Published : 11 Dec 2024 03:15 AM
Last Updated : 11 Dec 2024 03:15 AM
தொழில்நுட்ப வசதிகள் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெறும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதில், பொது இடங்களில் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியே வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. பொது இடங்களில் மொபைல் போன்களை சார்ஜ் செய்வதன் மூலம், வங்கி விவரங்கள் மற்றும் முக்கியமான தகவல்களை பொதுமக்கள் இழக்க நேரிடலாம் என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு புதுமையானதாக உள்ளது.
மொபைல் எண்ணுக்கு வரும் ‘ஓடிபி’ உள்ளிட்ட விவரங்களை யாரிடமும் தர வேண்டாம்; அதன்மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடப்படும் என்ற எச்சரிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. சார்ஜிங் செய்தவன் மூலம் தகவல்கள் திருடப்படுகின்றன என்ற எச்சரிக்கை இதுவரை கேள்விப்படாத ஒன்றாகவும் புரிந்துகொள்ள கடினமானதாகவும் உள்ளது.
சுவர் சாக்கெட்டுகளில் மட்டும் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய வேண்டும். மற்ற பொது இடங்களில் சார்ஜ் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. சார்ஜிங் செய்யும்போது என்ன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எப்படி தகவல்களை திருடுகின்றனர் என்பதை சாதாரண மக்களால் புரிந்துகொள்ள முடியாது. தொழில்நுட்ப வல்லுநர்களால் மட்டுமே இதுபோன்ற விஷயங்களை புரிந்துகொள்ள முடியும். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஆம்னி பேருந்துகள், தற்காலிக தங்குமிடங்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள் போன்ற பல இடங்களில் பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் எது பாதுகாப்பானது, எது பாதுகாப்பற்றது என்று பிரித்துப் பார்க்கும் நிலையில் சாதாரண மக்கள் இல்லை. சைபர் குற்றங்களின் வரிசையில் சார்ஜ் செய்யுமிடத்தில் தகவல் திருட்டு என்பது புதிய வடிவமாகவே பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்து ஓய்வுபெற்றுள்ள சக்தி காந்த தாஸ் கடைசியாக அளித்த பேட்டியில்கூட, சைபர் பாதுகாப்பு மற்றும் அதுதொடர்பான அச்சுறுத்தல்கள் அனைத்து நிறுவனங்களுக்கும், குறிப்பாக ரிசர்வ் வங்கிக்கு மாபெரும் சவாலாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுபோல சாதாரண மக்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில் சைபர் குற்றங்கள் வடிவம் பெற்றுவரும் நிலையில், அவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வது என்பது சிரமமான காரியம். இதுபோன்ற தொழில்நுட்ப ரீதியான குற்றங்களைத் தடுக்க உரிய வல்லுநர்களை நியமித்து அவர்கள் மூலம் குற்றங்கள் நடப்பதையும், தகவல்களை திருடுவதற்கு இருக்கும் வாய்ப்பையும் குறைக்க வழிகாண வேண்டும். தாங்கள் எப்படி ஏமாற்றப்படுகிறோம் என்பதே தெரியாத நிலையில் உள்ளவர்களை பாதுகாப்பாக இருங்கள் என்று எச்சரிப்பது குறைந்த அளவிலேயே பலனளிக்கும். வங்கி விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை திருடும் அமைப்புகளை கண்டறியவும், அவர்களை சட்டப்படி தண்டிக்கவும் தேவையான வழிமுறைகளை, தொழில்நுட்பங்களை உரிய அமைப்புகள் உருவாக்குவதே சைபர் குற்றங்களில் இருந்து சாதாரண மக்களை காப்பதற்கான வழி!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT