Last Updated : 08 Jan, 2025 07:34 AM

4  

Published : 08 Jan 2025 07:34 AM
Last Updated : 08 Jan 2025 07:34 AM

துணைவேந்தர்கள் நியமனத்தில் ‘மோதல்’ சரி; மாணவர்கள் கதி?

துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே ஏற்கெனவே மோதல் போக்கு இருந்துவரும் நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு(UGC) புதிதாக ஒரு வரைவு மசோதாவை வெளியிட்டு, எரியும் நெருப்பில் எண்ணை வார்த்துள்ளது.

யுஜிசி வெளியிட்டுள்ள புதிய விதிகளின்படி, பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில், யுஜிசி சார்பில் ஒருவர், ஆளுநர் சார்பில் ஒருவர் மற்றும் பல்கலைக்கழகம் சார்பில் ஒருவர் மட்டுமே இடம்பெறுவர். இதில் மாநில அரசின் பிரதிநிதிக்கு இடமில்லை. இதன்மூலம் மாநில அரசின் உரிமை பறிபோகிறது என்பது தமிழக அரசின் வாதம். பல்கலைக்கழக துணைவேந்தரின் பதவிக்காலமும் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை இன்னும் இறுதி வடிவம் பெறவில்லை. அடுத்தமாதம் 5-ம் தேதி வரை கருத்துக் கேட்கப்படும். ஆனால், யுஜிசி-யின் புதிய அறிவிப்பை எதிர்த்து சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு கல்வித்துறை வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏற்கெனவே 6 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள் பலர் பட்டங்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் துணைவேந்தர்கள் இல்லாத நிலை ஏற்படும் என்பதே கல்வியாளர்களின் கவலை. யுஜிசி வெளியிட்டுள்ள புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் எந்த திட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் பங்கேற்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு சார்பில் வந்து சேர வேண்டிய நிதி எதுவும் வராது என்பதே அதன் பொருள். பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தருவதற்கும், நிர்வாகப் பணிகளை மேற்கொள்ளவும், ஆராய்ச்சிப் பணிகளுக்கும் மத்திய அரசின் நிதி இன்றியமையாதது. இந்த நிதி வரவில்லை என்றால் பல்கலைக்கழகங்கள் முடங்கும் நிலை ஏற்படும்.

தமிழக அரசு அறிவித்துள்ள அரசியல் ரீதியான போராட்டத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், சட்டரீதியான போராட்டம் என்பது எளிதில் முடிகிற காரியமல்ல. ‘கல்வி’ பொதுப்பட்டியலில் இருப்பதால், மத்திய அரசும் சட்டம் இயற்ற முடியும். மாநில அரசும் சட்டம் இயற்ற முடியும். இதில் யார் பக்கம் நியாயம் என்று நீதிமன்றத்தில் மோதும்போது, வழக்கை நடத்த மத்திய அரசிடம் பணபலமும் உண்டு; வக்கீல் படைபலமும் உண்டு. மாநில அரசிடமும் பணபலமும் உண்டு; வக்கீல் படைபலமும் உண்டு. மத்திய – மாநில அரசுகளிடையேயான இன்னொரு வழக்காகவே இது கருதப்படும்.

நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகளில் மத்திய, மாநில அரசுகள் வாதியாகவோ, பிரதிவாதியாகவோ இருக்கின்றன. இதில் பெரும்பாலான வழக்குகள் பேசித் தீர்க்க வேண்டியவை என்று உச்ச நீதிமன்றமே பலமுறை சொல்லியிருக்கிறது. எனவே, மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு ராஜதந்திர உத்திகளைப் பயன்படுத்தி உடனடி தீர்வு காண்பதே நலன் பயக்கும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x