Published : 09 Feb 2025 09:51 AM
Last Updated : 09 Feb 2025 09:51 AM
ஓவியர் மோனிகா, சென்னைக் கவின்கலை கல்லூரியிலும் பரோடா கவின் கலைக் கல்லூரியிலும் ஓவியம் பயின்றவர். இந்தியாவுக்கு வெளியே பிரான்ஸ், அமெரிக்காவில் ஓவியங்களைக் காட்சிப்படுத்தியுள்ளார். ‘இந்திய ஓவிய உன்னதங் கள்’ (எதிர் வெளியீடு) என்கிற தலைப்பில் இந்திய ஓவியக் கலை ஆளுமைகள் குறித்து ஒரு நூலை எழுதியுள்ளார்.
மோனிகாவின் ஓவியங்களில் யானை பிரதான அம்சமாக இருக்கிறது. யானை, பெரிய உருவத்தை யும் அந்த உருவத்துக்கு நேர் எதிரான வெள்ளந்தித்தனத்தையும் கொண்டது. இந்த முரண் யானையின் வசீகரங்களில் ஒன்று. குழந்தைகளுக்கு யானை பிடித்துப் போவதற்கு இந்த முரணான வசீகரம்தான் காரணம் எனலாம். மோனிகாவின் சிறுவயதில் அவரது தெருவில் பார்த்த கடைகளைவிட உயரமான யானையின் உருவம் ஒரு அகலாத சித்திரமாக அவர் மனத்தில் உருக்கொண்டிருக்கிறது. “அந்த யானை தெருவுக்கே சந்தோஷத்தைக் கொண்டு வரும்” என்று மோனிகா அந்த நினைவை அசைபோடுகிறார். அந்த யானை மோனிகாவின் ஓவியத்தில் நேரடியாகவும் மறைபொருளாகவும் இன்றும் அசைந்து கொண்டிருக்கிறது.
மோனிகா வின் சிறுவயது அனுவத்தை ‘யானை நகரத்திற்கு வருகிறது ஒவியத்தில் காண முடிகிறது. ஆனால், வெளிப்படையாகப் பார்க்கும்போது யானையின் நகர விஜயமாக இருக்கும் இந்த ஒவியம், உள்ளே ஒரு உருவகமாகத் தொழிற்படுகிறது. இந்த உருவகத்திற்குள் அலைக்கழியும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் வாழ்க்கையையும் பொருத்திப் பார்க்கலாம். ‘சரித்திரத்தின் சுமை’ ஓவியத்திலும் ஒரு யானை வருகிறது. அது பார்ப்பதற்கு அழகான நம் சரித்திரப் பெருமையைச் சித்தரிக்கிறது. ஆனால், அது எப்படி சாதி, வர்க்கப் பிரிவினை என உள்ளீடற்றதாக இருக்கிறது என்பதை இந்த ஓவியம் கட்டு கிறது. அந்த அழகான, பெரிய யானை அமர்ந்திருப்பது வெடித்துவிடக்கூடிய பலூன் மீது என்பது ஓவியம் தன்னைத் திறந்து காட்டும் கவித்துவம் எனலாம். இன்னொரு ‘சரித்திரச் சுமை’ ஓவியம் பாலஸ்தீனப் பிரச்சினையைப் பேசுகிறது. அதிலும் யானை வருகிறது. அமைதிக்கான குறியீடாக புறாக்கள் யானையைத் தங்கள் அலகுகளில் கொத்திப் பறக்கின்றன. பெருத்த யானையின் சுமையை ஓவியம் உருவகமாகக் கொண்டு அந்தப் பிரச்சினையின் இறுக்கத்தைச் சொல்கிறது.
தேசங்களின் வரைபடம் என்பது ஒரு கற்பிதம் என்று ‘வரைபடக் குதிரை’ வழியாகச் சொல்கிறார் மோனிகா. இந்தத் தேசம் என்கிற வரைபடம், நில, மன ரீதியில் மனிதர்களைப் பிரிப்பதையும் இத்துடன் சேர்த்துப் புரிந்துகொள்ளலாம். இந்த ஓவியத்தின் குதிரை இந்தக் கற்பிதங்களைத் தாண்டிக் குதிக்கிறது.
ஷேக்ஸ்பியரின் ‘ஹேம்லெட்’டில் வரும் ஒபிலியா, ஹேம்லெட்டின் மீது காதல் வயப்பட்டு நீரில் மூழ்கி இறக்கிறாள். இந்தக் கதாபாத்திரப் பாதிப்பில் ஓவியர் ஜான் எவரெட் மில்லாய்ஸ் வரைந்த மிதக்கும் ஒபிலியா ஓவியம் பிரசித்திபெற்றது. அந்தப் பாதிப்பில் ஒரு இந்திய ஒபிலியாவை மோனிகா உருவாக்கியுள்ளார். ‘கானகி’ என்கிற ஓவியத்தில் இரண்டே இரண்டு கண்கள் கொண்டு ஒரு காட்டைப் பெண்ணாக்கியிருக்கிறார் மோனிகா. ‘காலத்தின் மரணம்’ ஓவியத்தில் ஒரு மனிதனின் மரணத்திற்குப் பிறகு காலமே நின்றுபோய் விடுவதாகச் சித்தரித்துள்ளார். இந்த ஓவியத்தின் கடிகாரத்தில் முள் இல்லை. இந்த இடத்தில்தான் அந்த ஓவியம் தன் கருப்பொருளைத் திறந்து காட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT