Published : 04 Feb 2025 09:14 AM
Last Updated : 04 Feb 2025 09:14 AM
தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறையான பதிவுத்துறை, ஞாயிற்றுக்கிழமையன்று செயல்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு, அறிவித்தபடி செயல்படாததால் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. நிலம், வீடு வாங்குதல், விற்றல் போன்ற பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், பதிவுத்துறை அலுவலகம் தமிழகத்தில் எப்போதும் பரபரப்பான அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த துறை 2022-23-ம் ஆண்டில் ரூ.17,296 கோடியும், 2023-24-ம் ஆண்டில் ரூ.18,825 கோடியும் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதம் வரையிலான கணக்குப்படி ரூ.14,525 கோடியை எட்டிவிட்டது.
மார்ச் மாதத்துக்குள் கடந்த ஆண்டு வருவாயை முறியடித்து சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வருவாய்த் துறையின் பத்திரப்பதிவு அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் மக்கள் பத்திரங்களை பதிவு செய்ய அலைமோதுகின்றனர். சில நேரங்களில் முகூர்த்த நாட்கள் வார விடுமுறை நாட்களில் வந்து விடுவதால் பத்திரங்களை பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைகின்றனர். இதை தடுக்க சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் பத்திரங்களை பதிவு செய்யலாம் என்ற நடைமுறையை அரசு உருவாக்கியுள்ளது.
அதன்படி, கடந்த ஞாயிறன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டும், தமிழகம் முழுவதும் பெரும்பாலான பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாததால், ஆவலுடன் சென்ற மக்கள் ஏமாற்றமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சார்-பதிவாளர்கள் மற்றும் பதிவுத்துறை அலுவலர்களின் கருத்தைக் கேட்காமல் உயர்அதிகாரிகள் தாங்களே முடிவெடுத்து அறிவித்ததால், இத்தகைய குழப்பம் ஏற்பட்டதாக அலுவலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 லட்சத்துக்கும் அதிகமான பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒரு சார்-பதிவாளர் இருக்கும் அலுவலகங்களில் சராசரியாக 100 டோக்கன், 2 சார் – பதிவாளர் இருந்தால் 200 டோக்கன் வழங்கப்படுகின்றன. சராசரியாக 10 தத்கல் டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. முகூர்த்த நாட்களில் கூடுதலாக 50 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. அந்த அளவுக்கு தேவைஅதிகமாக உள்ளதாலும், கூடுதல் வருவாய் கிடைப்பதாலும் விடுமுறை நாட்களிலும் பதிவுகள் மேற்கொள்ளலாம் என்றுஅரசு முடிவெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.
ஆனால், இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, அதை முறையாக செயல்படுத்த வேண்டிய சார்-பதிவாளர்கள் மற்றும் இதர அலுவலர்களையும் ஆலோசித்து இணக்கமான முறையில் அரசு இயந்திரத்தை இயக்க வேண்டியது அதிகாரிகளின் கடமை. விடுமுறை நாட்களில் பணிக்கு வருவோருக்கு கூடுதல் ஊதியம் மற்றும் இதர வசதிகளை செய்து கொடுத்து சுமுகமான முறையில் பத்திரப்பதிவுகள் நடைபெறுவதை உறுதி செய்வதும் அவசியம்.
அதை விடுத்து, அலுவலகம் இயங்கும் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிட்டு விட்டு, மக்கள் நேரில் சென்று ஏமாந்து வீடு திரும்பும் வகையில் செயல்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். இந்த ஆண்டு 10 முகூர்த்த நாட்கள் விடுமுறை நாட்களில் வரவிருப்பதால், இனிவரும் நாட்களிலாவது மக்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும் வகையில் உரியஏற்பாடுகளை அரசு அதிகாரிகள் முன்கூட்டியே மேற்கொள்ளவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT