Last Updated : 16 Jan, 2025 07:35 AM

2  

Published : 16 Jan 2025 07:35 AM
Last Updated : 16 Jan 2025 07:35 AM

ஜல்லிக்கட்டு ஆபத்தை இன்னும் குறைக்க வேண்டும்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பொங்கலன்று நடந்த போது, மாடு முட்டியதில் மதுரை விளாங்குடியை சேர்ந்த 22 வயதுள்ள மாடுபிடி வீரர் நவீன்குமார் உயிரிழந்துள்ளது வருத்தமளிக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. பலத்த காயங்களுடன் இன்னும் 12 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். செய்தியாளர், பார்வையாளர்கள் உட்பட 46 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் உணர்வுப்பூர்மாக தொடர்புடையதாக இருந்தாலும், அதில் பாதுகாப்பு அம்சங்கள் இருப்பது அவசியமாகிறது. மாவட்டநிர்வாகம் சார்பில் வீரர்கள் மாடு பிடிக்கும் தளத்தில் தென்னைநார் போடப்பட்டு காயங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனைசெய்யப்பட்டு திடகாத்திரமான மாடுகள் மட்டுமே களமிறக்கப்படுகின்றன.

அதேபோன்று, மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு ஆரோக்கியமான நிலையில் இருக்கும் வீரர்கள் மட்டுமே மாடுகளைப் பிடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதுதவிர, பார்வையாளர் பகுதியில் மாடுகள் நுழைந்துவிடாமல் இருக்க இரும்புத் தடுப்புகள், காயமடைந்தோருக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் வசதி என மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்த போதிலும், இளைஞர் ஒருவர் உயிரிழந்திருப்பது பலரது மனதையும் வருத்தமடையச் செய்துள்ளது.

உயிர்காக்கும் வசதிகளுடன் ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை தயார் நிலையில் இருந்தபோதிலும், இளைஞரின் மார்பு பகுதியில் மாட்டின் கொம்பு குத்தியதில், அவரது நுரையீரல் கடும் சேதமடைந்ததால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

ஆபத்தான வீர விளையாட்டு என்ற நிலையில் இருந்து ஜல்லிக்கட்டு மாறி, பண்பாட்டைக் காக்கும் பாரம்பரிய பாதுகாப்பான விளையாட்டாக மாறி வருகிறது. மாடுகளின் கொம்புகளை கூர்மையாக சீவக் கூடாது, மாடுபிடி வீரர்கள் காளைகளின் கொம்புகளைப் பிடித்து அடக்கக் கூடாது, வாலைப் பிடித்து திருகக் கூடாது, மாடுகளுக்கு மதுபானம் தரக் கூடாது, மதுபானம் அருந்திவிட்டு வீரர்கள் களமிறங்கக் கூடாது என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் நீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாக கொண்டு வரப்பட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளில் இருந்த ஆபத்து பலமடங்கு குறைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகளை இன்னும் சீர்படுத்தி ஒருவர்கூட உயிரிழக்காத பாரம்பரிய விளையாட்டாக ஜல்லிக்கட்டை மாற்றுவது அனைவரது கடமை. அடுத்தடுத்து பாலமேடு, அலங்காநல்லூரிலும் போட்டிகள் நடந்துவரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுகளின் கொம்புகளில் பொருந்தும் வகையில், மிருதுவான, பஞ்சு அல்லது துணியால் நிரப்பப்பட்ட கவசத்தை அணிவித்து மாடுகளை வாடிவாசலுக்கு அனுப்புவது குறித்து சிந்திக்க வேண்டும்.

மாடுகளின் கொம்புகள் வீரர்களின் உடலில் குத்தினால்கூட பெரிய அளவில் காயம் ஏற்படாத வகையில் ஒரு பாதுகாப்பு அம்சத்தை சேர்க்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தனி அரங்கம் ஒன்றையும் தமிழக அரசு கட்டிவரும் நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்களையும் சேர்ப்பதன் மூலம், ஒரு வீரர்கூட உயிரிழக்காதவண்ணம் நம் பண்பாடு காக்கும் பாதுகாப்பான விளையாட்டாக ஜல்லிக்கட்டை நிலை நிறுத்த முடியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x