Last Updated : 21 Jan, 2025 08:21 AM

8  

Published : 21 Jan 2025 08:21 AM
Last Updated : 21 Jan 2025 08:21 AM

காவிக்கு போட்டியா வெள்ளை ஆடை?

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ‘வெள்ளை டி-சர்ட் இயக்கம்’ ஒன்றை தொடங்கியுள்ளார். பொருளாதார மற்றும் சமூக சமத்துவம், ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக்காக இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நமது நாட்டில் நடைபெறும் அனைத்துவிதமான மத, இன பாகுபாடுகளையும் புறந்தள்ளும் வகையில் இந்த இயக்கத்தில் பங்கேற்று அதற்கான அடையாளமாக அனைவரும் வெள்ளை உடை அணிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக, பொருளாதார இடைவெளியை நிரப்பும் எண்ணத்துடன் நடத்தப்பட்ட ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் தொடர்ச்சியாக இப்படியொரு இயக்கத்தை ராகுல் காந்தி அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமூக மேம்பாட்டுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடும் தலைவர்கள், தங்களது அரசியல், சமூக கருத்துகளை கடைக்கோடி மக்கள்வரை கொண்டு செல்ல ஆடையை ஆயுதமாக பயன்படுத்திய பல முன்னுதாரணங்கள் உண்டு.

அரசியல்வாதிகள் மட்டுமின்றி, ஆன்மிகவாதிகளும் தங்கள் கொள்கை மற்றும் மத அடையாளங்களை வெவ்வேறு நிற ஆடைகளின் மூலம் வெளிப்படுத்துவது காலங்காலமாக உள்ள நடைமுறையே. குறிப்பாக, ஒரு சில கோயில்களுக்கு செல்லும் பக்தர்கள் தங்களை ஒரு குழுவாக அடையாளப்படுத்திக் கொள்வதற்காக குறிப்பிட்ட ஒரு நிற ஆடையை அணிந்து செல்வதும் உண்டு.

பொதுவாகவே அரசியல்வாதிகள் எடுப்பான வெள்ளை ஆடை அணிவதை கம்பீர அடையாளமாக கருதுவது பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ள வழக்கம்தான். ஆனால், அதை ராகுல் காந்தி டி-சர்ட் வடிவத்துக்கு கொண்டு வந்திருப்பதில்தான் மாற்றம் இருக்கிறது. மேலும், அதை ஓர் இயக்கமாக அறிவித்து அதற்கான விளக்கத்தையும் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் மத, இன அடிப்படையிலான பாகுபாடுகள் வளர்ந்து வருவதாக மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ள ராகுல் காந்தி, அதைமுறியடிக்கும் வகையில் வெள்ளாடை இயக்கத்தில் பங்கேற்கும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள இணைய பக்கத்திலும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளாக பரிவு, ஒற்றுமை, அகிம்சை, சமத்துவம், முன்னேற்றம் ஆகியவற்றை குறிப்பிட்டு, 8,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த நமது நாகரிகத்தில் வேற்றுமையில் ஒற்றுமை பின்பற்றப்படுகிறது என்றும், தர்மா, கர்மாவிலிருந்து நமது கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் இத்தகைய அரசியல்ரீதியான கருத்துகளுக்கு மற்ற அரசியல் கட்சிகளிடம் இருந்து மாற்றுக் கருத்துகள் நிச்சயம் எழ வாய்ப்புண்டு. ஆளும் பாஜக அரசு கல்வி மற்றும் அரசுத்துறைகளை காவிமயமாக்கி வருகிறது என்ற அரசியல்ரீதியான குற்றச்சாட்டுகள் இருந்துவரும் நிலையில், அதற்குப் போட்டியாக வெள்ளாடை இயக்கத்தை ஆரம்பித்து நாட்டை வெள்ளை மயமாக்க ராகுல் காந்தி முயற்சிக்கிறாரா என்ற கேள்வி நாட்டு மக்களுக்கு எழுந்துள்ளது.

இனி வெள்ளை ஆடை அணிபவர்கள் எல்லாருமே காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று கருதுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேபோல், வெள்ளை ஆடை அணியாத மக்கள் எல்லோரையும் ‘சங்கி’கள் என்று வகைப்படுத்தும் வேடிக்கையும்கூட நடக்கலாம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x