Last Updated : 09 Feb, 2025 09:20 AM

 

Published : 09 Feb 2025 09:20 AM
Last Updated : 09 Feb 2025 09:20 AM

“நவீனக் கவிதையில் பைக் இருக்கிறது; கார் இல்லை” - கவிஞர் சோ.விஜயகுமார் நேர்காணல்

சோ.விஜயகுமார், கவிஞர். கவிதை இயல் குறித்துத் தொடர்ந்து பேசி வருபவர். ‘ஒரு ஸ்க்ரோல் தூரம்’, ‘சிற்றெறும்பின் நிழல்’, ‘அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ’ ஆகிய மூன்று தொகுப்புகள் உயிர்மை வெளியீடாக வந்துள்ளன. நவீன கவிதை குறித்து அவருடன் உரையாடியதன் ஒரு பகுதி இது.

ஏன் கவிதை வடிவத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்? - மொழியின் உச்ச நிலை கவிதை தான். நாவலில் பிரமாதமான இடங்களை நாம் கவித்துவம்தான் என்றுதானே சொல்கிறோம்? சிறுகதைகளிலும் ‘மொழிநடையில் கவித்துவம் இருக்கிறது’ என்கிறோம். கதை, யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதற்கு மொழிதான் முக்கியம். அந்த மொழி எப்படிச் சிறப்பாகிறது என்றால் அதன் கவித்துவத்தால்தான். அதனால் கவிதைதான் முக்கியம்; முதன்மையானதும் கூட.

இன்றைய காலக்கட்டத்தில் கவிதைக்கு என்ன தேவை இருக்கிறது? - இந்த நூற்றாண்டு ஒரு திரிஞ்சுபோன நூற்றாண்டு. ஒரு தலைமுறை இடைவெளி என்பது இன்றைக்குக் குறைந்திருக்கிறது. எனக்கும் எனக்குப் பின்னாடி கல்லூரி முடிப்பவர்களுக்கும் இடையே தலைமுறை இடைவெளி இருக்கிறது. சிந்தனை முறையிலும், தொழிநுட்ப அறிவிலும் இடைவெளி இருக்கிறது. ரீல்ஸைப் பிடுங்கிவிட்டால் இந்தத் தலைமுறைக்காரர்கள் என்ன செய்வார்கள் என்பதே அதிர்ச்சியாக இருக்கிறது. இதெல்லாம் நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஆனால், இந்தப் பதிவில் கவிதை முன்னால் வந்துவிடும். ஒரு காலக்கட்டத்தைப் பதிவு செய்வது கவிதையில்தான் முதலில் நடக்கும். ஒரு சம்பவத்தை, அல்லது அதன் சிறு தெறிப்பையாவது யாராவது ஒரு கவிஞர், தன் கவிதையில் பதிவு செய்துவடுவார். கவிதை யில் இதற்கான சாத்தியங்கள் அதிகம் நாவலில், இது கவிதை அளவுக்கு நடப்பதில்லை.

இந்தக் கவிதை வடிவத்தில் லட்சக்கணக்கானோர் புழங்கும்போது தனித்துவம் பிரச்சினையாகிறதா? - லட்சக்கணக்கானோர் புழங்கும்போது ஒவ்வொருவருக்கும் தனித்துவமான நடை என்பது சாத்தியமல்ல. ஜப்பானில் ஹைகூ வடிவத்தில் லட்சக்கணக்கானோர் எழுதியதில் ஒன்றே ஒன்றுதான் சிறந்தது எனச் சொல்வார்கள். எல்லாரும் எழுதும் போதுதான் புதிதானது உருவாகும். புதுசு மட்டுமே எல்லாராலும் எழுத முடியாது இல்லையா? வழக்கமாகச் செய்த வடிவத்தைத்தான் செய்வார்கள். அதில் சலிப்புத் தட்டும்போது புது வடிவம் உருவாகும். நானும் எனக்குத் தெரிந்ததை வைத்து தான் எழுதத் தொடங்கினேன். எழுத வந்த பிறகு பிரமிள், நகுலன் எல்லாம் படிக்கிறேன். உலகக் கவிதைகள் படிக்கிறேன். அதற்குப் பிறகுதான் நடை பற்றிய ஒரு தெளிவு வருகிறது.

தமிழ்க் கவிதை நடை எப்படி இருக்கிறது? - உலகளாவிய ஒரு எளிய நடை நோக்கி எல்லாரும் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் எளிமையாகத்தான் எல்லாரும் எழுதுகிறார்கள். வெகு சிலர் தான் ரொம்பக் கறார தீவிர இலக்கியவாதிகள் மட்டும் வாசிக்கக்கூடிய அளவில் பிரதியை உருவாக்குகிறார்கள். அப்படிச் சில தொகுப்புகள், சாதாரண வாசகனுக்குத் தன்னைத் திறந்து கொடுக்காததாகவும் இருக்கிறது.

நவீன கவிதை, மீண்டும் மரபுடன் ஒரு தொடர்பைப் புதுப்பிக்க முயல்கிறாதா? - சங்கக் கவிதைகளின் பாதிப்பு, நாட்டார் பாடல்களின் பாதிப்பு எல்லாம் ஒரு வாழ்க்கை முறையாகத்தான் கவிதைக்குள் பாதிப்பை உண்டுபண்ணி யிருக்கிறது. அதுபோல் இதையெல்லாம் வேண்டுமென்றே பாவனையாகச் செய்வதும் நடக்கிறது. நவீனக் கவிதையில் கார் வருவது அபூர்வம்தான். ஆனால், நிறைய பைக் வருகிறது. ஏனென்றால் அது நம் வாழ்க்கையின் ஒரு அம்சம், அப்படித் தான் கவிதையில் மரபும் வருகிறது. மொழி ஏற்கெனவே பண்பாட்டு நிறையுடன் இருக்கிறது. அதைக் கவிஞர்கள் பரிசாகப் பயன் படுத்துகிறார்கள்.

‘அன்பே’ என்கிற சொல், ஒரு பழைய ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமா வசனம் மாதிரி இருக்கிறது. ஆனால், மனுஷ்யபுத்திரன் திரும்பத் திரும்ப அதைக் கவிதையில் பயன்படுத்தத்தானே செய்கிறார்? அது நல்லாத்தானே இருக்கிறது.

இன்றைய கவிதையை சினிமா, ஓவியங்கள் போன்ற மற்ற கலை வடிவங்கள் பாதிக்கிறதா? - சுகுமாரனும் பிரம்மராஜனும் எழுதிய படிமங்கள் எல்லாம் பிக்காசோ, வான் கோவின் ஓவியங்களில் இருப்பவை. அவர்கள் ஏன் இந்தியக் கலை மரபின் ஓவியங்களை எடுத்துக்கொள்ளவில்லை? இன்றைய கவிதைகளில் காணப்படும் பியானோ, ஆப்பிள் இதெல்லாம் நம் ஊருக்குப் பரிச்சயம் இல்லாதவை. இவை எல்லாம் எங்கிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டன? மேற்கத்திய மொழிபெயர்ப்புக் கவிதைகளில் அவை இருப்பதால் தானா? இதெல்லாம் எனக்குள்ளேயும் உள்ள கேள்விகள்தான். அகமத் ஹம்தி தன்பினாரின் ‘நிச்சலனம்’, பாதிப்பில் ஒரு கவிதையில் எழுதியிருக்கிறேன். கரன் கார்க்கியின் ‘மரப்பாலம்’ என்னைப் பாதித்திருக்கிறது. நாவலும் ஓவியம் போன்ற வடிவங்களும் கவிதையைப் பாதிக்கத் தான் செய்கின்றன.

கவிதையை இளங்கலை என்று கொண்டால் முதுகலையாக நாவல், சிறுகதைகளை எதிர்பார்க்கலாமா? - எனக்கு என் உயரம் தெரியும், நாவலுக்கு நிறைய விஷயங்கள் வேண்டும். நான் விட்டேத்தியான ஆள். கவிதை விட்டேத்தித் தனத்தை அனுமதித்துவிடும். ஆனால், நாவல், சிறுகதையெல்லாம் அதை அனுமதிக்காது.

தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x