Published : 07 Feb 2025 07:46 AM
Last Updated : 07 Feb 2025 07:46 AM
டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை கடந்த 2020 பிப்ரவரி 7-ம் தேதி மருத்துவர் சங்கத் தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் மாரடைப்பால் உயிரிழந்தார். சேலம் மேட்டூரைச் சேர்ந்த அரசு மருத்துவரான லட்சுமி நரசிம்மன் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர். ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை கிடைக்க உதவினார். சக மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், உயிர்க் காக்கும் மருத்துவர்கள் இன்னும் உற்சாகமாக மக்கள் சேவை செய்ய முடியும் என்பதை உறுதியாக நம்பினார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டனர். அன்றைய அரசுக்கு கண்டனத்தையும் தெரிவித்தனர்.
மருத்துவர்களை ஒருங்கிணைத்து நடத்திய போராட்டத்தால் அன்றைய சுகாதாரத் துறை அமைச்சர், அதிகாரிகள் பழி வாங்கியதால் ஏற்பட்ட மன அழுத்தம்தான் அவரது இறப்புக்கு காரணம் என்பது மருத்துவர்கள் மட்டுமன்றி மக்களுக்கும் நன்றாகவே தெரிந்தது. லட்சுமி நரசிம்மன் 1986-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே மருத்துவ மாணவர் சங்க செயலாளராக போராட்டத்தை முன்னெடுத்தவர். அன்று முதல் இன்று வரை பல போராட்டங்களை மருத்துவ சமுதாயத்துக்காக முன்னின்று நடத்தி வெற்றி பெற்றவர். குறிப்பாக பயிற்சி மருத்துவர் உதவித்தொகை உயர்வு, மாணவர் கல்விக் கட்டணக் குறைப்பு, மருத்துவக் கல்வியில் தனியார் மயம் எதிர்ப்பு, அரசு மருத்துவர்களுக்கு ஊதியப்பட்டை 4-க்கான போராட்டம் என பல்வேறு போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தி சென்றவர்தான் லட்சுமி நரசிம்மன்.
ராமச்சந்திரா மருத்துவமனையை ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் திமுக அரசு அரசுடைமையாக்கியது. ஆனால், பணக்காரர்கள் பயன்படும் வகையில் அதிமுக அரசு தனியாரிடமே திருப்பி ஒப்படைத்த போது அதை எதிர்த்து, 1991-ல் தமிழகமே அதிரும் அளவுக்கு 57 நாட்கள் மிகக் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து, 17 நாட்களுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன். வார்த்தை ஜாலங்கள் எதுவும் இன்றி, ஆவண ஆதாரங்களோடு தெள்ளத் தெளிவான இவரது உரை ஒவ்வொரு போராட்டத்தின் வெற்றியின் உரமாக அமைந்தது.
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு தடுப்பூசி தயாரித்து கொண்டிருந்த Pasteur Institute of India எனப்படும் மத்திய அரசின் நிறுவனத்தை மூட முயன்ற போது, டாக்டர் ரெக்ஸ் சற்குணத்துடன் இணைந்து மூடக் கூடாது என்று மிகக் கடுமையாகப் போராடியவர். தன் வீட்டின் ஒரு பகுதியை சிறிய மருத்துவமனையாக மாற்றி, அறுவை அரங்கம் அமைத்து, தனது சொந்த ஊர் மக்களுக்காக மருத்துவ சேவையை குறைந்த செலவில் வழங்கினார்.
கடந்த 2019-ல் அரசு மருத்துவர்கள் சங்கங்களை ஒருங்கிணைத்து ஃபோக்டா எனப்படும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை உருவாக்கியவர். அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும், நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் நியமனம் செய்வது, அரசு மருத்துவர்களுக்கு முதுகலைப் படிப்பில் சேர 50 சதவீத இட ஒதுக்கீடுமற்றும் முதுகலை படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும் என 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை வழி நடத்தி வந்தார். அந்த நேரத்தில் அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, மருத்துவர்கள் போராட்டத்தை உடனே வாபஸ் வாங்கினால் கோரிக்கையை அரசு தாயுள்ளத்தோடு நிறைவேற்றும் என உறுதியளித்தார்.
அதை ஏற்று நவம்பர் 1-ம் தேதி காலையில் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாக டாக்டர் லட்சுமி நரசிம்மன் அறிவித்தார். ஆனால் அப்போதில் இருந்தே தொடர்ந்து பழி வாங்க ஆரம்பித்தது அரசு. 150 டாக்டர்களுக்கு 17 பி குற்ற குறிப்பாணையும், 118 பேருக்கு இடமாற்றமும் தரப்பட்டு பந்தாடப்பட்டார்கள். இதில் 40 பெண் மருத்துவர்களும் அடங்குவர். தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய லட்சுமி நரசிம்மன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பிள்ளைகள் பள்ளிக்கு செல்வதில் ஆரம்பித்து அவர்களது குடும்பமே பாதிக்கப்பட்டது. ஒரு பெண் மருத்துவருக்கு விபத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ஒரு மருத்துவரின் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு, வேலூர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. ஒரு மருத்துவரின் அப்பாவுக்கு அதிர்ச்சியில் பக்கவாதம் ஏற்பட்டுவிட்டது. இன்னொரு பெண் மருத்துவரின் கணவருக்கு மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் 4 முறைக்கு மேல் டாக்டர் லட்சுமி நரசிம்மன் புதுக்கோட்டைக்குப் போய் டாக்டர் விஜயபாஸ்கரை சந்தித்து, போராடிய டாக்டர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை தொடர வேண்டாம் என்று கோரிக்கை வைத்தார்.
சக மருத்துவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். வாராவாரம் சென்னை வருவது சுகாதாரத் துறை அமைச்சரை சந்திப்பது என 3 மாதங்கள் அலைந்து கொண்டிருந்தார். கடந்த 2020 பிப்ரவரி 6-ம் தேதி நெஞ்சு வலி என்று சேலத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லட்சுமி நரசிம்மன் மறுநாள் காலை மரணமடைந்தார். அதிமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையே அவரது உயிரை பறித்து விட்டது என்பதை கிட்டத்தட்ட மருத்துவத் துறையில் உள்ள அனைவருமே வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க இருக்கிறதோ சுகாதாரத் துறை? ஊதியக் கோரிக்கைக்காக இவ்வளவு பெரிய விலை கொடுத்த பிறகும், அரசு மருத்துவர்களின் கோரிக்கையை இன்றைய திமுக அரசும் நிறைவேற்றவில்லை என்ற மன வருத்தம் 19 ஆயிரம் அரசு மருத்துவர்களிடத்திலும் அதிகமாகவே இருக்கிறது. எனவே சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் அரசு, நிச்சயம் 19 ஆயிரம் மருத்துவர்களின் நீண்ட கால கனவை நனவாக்கும் என நம்புகிறோம்.
கட்டுரையாளர்: தலைவர், அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT