Published : 05 Feb 2025 07:26 AM
Last Updated : 05 Feb 2025 07:26 AM
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 205 இந்தியர்களை அதிபர் ட்ரம்ப் அரசு பொறுப்பேற்றதும் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளது. இது ஒரு பொறுப்பான அரசின் பொறுப்புள்ள செயல். ஆனால், தமிழகத்தில் வங்கதேசம் நாட்டை சேர்ந்த 175 பேர் வெவ்வேறு இடங்களில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களில் 75 பேர் ஜாமீன் பெற்றதும் இங்கிருந்து எந்த தடையுமின்றி தப்பிச் சென்றுள்ளனர்.
வங்கதேச நாட்டில் இருந்து பலர் மேற்குவங்கம் வழியாக ஊடுருவி தமிழகத்தில் சென்னை புறநகர் பகுதிகள், திருப்பூர், கோவை, பெருந்துறை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் போலி ஆதார் ஆவணங்களுடன் தங்கி, வேலை பார்ப்பதாகவும், போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் மத்திய புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து அவ்வப்போது எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது. தமிழக காவல் துறையும் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை கைதுசெய்கிறது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீன் பெறுகின்றனர்.
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றாலும், வெளிநாட்டவர் என்பதால் அவர்களை சுதந்திரமாக விடுவிக்க முடியாது. காவல் துறை விசாரணை அதிகாரி க்யூ பிரிவின் வாயிலாக தமிழகஅரசின் பொதுத்துறைக்கு தகவல் தெரிவித்து, அரசாணை பெற்று திருச்சியில் உள்ள வெளிநாட்டவர் முகாமில் அடைக்க வேண்டும். அல்லது வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலகம்(FRRO) உத்தரவை பெற்று முகாமில் அடைக்க வேண்டும்.
இந்த கடமையை காவல் துறை செய்யவில்லை என்றால், ஜாமீன் பெற்ற வெளிநாட்டவர் தப்பிச் சென்று விடுவார்கள். அவர்களை திரும்ப நீதிமன்றத்தில் நிறுத்த முடியாது. இத்தகைய மோசமான கடமை மீறலை தமிழக காவல் துறை செய்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.
திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வங்கதேசத்தை சேர்ந்த பலர் இன்னும் பிடிபட்டு வரும் நிலையில், ஏற்கெனவே பிடிபட்டவர்களை சட்டப்படியாக முகாமில் அடைக்காமல் தப்ப விட்டிருப்பது காவல் துறையின் அலட்சிய போக்கையே காட்டுகிறது. வெளிநாட்டவர் சட்டவிரோதமாக உள்ளே வருவது ஒருபுறம் இருந்தாலும், அதே சட்டவிரோத வழியில் இந்தியாவைவிட்டு வெளியே செல்வதும் மிகப்பெரிய பாதுகாப்பு குளறுபடியாகும். நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலான இதுபோன்ற விஷயங்களில் பொறுப்பற்ற முறையில் செயல்படுவது தவறான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவதுடன், நாட்டுக்கே அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.
வெளிநாட்டவர் ஜாமீன் பெறுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்திய குடிமகனாக இருப்பவர்கள் தங்களது முகவரியுடன் ஜாமீன் கொடுத்திருக்க வேண்டும். அவர்களுக்கும், சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களுக்கும் என்ன தொடர்பு, அவர்கள் இங்கிருந்து எப்படி தப்பி சென்றனர் என்பது உள்ளிட்ட விவரங்களை நீதிபதிதலைமையில் விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற பாதுகாப்புகுளறுபடிகள் நடக்காமல் இருக்க செய்ய வேண்டிய நடவடிக்கைகளை வகுப்பது அவசியம்.
கைது செய்யப்படும் வெளிநாட்டவர் ஜாமீன் பெற்றால் அவர்களை என்ன செய்ய வேண்டும் என்று காவல் துறைக்கு உயர் அதிகாரிகள் மீண்டும் வகுப்பெடுக்க வேண்டியதன் அவசியத்தையே இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.-
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT