருந்தால் போதும் என்றாகிவிட்டது. இதுதான் இன்றைய திமுக நிலை. அதனால்தான் மாற்று அரசியல் வேண்டும் என்று நினைக்கிறோம்.
நீங்கள், நெடுமாறன் போன்றவர்கள் பிரபாகரனுடனும் நெருக்கமாக இருந்தவர்கள். சீமான் பேசும் விஷயங்களில் உள்ள உண்மை தன்மை உங்களுக்குத் தெரிந்திருக்குமே..?
அவர் (சீமான்) அங்கு (இலங்கை) இருந்ததே சில நிமிடங்கள்தான். மகேந்திரன் உள்ளிட்ட இயக்குநர்கள் பிரபாகரனை சந்திக்கச் சென்றார்கள் அல்லவா? அந்த அணியில் இருந்தவர்தான் சீமான். ஒரு 5 - 10 நிமிடங்கள்தான் அவர் பிரபாகரனைச் சந்தித்திருப்பார். தமிழகத்தில் பிரபாகரனை யாருமே அறியாதவர்கள் போல் சீமான் பேசுகிறார். தமிழ்நாட்டில் முன்பைப் போல நாகரிக அரசியல் இல்லை. முன்பு கண்ணியம் இருந்தது. பிரபாகரனை பார்க்காத ஆட்கள் எல்லாம் அவரைப் பற்றி இணையத்தில் எழுதுகிறார்கள். நாம் ஏதும் மறுத்துப் பேசினால் ஆபாசமாக, கீழ்தரமாக விமர்சிக்கிறார்கள். ஒருவர் சொன்னதை இட்டுக் கட்டி 100 பேர் பேசினால், அது உண்மையாகிவிடுகிறது. இதற்கெல்லாம் அஞ்சியே நாங்கள் அமைதியாக இருக்கிறோம்.
இலங்கையின் தமிழ் தேசியம் வேறு. அதை தமிழ்நாட்டில் பின்பற்ற முடியாது என்று ஈழத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் சொல்கிறார்கள். பிரபாகரனின் தமிழ்த் தேசியம் என்றுதானே சீமான் இங்கு பேசுகிறார். அதுபற்றி உங்கள் பார்வை?
தமிழ்த் தேசியம் எந்தக் கோட்பாட்டில் இயங்க வேண்டும் என்கிற கர்த்தாவை உருவாக்கியவர்கள் வள்ளலார், மறைமலையடிகள், திரு.வி.க. நாவலர் சோமசுந்தர பாரதி ஆகியோர்தான், 1930-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற சோமசுந்தர பாரதி நடைபயணமாக சென்னை பொதுக் கூட்டத்துக்கு வந்தார். அந்தக் கூட்டத்துக்கு நீலாம்பரி அம்மையார் தலைமை தாங்கினார். பெரியாரும் அந்தக் கூட்டத்துக்கு வந்தார். அந்தக் கூட்டத்தில்தான் பெரியார் என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் இருக்கின்றன. பல்வேறு மொழிகள், மாறுபட்ட சீதோஷ்ண நிலைகள், மாறுபட்ட பழக்கவழக்கங்கள், கலாசாரங்கள் இருக்கின்றன. தமிழ் கலாச்சாரம், தமிழர்களின் தேசிய தன்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியாவில் தமிழ்த் தேசியம் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கையில் சிங்களம், தமிழ் என இரண்டே இனங்கள்தான். தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதாக ஒன்பது ஒப்பந்தங்களை பல்வேறு சிங்கள அரசுகள் போட்டன. தமிழ் அடையாளம், கலாசாரம், சம உரிமைகள் பாதிக்கப்படாமல் காப்போம் என்று சொன்னார்கள். ஆனால், இவையெல்லாம் நிறைவேற்றப்படவில்லை. பிறகுதான் வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா தலைமையில் தமிழரசு கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இனி சிங்களர்களோடு வாழ முடியாது.
நாம் ஒரு தனி தேசிய இனம். தனி நாடு, தனி வாழ்வு இவற்றை முன்னிறுத்த வேண்டும் என்று சொல்லித்தான் இலங்கையில் தமிழ்த் தேசியம் முன்னெடுக்கப்பட்டது. இதனாலேயே ஈழ மக்களின் ஆதரவுடன் தேர்தலில் தமிழரசுக் கட்சி 18 எம்பிக்களைப் பெற்றது. அங்கிருக்கும் தமிழ்த் தேசியம் வேறு. இங்கிருக்கும் தமிழ்த் தேசியம் வேறு. அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்த் தேசியமும் திராவிடமும் எங்களுக்கு இரண்டு கண்கள் என்று விஜய் சொல்கிறார். அது இரண்டும் வேறு வேறு என்கிறாரே சீமான்..?
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றோடொன்று பிணைந்துதான் செல்கிறது. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியம் பேசியவர்கள் பெரியாருடன் மாறுபட்டு நிற்கவில்லை.
சில நேரத்தில் உங்களுடைய பதிவுகள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்று தெரிகிறது. நீண்ட காலமாக அரசியலில் இருக்கிறீர்கள். விஜய்யின் அரசியல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
தமிழ் நாட்டில் ஒரு மாற்று அரசியலை கொண்டு வர வேண்டும் என திமுக-வை உருவாக்கி ஊர் ஊராகச் சென்று, பொதுக்கூட்டங்களில் பேசி 15 ஆண்டுகளில் திமுக-வை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர் அண்ணா. 60 ஆண்டுகளுக்குப் பிறகு பல பிழைகளும் தவறுகளும் மக்கள் விரோத செயல்பாடுகளும் இந்த இயக்கத்தில் தெரிகின்றன. இப்போது ஒரு மாற்று அரசியல் தேவை. தமிழ்த் தேசியமும் திராவிடத்தையும் ஒன்று கலந்து எடுத்துச் செல்வேன் என்று விஜய் சொல்கிறார். இதில் எந்தப் பிழையும் இல்லை. மாற்று அரசியலுக்காக விஜய் வரவேண்டும். அவருக்கு வாழ்த்துகள்.
கடந்த காலங்களில் திமுக - மதிமுக என மாறியிருக்கிறீர்கள். உங்களை மீண்டும் திமுக அழைத்தால் செல்வீர்களா?
என்னை அழைக்கமாட்டார்கள். அதற்கு நான் தயாரும் இல்லை. மதிமுக என்கிற இயக்கத்தின் நிறுவன தலைவர்களில் நானும் ஒருவன். வைகோ எனக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், அந்த இயக்கத்தை கட்டமைக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தெரியும். என் இளமை, என் காலம், வழக்கறிஞர் தொழில் ஆகியவற்றை இழந்துதான் வைகோவுக்கு உறுதுணையாக இருந்தேன். நான் எல்லா அரசியலையும் பார்த்துவிட்டேன். ஏதாவது ஒரு கட்சியில் இருந்தால் என்னால் ஒரு நியாயத்தை எழுத முடியுமா? எனக்குப் படிப்பதற்கும் எழுதுவதற்குமே நேரம் இல்லை. நான் எப்போதும் மனதில் பட்டதை பேசுபவன். காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் இருக்கிறேன். என் அரசியல் அனுபவ வயது இல்லாதவர்களிடம் இன்று என்னால் எப்படி கூழைக் கும்பிடு போட முடியும்?
இன்னும் ஒரு சில மாதங்களில் பிரபாகரனும் பொட்டு அம்மானும் வர இருக்கிறார்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருந்தீர்கள். பிரபாகரன் குறித்து அவ்வப்போது வரும் தகவல்கள் போன்றதுதானா இது?
எனக்கும் நெடுமாறனுக்கும் விடுதலைப் புலிகள் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும். அதற்காக, முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலையை நாங்கள் நியாயப்படுத்தவில்லை. இந்தப் படுகொலையை அவர்கள் (விடுதலைப் புலிகள்) செய்யவில்லை என்று நாங்கள் சொல்லி வருகிறோம். விடுதலைப் புலிகளும் இதை அன்றே மறுத்துவிட்டார்கள். இலங்கையில் உள்ள மக்கள் ஒரு குடையின் கீழ் வர வேண்டுமென்றால் பிரபாகரன் வந்தால்தான் வருவார்கள். நிச்சயம் பிரபாகரன் வருவார். அதற்கான தடைகள் இந்தியாவில் இருக்கிறது. அப்படி வரும்போது பிரதமர் மோடிக்குதான் பிரபாகரன் கடிதம் எழுதுவார்.
திருப்பரங்குன்றம் மலையை வைத்து நடைபெறும் சர்ச்சைகளைத் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவராக எப்படி பார்க்கிறீர்கள்?
திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பாஜக-வைச் சேர்ந்தவர்கள் அல்ல. இந்து அமைப்புகளுக்கு தமிழகத்தில் இவ்வளவு பெரிய செல்வாக்கா இருக்கிறது? அது தானாகக் கூடிய கூட்டம். ஒரு மணி நேரத்தில் இவ்வளவு கூட்டம் என்றால், பாஜக தலைவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கூட்டி வந்த கூட்டமா?
பாஜக-வுக்காக இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அவர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டுமே. இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். தங்களுக்காக அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கூடியிருக்கிறார்கள். திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த இந்துக்களும் இதில் பங்கேற்றிருப்பார்கள். இந்துக்களுக்கு விழிப்புணர்வு இருக்கிறது என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். மதுரா விஜயம், கம்பணன் நூல்களைப் படித்தால் திருப்பரங்குன்றம் பற்றிய புரிதல் ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT