Published : 22 Jan 2025 06:22 AM
Last Updated : 22 Jan 2025 06:22 AM
உலகளவில் 70 கோடி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த 9 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ள நிலையில், வரலாற்றில் முதல் முறையாக 2024இல் நாட்டின் வறுமை விகிதம் 5%க்கும் கீழே சென்றுள்ளதாக பாரத் ஸ்டேட் வங்கியின் ஆய்வும் சுட்டிக்காட்டியிருக்கிறது.
பட்டினி ஒழிப்பு, வறுமையின்மை, ஆரோக்கியம், கல்வி, பாலினச் சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை ஒரு நாட்டின் நிலைத்த வளர்ச்சிக்கான பாதையாக ஐக்கிய நாடுகள் அவை நிர்ணயித்திருக்கிறது. அதன்படி இந்தியா பயணிக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.
மாநிலங்கள் நிலவரம்: சுகாதாரம், நிதி சேவை, குடிநீர், மின்சாரம், ஊட்டச்சத்து, சமையல் எரிவாயு போன்றவை மக்களுக்கு முழுமையாகச் சென்றடைவதில் மத்திய - மாநில அரசுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து நாட்டின் வறுமை விகிதம் கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் 2023இல், இந்தியாவின் மாநிலங்கள், மத்திய ஆட்சிப் பகுதிகள், பல்பரிமாண வறுமைக் குறியீடு (Multidimensional Poverty Index - ஒரு குடும்பம், தனிநபரின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுவது) மதிப்பீட்டின்படி, உத்தரப் பிரதேசம், பிஹார், மத்தியப் பிரதேசம், ஒடிஷா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் வறுமை விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கோவா, கேரளம், தமிழ்நாட்டில் வறுமை விகிதம் குறைவாக உள்ளது.
கிராமங்கள், நகரங்கள்: இந்தியக் கிராமங்களில் வறுமை விகிதம் 2023இல் 7.2%இலிருந்து 2024இல் 4.8%ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இந்த எண்ணிக்கை 2023இல் 4.6%இலிருந்து 2024இல் 4.09%ஆகக் குறைந்திருக்கிறது. 2012 உடன் ஒப்பிடுகையில் கிராமம், நகரங்களில் வறுமை நிலை குறைந்துள்ளதாகவும் வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் குறையும் எனவும் பாரத் ஸ்டேட் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
2023-24ஆம் ஆண்டில் கிராமப்புற - நகர்ப்புற நுகர்வு கணிசமாக அதிகரித்துள்ளது. 2024ஆம் நிதியாண்டில், நுகர்வு விகிதம் நகரத்தில் 8 சதவீதமும், கிராமத்தில் 9 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மாதாந்திர வீட்டு நுகர்வு சார்ந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
பாரத் ஸ்டேட் வங்கி ஆய்வில், 2023-24ஆம் ஆண்டில் மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு (MPCE - monthly per capita consumption expenditure) கிராமப்புறங்களுக்கு ரூ.4,122 ஆகவும், நகர்ப்புறங்களுக்கு ரூ.6,996 ஆகவும் உள்ளது. அதே நேரத்தில் தினசரிச் செலவு கிராமம், நகரங்களில் முறையே ரூ.137, ரூ.233 ஆக உள்ளது.
தமிழகத்தில்... வறுமை விகிதம் குறைந்துவருவதில், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு மிகவும் மேம்பட்ட நிலையில் உள்ளது. நிதி ஆயோக் வெளியிட்டுள்ள 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான ‘நிலையான வளர்ச்சி இலக்குகள்’ குறியீட்டின்படி, உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை தேசிய சராசரி 57.6% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 81.5% ஆக உள்ளது.
அதேபோல், கல்லூரிச் சேர்க்கையில் தேசிய சராசரி 28.4% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அது 47% ஆக உள்ளது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் 81.87% குடும்பங்கள் சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுள்ளன. 92.8% குடும்பங்களில் ஒருவரிடமாவது அலைபேசி உள்ளது. தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 4.3% ஆக இருக்கிறது.
ஆய்வுகள் என்ன கூறுகின்றன? - சமூகவியலாளரும், மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான சோனால்டே தேசாய் தலைமையில், காலேஜ் பார்க் - தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER) சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியது. மக்களுக்கும் வறுமைக்கும் இடையேயான இடைவெளி ஒரே நேர்க்கோட்டில் பயணித்துவருவதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. ஆனால், நீண்டகால வறுமையில் தவிக்கும் மக்கள் வறுமையில்இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு மாறாக இயற்கைப் பேரழிவு, நோய்த் தாக்கம், நிலையற்ற பொருளாதார நிலை ஆகியவற்றைப் பொறுத்தே வறுமையிலிருந்து வெளியேறுகிறார்கள்.
2011-12, 2022-24இல் நடத்தப்பட்ட ‘இந்திய மனித மேம்பாட்டுக் கணக்கெடுப்பு’த் தரவுகளின்மூலம், சுமார் 18.1% மக்கள் வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்; எனினும் 5.3% பேர் புதிதாக வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பொருளாதாரரீதியாக நாடு முன்னேற்றம் அடைந்தாலும், மக்கள் ஏதோ ஒருவகையில் வறுமை நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என்பதை இத்தரவுகள் உணர்த்தியுள்ளன. மேலும், நாள்பட்ட வறுமை நிலையைவிட, வருமானம் - செலவு சார்ந்து ஏற்படும் வறுமையே மக்களிடம் ஆதிக்கம் செலுத்துவதாகப் பொருளாதார ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நீண்ட பயணம்: நவம்பர், 2024 வரையில் இந்தியாவின் பணவீக்க விகிதம் 5.48% ஆக இருந்தது. தொடர்ந்து நீடிக்கும் பணவீக்கத்தினால் மக்களின் அன்றாடச் செலவும் அதிகரித்துள்ளது. 2021 - 2022ஆம் நிதியாண்டில் 19 கோடித் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்ற நிலையில், வறுமைக்கோட்டின் கீழ்தான் இத்தொழிலாளர்கள் வருகிறார்கள்.
2012 முதல் நுகர்வு - செலவினங்கள் குறித்த கணக்கெடுப்பை மத்திய அரசு வழங்காத நிலையில், வறுமை விகிதம் குறைந்துள்ளதாகக் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் எனச் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
வறுமையை ஒழிக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், திறன் இந்தியா, கரீப் கல்யாண் அன்ன யோஜனா, தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான பிரதம மந்திரியின் திட்டம் போன்றவை மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.
எனினும் இத்திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவதில் சில இடர்ப்பாடுகள் நீடிக்கின்றன. அந்த வகையில், வறுமையை நீக்குவதில் இந்தியா இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT