Published : 09 Feb 2025 08:54 AM
Last Updated : 09 Feb 2025 08:54 AM
ஒரு சிறந்த நாடக ஆசிரியராக, நாடக இயக்குநராக வரவேண்டும் என்றால், நாடகத்தில் அமைந்துள்ள தொழில்நுட்பம், காட்சி நுட்பம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு வில்லியம் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள்தாம் முன்னுதாரணங்கள்.
அந்தப் பின்புலத்தில்தான் ‘ஹேம்லெட்’டை நாடகமாக்கினேன். ‘மேக்பெத்’ என்ற நாடகத்தைத் தமிழிலும் இந்தியிலும் உருவாக்கினேன். ‘கிங் லிய’ரை எழுத்தாளரும் நாடக ஆசிரியருமான இந்திரா பார்த்தசாரதி தமிழுக்கு ஏற்றவகையில் நாடகமாக எழுதியிருந்தார். அந்த மூன்று நாடகங்களையும் மேடை ஏற்றிய அனுபவம் எனக்கு உண்டு. மு.கருணாநிதி, எழுத்தாளர் இமையம் கதைகளையும் மேடையேற்றியுள்ளேன்.
எனது 40 ஆண்டுக்கால மேடையனுபத்தில் எழுத்தாளர் அ.வெண்ணிலாவின் ‘கங்காபுரம்’ நாவலின் மேடையேற்றம் சவாலும் சுவாரசியமும் நிரம்பியதாக இருந்தது. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கத்தில் முதன்முறையாக மேடையேற்றினேன். தமிழ்ச் சங்கத்தில் இருக்கின்றவர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாகத் தொடர்ந்து பயிற்சி கொடுத்து, நாடகத்தை அரங்கேற்றினோம். ஒரு வரலாற்றுப் புனைவை, அதிலும் அக உரையாடலாக அமைந்த புனைவை நாடக மாக்குவது பெரும் சவால்.
‘கங்காபுரத்’திற்குள் எனக்கு முக்கியமாகத் தோன்றியவை மூன்று கதாபாத்திரங்கள்: ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், லோகமாதேவி, இந்த மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்தியுள்ள கதையம்சத்தை ‘கங்காபுரம்’ நாவலில் இருந்து எடுத்துக் கொண்டேன். மூவருக்குள் உள்ள முரண் கள், ஆசைகள், அபிலாஷைகள், எதிர்பார்ப்புகள் என மேடையேற்று வதற்குச் சவாலான பகுதியைத் தான் நாடகமாக்கினோம்.
கதையை, அப்படியே நாடகமாக்குவது என்பது எளிதல்ல. ஆனால் கங்காபுரத்தில் எனக்குச் சாத்தியமானது. நூலாசிரியரின் உரையாடல்களும், பின்புலச் சித்தரிப்புகளும் அப்படியே எடுத்துப் பயன்படுத்த முடிந்தது. நூலாசிரியர், தன் எழுத்தில் காட்சிகளை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். லோகமாதேவியின் தனிமை, ராஜேந்திர சோழனின் வெறுமை, ராஜராஜனின் நிறைவின்மை என மூன்று கோணங்களில் காட்சிகள் நகர்கின்றன.
மூன்று கதாபாத்திரங்களின் நுட்பத்தை முழுமையாகக் கொண்டு வருவதற்காக முயன்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் இந்தப் கதாபாத்திரங்களை வைத்து ஒத்திகைக்குப் போகும்போது நாவலாசிரியர் எப்படி இந்தக் கதாபாத்திரத்தை செதுக்கிச் செதுக்கி ஒரு சிலையாக வடித்துள்ளாரோ, அதேபோல் தான் மேடையில் நடிகருடைய ஒவ்வொரு வசன உச்சரிப்பிலும் அந்தக் கதாபாத்திரத்தின் மனமுரண்களை எப்படிக் கொண்டு வர முடியும் என்று முயன்று கொண்டே இருக்கிறேன். என் முயற்சிக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் மிகுந்த ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் காட்டியுள்ளார்கள். இதைத் தமிழகத்து மேடையிலும் அரங்கேற்றும் கனவும் இருக்கிறது.
- ராஜு, நாடக இயக்குநர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT