Published : 29 Jan 2025 11:23 AM
Last Updated : 29 Jan 2025 11:23 AM
தமிழகத்தில் மாற்று அரசியலுக்கான ஒரு நல்ல வாய்ப்பு. ஈரோடு கிழக்கு தொகுதி - மிகப் பொருத்தமான களம். முற்றிலும் மாநகர பகுதி அல்லது முழு கிராம பகுதியை உள்ளடக்கிய தொகுதி மாற்று அரசியலுக்கு சரியான களமாக இருக்க இயலாது. நகர, கிராம பகுதிகள் இணைந்த ஈரோடு கிழக்கு, புதிய முயற்சிகளுக்கு கச்சிதமாய் பொருந்தும்.
அதிலும், இடைத்தேர்தல் என்பது மாற்று அரசியல் முன்னெடுப்புக்கு கூடுதல் ஆதாயம். இந்த நிலைமையை மேலும் சாதகமாக்க, வலிமை சேர்க்க, நேரடி இரு முனைப் போட்டி அடித்தளமாக உள்ளது. இந்த வகையில் ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதற்கு முன், ‘மாற்று அரசியல்’ சாத்தியமா?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்தை யாராலும் எப்போதும் மாற்ற இயலாது. கேசவானந்த பாரதி வழக்கு தொடங்கி பல வழக்குகளில் பல நேரங்களில் உச்ச நீதிமன்றம் இதனை மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. சாசனத்தின்படி நாடாளுமன்ற ஜனநாயகம் வரையறைக்கு உட்பட்டுதான் மாற்று அரசியல் எதுவும் செயல்பட முடியும். நாட்டின் ஒட்டுமொத்த அமைதி, வளர்ச்சி, அரசியல் ஸ்திரத்தன்மைக்கு இந்த ஏற்பாடு மிகவும் அவசியம்.
அப்படியானால், நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையில் மாற்று அரசியலுக்கு இடமில்லையா? மிக நிச்சயமாக இருக்கிறது. என்ன ஒன்று... அதற்கு பெரும்பான்மை மக்களின் ஆதரவு வேண்டும். ஆனால், ஆட்சி அதிகாரம் எப்போதும் மாற்று அரசியலுக்கு எதிராகவே உள்ளது. அதனால்தான் அதிகார அத்துமீறல்களை எதிர்த்து மக்கள் ஆதரவைப் பெற மாற்று அரசியல்வாதிகள் மிகக் கடுமையாக போராட வேண்டி உள்ளது.
புதிய முயற்சிகள், நல்ல மாற்றங்கள், மாற்று சிந்தனைகளுக்கு நம் நாட்டில் அத்தனை எளிதில் அங்கீகாரம், ஆதரவு கிடைத்து விடுவதில்லை. பெரிய அரசியல் கட்சிகளின் பிடியில் தேர்தல் களம் சிக்கிக் கொண்டுள்ளது. இது, நமது ஜனநாயகத்தின் ஆகப் பெரும் சோகம்.
கடந்த 1977-ல் ஜெயபிரகாஷ் நாராயண் தலைமையில் ஜனதா கட்சி வெற்றி பெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார். எனினும், அதை முற்றிலும் மாற்று அரசியல் என்று சொல்லிவிட இயலாது. ஒரு தூய காந்தியவாதியாக பிரதமர் மொரார்ஜி தேசாய், அதிகாரக் குவியல், அதிகார முறைகேடு, ஊழல் மற்றும் அரசியல் ஆதாயங்களுக்கு அப்பால் தனது பதவியை நிலை நிறுத்தினார்.
ஜவர்கலால் நேருவின் பொருளாதாரக் கொள்கை, இந்திரா காந்தியின் சோசலிச நடவடிக்கை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ராஜீவ் காட்டிய ஆர்வம், நரசிம்மராவ் வகுத்த புதிய பொருளாதாரக் கொள்கை, வாஜ்பாய் ஏற்படுத்திய உட்கட்டமைப்பு வசதிகள் எல்லாமே ஒரு வகையில், அரசு நிர்வாகத்தில் மாற்று அரசியலின் வெவ்வேறு பரிமாணங்கள்தான்.
தமிழ்நாட்டை பொறுத்த வரை, காமராசரின் கல்வி வளர்ச்சி தொழில் வளர்ச்சி திட்டங்கள், சாமானியர்களுக்கு சங்கடம் தராத எம்ஜிஆர் அரசின் செயல்பாடுகள், மகளிருக்கு முக்கியத்துவம் தந்து ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பல்வேறு நலத் திட்டங்கள் எல்லாம் மாற்று அரசியல் என்று கூறமுடியாவிட்டாலும், புதிய முயற்சிகள், நவீன செயல் திட்டங்கள் எனலாம். அப்படியானால் மாற்று அரசியல் எது? அதிகார மைய அரசியலை அடித்தட்டு மக்களின் அரசியலாக மாற்றுவதே மாற்று அரசியல்.
ஆட்சியாளர்கள் பின்னால் மக்கள் செல்வதை மாற்றி மக்களின் பின்னால் ஆட்சியாளர்களை வரவழைப்பதும் மாற்று அரசியல்தான். எப்போதெல்லாம் அதிகாரக் குவியல் ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்க முற்படுகிறதோ அப்போதெல்லாம் மக்களின் குரலை பாதுகாத்து அதிகார வர்க்கத்தைசரியான திசைக்கு திருப்புவதும் மாற்று அரசியல்தான்.
தற்போது, ஈரோடு கிழக்கு தொகுதி, வாக்காளர் கையில் இருக்கிறது - தமிழ்நாட்டில் மாற்று அரசியலின் எதிர்காலம். எந்த ஓர் இடைத்தேர்தலிலும் பிரதான எதிர்க்கட்சி பங்கேற்றே தீர வேண்டும். ஆனால், அதிமுகவின் தேர்தல் புறக்கணிப்பு - மக்களின் ஜனநாயக உணர்வுகளை மதிக்காத அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
இன்றுள்ள நிலையில் தமிழகத்தில் விஜய், சீமான், அண்ணாமலை, திருமாவளவன், அன்புமணி ராமதாஸ் ஆகிய 5 தலைவர்களும் வெவ்வேறு கொள்கைகளை கொண்டவர்கள். இன்று தமிழக இளைஞர்கள் இவர்கள் பின்னால் அணிவகுத்து இருக்கின்றனர். என்ன காரணம்..?
வெற்று முழக்கங்கள், சிறுபிள்ளைத்தனமான அறிவிப்புகள், தனிநபர் துதி, அதிகாரக் குவியல் இவற்றுக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு நாளுக்கு நாள் மங்கிக் கொண்டே வருகிறது. இது, தமிழ்நாட்டில் ஆரோக்கியமான அரசியல் மீண்டும் துளிர்க்கும் என்பதற்கான மிக நல்ல அறிகுறி. ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்வைக்கும் வாதங்கள், சிலருக்கு ஏற்க முடியாததாய் இருக்கலாம்.
ஆனால் இவர்கள் முன்வைக்கும் எதிர்வாதம், ஆற்றும் எதிர்வினை ஆரோக்கியமானதாக இல்லை. தேர்தல் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வெல்லப் போவது யாராகவும் இருக்கட்டும்; இப்போதைக்கு, நாம் தமிழர் சீமான் முன்வைக்கும் மாற்று அரசியல், மக்களின் கவனத்தை கணிசமாக ஈர்த்துள்ளதாகவே தெரிகிறது.
சீமானின் பார்வையில் இன்றைய சூழலை இப்படி சொல்லலாம்: மாற்று அரசியல் - ஏமாற்று அரசியல் ஆகிய இரண்டில், மக்கள் யார் பக்கம் நிற்கப் போகிறார்கள்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT