Published : 18 Oct 2024 06:17 AM
Last Updated : 18 Oct 2024 06:17 AM
சமகால நிகழ்வுகளுடனான பொருத்தப்பாட்டுடன் அமைந்துவிடும் அங்கீகாரங்கள் மதிப்பு மிக்கவை. அந்த வகையில், அணு ஆயுதத் தாக்குதல் பதற்றம் அதிகரித்திருக்கும் இன்றைய சூழலில், அணு ஆயுதங்களுக்கு எதிராகப் போராடிவரும் ‘நிஹான் ஹிடாங்க்யோ’ என்னும் ஜப்பானிய அமைப்பினருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுஇருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
ஜப்பானில் அமெரிக்கா நிகழ்த்திய அணு ஆயுதத் தாக்குதலின் 80ஆவது நினைவு நாள் அடுத்த ஆண்டில் அனுசரிக்கப்படவிருக்கும் நிலையில், இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அணு ஆயுதம் இல்லா உலகம் என்னும் இலக்கை எட்டுவதற்காக உழைத்துவரும் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரும், ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா நிகழ்த்திய அணுகுண்டுத் தாக்குதலில் எப்படியோ உயிர் பிழைத்தவர்கள்.
அணுகுண்டுக் கதிர்வீச்சு காரணமாக உடல் ரீதியாக ஏராளமான பாதிப்புகளுக்குள்ளான இவர்கள் ‘ஹிபாகுஷா’ என்னும் பெயரில் விளிக்கப்படுகின்றனர். இன்றைய போர்ப் பதற்றம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவிக்கும் இந்த அமைப்பினரின் கதை உலகையே உலுக்கக்கூடியது!
இரக்கமற்ற தாக்குதல்: இரண்டாம் உலகப் போரின்போது முக்கிய எதிரியான ஜெர்மனியைவிடவும் அமெரிக்காவின் கண்களை உறுத்திக்கொண்டிருந்த நாடு ஜப்பான்தான். அணுகுண்டு வீசித் தாக்குதல் நடத்தும் அளவுக்கு ஜப்பான் மீது அமெரிக்கா வஞ்சம் வைக்க ‘பேர்ல் ஹார்பர்’ மீதான அதிரடித் தாக்குதல் ஒரு காரணம். அத்துடன், ஒரு காலத்தில் தனது மறைமுக உதவியைப் பெற்று வளர்ந்த ஜப்பான், ஆசியாவில் தனக்கு வணிகப் போட்டியாளராக உருவெடுத்ததும் அமெரிக்காவின் ஆத்திரத்துக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
1945 ஆகஸ்ட் 6இல் ஹிரோஷிமா மீது, ‘லிட்டில் பாய்’ என்கிற அணுகுண்டும், ஆகஸ்ட் 9இல் நாகசாகி மீது ‘ஃபேட் மேன்’ என்கிற அணுகுண்டும் வீசப்பட்டன. இரு நகரங்களிலும் தலா 1.2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அந்த அணுகுண்டுகளின் கதிர்வீச்சு காரணமாக ஏற்பட்ட பல்வேறு பாதிப்புகளால் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.
முடக்கப்பட்ட குரல்கள்: இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், மறுகட்டமைப்பு என்ற பெயரில் 1945 – 1952 காலக்கட்டத்தில் ஜப்பானில் அமெரிக்காவின் ஆதிக்கம் வியாபித்திருந்தது. அப்போது அணுகுண்டு வீச்சுப் பாதிப்பு குறித்துப் பேசவே ஹிபாகுஷாக்களால் இயலவில்லை.
கூடவே, புற்றுநோய், தோல் நோய்கள், கருச்சிதைவு, சிசு இறப்பு என ஏராளமான பாதிப்புகளுக்கு ஆளான அவர்களும் அவர்களது சந்ததியினரும் சமூகரீதியிலான புறக்கணிப்பையும் எதிர்கொள்ள நேர்ந்தது. திருமண உறவு முதல் வேலைவாய்ப்பு வரை பல்வேறு தளங்களில் அவர்களில் பலர் ஒதுக்கிவைக்கப்பட்டனர்.
1956இல் ஹிபாகுஷாக்கள் ஒருங்கிணைந்து தங்கள் கனத்த மெளனத்தைக் கலைத்தனர். நிஹான் ஹிடாங்க்யோ அமைப்பை நிறுவி, அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய அறப்போரைத் தொடங்கினர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்குச் சென்று தங்கள் கண்ணீர்க் கதைகளை விவரித்தனர்.
1976இல் நிஹான் ஹிடாங்க்யோவின் பிரதிநிதியாக டெடுமி தனாகா அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அணுகுண்டு வீச்சு தொடர்பாகப் பலருக்குச் சரியான தகவல் தெரியவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து ஐநா அவையே சரியான தகவல்களைக் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். எனினும், இந்த அமைப்பின் முயற்சியால் அணு ஆயுதம் தொடர்பான விழிப்புணர்வு உலக நாடுகளிடம் பரவலாக்கப்பட்டது.
அதேவேளையில், வரலாற்றின் மிக மோசமான பேரழிவுக்குப் பின்னரும் அணுசக்தித் துறையில் அமெரிக்கத் தொழில்நுட்பங்களையும் நிதி உதவியையும் ஜப்பான் சார்ந்திருந்தது வரலாற்றின் விநோதங்களில் ஒன்று. 2011இல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகிய பேரிடர்களின்போது ஃபுகுஷிமா அணு உலையில் நிகழ்ந்த விபத்து, அணு ஆபத்து குறித்த உரையாடல்களை மீண்டும் தொடங்கிவைத்தது.
சமகாலச் சூழல் மீதான பார்வை: அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது தொடர்பாகப் பேசிய நிஹான் ஹிடாங்க்யோ அமைப்பின் தலைவர் தொஷியுகி மிமாகி, காஸாவில் அமைதியை நிலைநாட்டப் போராடுபவர்கள் இந்த விருதை வென்றிருக்க வேண்டும் எனக் கூறியிருப்பது, இந்த அமைப்பின் உன்னத நோக்கத்துக்கு ஒரு சான்று.
காஸாவில், உடலெங்கும் ரத்தம் வழியும் குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் தங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் காட்சிகள் 80 ஆண்டுகளுக்கு முந்தைய ஜப்பானின் காட்சிகளைத் தனக்கு நினைவூட்டுவதாகக் கண்ணீருடன் தெரிவித்திருக்கிறார் மிமாகி.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், காஸா மீதான இஸ்ரேலின் போர் என இரண்டு போர்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், அணு ஆயுத அச்சுறுத்தல்கள் அதிகரித்திருக்கின்றன. உக்ரைனில் மட்டுமல்லாமல், ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் அணு ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று எச்சரித்திருக்கும் ரஷ்ய அதிபர் புடின், அணு ஆயுதம் இல்லாத நாடு ரஷ்யாவைத் தாக்கினாலும், அந்நாட்டின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டிவருகிறார்.
ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் ஆத்திரமடைந்திருக்கும் ஈரான் மேலும் சினம் கொண்டு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடலாம் என்ற அச்சமும் பரவலாக எழுந்திருக்கிறது. ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் அணு உற்பத்தி மையங்கள், எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தூபம் போடுவது கவனிக்கத்தக்கது.
குலைந்துபோன நம்பிக்கை: ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடைசெய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஈரான் அணு ஒப்பந்தம் ஒபாமா ஆட்சிக் காலத்தில் 2015இல் கையெழுத்தானது. அமெரிக்காவுடன் ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் ஈரானுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால், ஆரம்பம் முதலே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துவந்த டிரம்ப், “வரலாற்றிலேயே மிக மோசமான ஒப்பந்தம்” என அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் முழங்கினார்.
அவர் அதிபரான பின்னர் 2018இல் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது. மீண்டும் அந்த ஒப்பந்தம் உயிர் பெறுமா என்னும் எதிர்பார்ப்புகள் நிலவினாலும், ஜோ பைடன் அரசு அதில் அதிக முனைப்புக் காட்டவில்லை என்று விமர்சிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் ஈரானுடன் இஸ்ரேல் மல்லுக்கு நிற்பதால், இனி அந்த ஒப்பந்தத்துக்குள் ஈரான் வரும் என்கிற நம்பிக்கையும் குலைந்திருக்கிறது.
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருந்தால் சர்வதேச அளவில் பல்வேறு பிரச்சினைகள் நடைபெறாமல் தடுக்கப்பட்டிருக்கும். ஈரான் அரசின் ஆதரவுடன் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்காது என ஒபாமா ஆட்சியின்போது துணைப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பெஞ்சமின் ஜே.ரோட்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அமெரிக்கா - ரஷ்யா இடையிலான பனிப்போர்க் காலத்திலும் இரண்டு வல்லரசுகளுக்கும் இடையிலான அணு ஆயுத மோதல் நடக்கலாம் என்கிற அச்சுறுத்தல் முக்கியப் பங்கு வகித்தது. இன்றைய தேதியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் அணு ஆயுதம் வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. இதில் பல நாடுகள் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன.
ஹிரோஷிமா, நாகசாகி பேரழிவுக்குப் பிறகு உலகில் எங்கும் அணு ஆயுதத் தாக்குதல் நடைபெறவில்லை என்றாலும் அணு ஆயுத நாடுகள் அவற்றை நவீனப்படுத்துவதில் ஆர்வம் செலுத்துவதாகவும், வேறு பல நாடுகளும் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் இடம்பெற முயல்வதாகவும் நோபல் பரிசுக் குழு கவலையுடன் தெரிவித்திருக்கிறது.
போரில் ஈடுபடும் நாடுகளைத் தார்மிகரீதியில் கண்டிப்பதைத் தாண்டி, அவற்றின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கும் நிலையில் ஐநா அவை வலுவாக இல்லை என்பதால், தற்காப்புக்காக அணு ஆயுதங்களைத் தயாரிக்கவோ, அணு ஆயுத நாடுகளைச் சார்ந்திருக்கவோ வேண்டிய நிலையில் பல நாடுகள் இருக்கின்றன.
இப்படி அணு ஆயுதம் தொடர்பான சர்ச்சைகள், போர்ச் சூழல் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில்தான், ஹிபாகுஷாக்களுக்கு அமைதி நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. “நாங்கள் உயிருடன் இருக்கும்போதே அணு ஆயுதங்களை ஒழித்துவிடுங்கள்” என நிஹான் ஹிடாங்க்யோ அமைப்பின் தலைவர் மிமாகி உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
குழந்தைகள் மீதும், மருத்துவமனைகள் மீதும் ஏவுகணை வீசிப் படுகொலை செய்யத் தயங்காத நாடுகள், சர்வதேச அரங்கில் துணிச்சலுடன் வலம் வரும் நிலையில், மனித குலத்தின் அடிப்படை விழுமியங்களைக் கைவிடாமலிருக்கக் கோரும் இதுபோன்ற இறைஞ்சல்கள் செவிமடுக்கப்படுமா என்ன?
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT