Published : 01 Feb 2025 08:53 AM
Last Updated : 01 Feb 2025 08:53 AM
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நம்பிக்கையளிக்கும் வகையில் தொடங்கி உள்ளது. நாடு விடுதலையடைந்து 100-வது ஆண்டை கொண்டாடும் 2047-ம் ஆண்டு இந்தியா வளர்ந்த நாடாக திகழ வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு என்றும், வளர்ந்த இந்தியாவில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் பிரதமர் மோடி பேசியிருப்பது இளைய சமுதாயத்துக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தனது உரையில், ‘‘நாட்டில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர்’’ என்ற நல்ல செய்தியுடன் நாடாளுமன்ற கூட்டத் தொடரை தொடங்கி வைத்துள்ளார். இதே உற்சாகத்துடன் பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகப் போகின்றன என்ற எதிர்பார்ப்புடன் நாட்டு மக்கள் ஆவலுடன் உள்ளனர்.
பட்ஜெட்டில் சாதகமான அறிவிப்புகள் இடம்பெறும் என்பதற்கான அச்சாரமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதத்தில் இருந்து 6.8 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என்றும், நான்காவது காலாண்டில் உணவு விலைவாசி குறைய வாய்ப்புள்ளது என்றும் நம்பிக்கையூட்டும் வகையில் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார்.
அதேநேரத்தில், இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வெளியிட்டுள்ள மற்றொரு ஆய்வறிக்கையில், 2011-12 காலகட்டத்தில் கிராமப்புறங்களில் 25.7 சதவீதமாக இருந்தவறுமை, 2023-24 காலகட்டத்தில் 4.86 சதவீதமாக குறைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த விவரங்கள் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக அமைந்தாலும், நகர்ப்புறங்களில் 4.09 சதவீதமாக இருந்த வறுமையின் அளவு 4.6 சதவீதமாக உயர்ந்துள்ள தகவல் சற்று கவலையளிக்கும் புள்ளிவிவரமாக அமைந்துள்ளது.
கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புறங்களுக்கும் இடையிலான தனிநபர் நுகர்வு செலவு வேறுபாடு 2009-10-ல் 88.2 சதவீதமாக இருந்ததையும் தற்போது 69.7 சதவீதமாக குறைந்து விட்டதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கிராமப்புற மக்கள் வருமானத்தை பெருக்கி செலவழிக்கும் சக்தியை அதிகப்படுத்தியுள்ளனர்.
ஆனால், நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு வருவாயும் அதிகரிக்கவில்லை; செலவுகளும் அதிகரித்துள்ளது என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. விவசாயிகளுக்கு நேரடியாக மானியத்தொகை வழங்குதல், உள்கட்டமைப்பு வசதிகள், விவசாயிகளின் வருவாயை அதிகரித்தல், கிராமப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்கள் போன்றவற்றால் கிராமங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
ஆனால், நகரங்களில் உள்ளவர்களுக்கு பெரிய அளவில் மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை வகுப்பதில்லை. நகரவாசிகளுக்கு போக்குவரத்து செலவு மற்றும் பால், காய்கறி, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அவர்களின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதிப்பதால், நகர்ப்புற மக்கள் கிராமப்புற மக்களின்வளர்ச்சியுடன் போட்டியிட முடியாமல் பின்தங்கி விடும் நிலைஏற்பட்டுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை அடிப்படையாககொண்டு கிராமப்புறங்களுக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை நகர்ப்புற மக்களுக்கும் அளித்து, அவர்களின் சுமைகளை குறைத்தால் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி சமமான வளர்ச்சியை எட்ட முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT