Published : 13 Jan 2025 08:49 AM
Last Updated : 13 Jan 2025 08:49 AM
ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சம் 1.8 கி.மீட்டருக்கு ரூ.50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கி.மீட்டர் ஒன்றுக்கு ரூ.18 என்றும், இந்த புதிய கட்டண உயர்வு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு அரசு சார்பில் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதை திருத்தி அமைக்க வழக்கு தொடரப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லாததால் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பினரே கட்டணத்தை மாற்றியமைக்கும் முடிவுக்கு வந்துள்ளனர். அதற்கான அறிவிப்பையும் அவர்களே வெளியிட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுவதற்கு ஏற்படும் செலவு, விலைவாசி உயர்வு, உதிரி பாகங்களின் விலை உயர்வு, காப்பீட்டுக் கட்டணம், ஆர்டிஓ கட்டணம் உயர்வு ஆகியவற்றை கருத்தில்கொண்டு ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு செலவுகளும் அதிகரிக்கும்போது, ஆட்டோ கட்டணம் மட்டும் 12 ஆண்டுகளாக ஒரேமாதிரியாக இருப்பதில் நியாயமில்லைதான். கட்டண உயர்வு அவசியமானதே. இந்த கட்டண உயர்வை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக உள்ளனர். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் இந்தக் கட்டணத்தை உறுதியுடன் கடைபிடிப்பார்களா என்பதே இப்போது நம்முன் உள்ள கேள்வி.
கடந்தமுறை அரசு சார்பில் கட்டணம் நிர்ணயித்தபோது, அந்த கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் பின்பற்றவில்லை. மீட்டருக்குமேல் கூடுதல் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்ததால் மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. கட்டண முறை தோல்வியடைந்தது. அரசின் உத்தரவை பின்பற்றுவதில்லை என்ற காரணத்தாலேயே கட்டணத்தை மறுசீரமைப்பதில் அரசு ஆர்வம் காட்டவில்லை.
இதற்கிடையே, ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற செயலிகள் வழியாக ஆட்டோ பயணம் எளிதானபோது அதில் நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டதால் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. ஆனால், அந்த செயலிகள் வழியாக முன்பதிவு செய்த பயணிகளிடம் இருந்தும், செயலியில் காட்டும் கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் கேட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை தொந்தரவு செய்கின்றனர்.
சில நேரங்களில் செயலி வழியாக வரும் பயணத்தை ரத்து செய்ய சொல்லிவிட்டு அந்த தொகையை தன்னிடம் நேரடியாக தருமாறு வற்புறுத்துகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளால் செயலிகள் வழியான ஆட்டோ பயணமும் தோல்வியடைந்து வருகிறது.
அதேபோன்று, இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேரமாக கருதப்பட்டு, அதற்கு 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இரவு 10 மணியில் இருந்தே இரவுக் கட்டணம் வசூலிக்க ஆரம்பித்து விடுகின்றனர். காலை 6 மணி வரை இரவுக் கட்டணம் என்று நிர்பந்திக்கின்றனர்.
இதுபோன்ற செயல்பாடுகள் காரணமாகவே கட்டண விவகாரத்தில் அரசு தலையிட மறுத்து வந்தது. எது எப்படியாயினும் ஆட்டோ ஓட்டுநர் கூட்டமைப்பே முன்வந்து கட்டணத்தை நிர்ணயித்திருப்பது வரவேற்கக் கூடியதே. அப்படி நீங்களே போட்ட உத்தரவை நீங்களே கறாராக பின்பற்ற வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT