Published : 10 Aug 2014 12:44 PM
Last Updated : 10 Aug 2014 12:44 PM
வட இந்தியாவில் ஆங்கிலத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் திடீர் போராட்டங்களையும், மத்திய அரசின் உடனடி அறிவிப்புகளையும் பார்த்தால், இந்தி அரசியலை மையப்படுத்தி, மாணவர்கள் களத்தில் இறக்கப் படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்திய அரசின் ஆட்சிப் பணிக்கான தேர்வில், கிராமப்புற மற்றும் ஆங்கிலவழிக் கல்வி பயிலாதவர்களுக்குப் பாதகமான சூழலை ஏற்படுத்துவதாகக் கூறிக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள் அந்த மாணவர்கள். திறனறித் தேர்வே வேண்டாம் என்கிறார்கள் மாணவர்கள். அரசு உடனே சொல்கிறது, “ஆங்கிலப் புலமைக்குக் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ள மாட்டோம்; இந்தியில் அந்த வினாக்களைக் கேட்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன” என்று. என்ன நடக்கிறது இங்கே?
இந்தியை அரசின் நிர்வாக மொழியாகவும், இந்தியாவின் இணைப்பு மொழியாகவும் உருவாக்க வேண்டும் என்பதில் மோடி நிர்வாகம் பல முயற்சிகளை எடுத்துவருகிறது. பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் பதவிப் பிரமாண உறுதிமொழிப் பத்திரத்தில் போட்ட கையெழுத்தின் ஈரம் காயும் முன்னரே, அனைத்து மாநிலங்களிலும் பணியாற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியது. மத்திய அரசு அதிகாரிகள் அலுவல் தொடர்பாக சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும்போது, இந்தியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னது அந்தச் சுற்றறிக்கை. இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் அரசு பின்வாங்கியது.
பஹுத் அச்சா!
15 நாட்களுக்கு முன்பு, டெல்லியில் இந்திய பதிவுத் துறைத் தலைவரோடு இணைந்து, உலக மக்கள்தொகை விழாவை ஐ.நா. சபை கொண்டாடியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்தான் முக்கியப் பேச்சாளர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், தன் உரை முழுவதையும் சுமார் 40 நிமிடங்கள் இந்தியில் பேசிவிட்டு அமர்ந்தார் ராஜ்நாத் சிங். அவரது இந்தி உரைக்கு உடனடியாக ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்யப்படவில்லை. அந்த உரையின் சாராம்சத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு வழங்கவும் இல்லை. மேடையில் அமர்ந்திருந்த ஐ.நா-வின் பிரதிநிதிக்கும், யுனிசெஃப் நிறுவனத்தின் சர்வதேசப் பிரதிநிதிக்கும் அமைச்சர் என்ன பேசினார் என்பதே புரியவில்லை. ஐ.நா. சம்பந்தப்பட்ட விழாவாக இருந்ததால், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் அநேகர் கலந்துகொண்டனர். அவர்களுக்கும் அமைச்சர் உரையின் விவரங்கள் புரியவில்லை.
“அமைச்சர் என்ன சொன்னார்” என்று ஐ.நா-வின் பிரதிநிதி அங்கிருந்த வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் கேட்டார். “அமைச்சரின் இந்தி உரையின் ஆங்கில மொழியாக்கம் தனக்கு வேண்டும்” என்று யுனிசெஃப் பிரதிநிதி கேட்டார். வெளியுறவுத் துறை அதிகாரிகள் உள்துறை அதிகாரி களிடம் கேட்டார்கள். உள்துறை அதிகாரிகள் அலட்சிய மாக, “இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டவர்கள் இந்தியைத் தெரிந்துகொண்டு வர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்” என்ற பதிலைச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர்.
நமது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சில தினங்களுக்கு முன்பு வெளிநாட்டுத் தூதர்கள் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில், வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினரைக் குறித்த நமது மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுக்க இந்தியிலேயே விளக்கினார். அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட வெளிநாட்டுத் தூதர் களுக்கு அந்த உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பும் வழங்கப்படவில்லை. நமது மத்திய அமைச்சர்களுக்கு இந்தி மொழியின் மீது இருக்கும் மோகத்துக்குச் சில உதாரணங்கள் இவை.
வட இந்தியக் கட்சிகளின் உள்நோக்கம்
மத்திய அரசின் இந்தி மொழி ஆதரவு-ஆங்கில மொழி எதிர்ப்பு என்ற இந்த நிலைப்பாட்டை வட மாநிலங்களில் உள்ள சமாஜ்வாதி கட்சி, ஐக்கிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் வலுவாக ஆதரிக்கின்றன என்பது இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.
இந்தி நமக்கு எதிரி அல்ல. அதே சமயம், ஆங்கிலத்தை அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியை அமர வைக்கத் துடிக்கும் இவர்களின் ஆர்வக்கோளாறால், நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதகங்களையும், வளரும் தலைமுறைக்கு ஏற்படக்கூடிய இழப்புகளையும் சுட்டிக்காட்டும் கடமை நமக்கு உண்டு.
மொழிகள் பலவிதம்
இந்தியாவில் இன்று பேச்சுவழக்கில் 406 மொழிகள் உள்ளன. பல மொழிகளைப் பேசும் மக்கள் உள்ள நாடு இந்தியா மட்டுமல்ல. இந்தோனேசிய மக்கள் 706 மொழிகளைப் பேசுகிறார்கள். சீனாவில் பேச்சுவழக்கில் 298 மொழிகள் உள்ளன. மிகச் சிறிய காமரூன் நாட்டில்கூட 280 மொழிகள் உள்ளன. ஆனால், இந்த நாடுகளோடு இந்தியா மாறுபடுகிறது. மற்ற நாடுகளில் ஒரு மொழி பேசும் மக்கள் மிகப் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.
உதாரணமாக, சீனாவின் 130 கோடி மக்களில் 98 சதவீதத்தினர் சீன மொழியை (பல வடிவங்களில்) மட்டுமே பேசுகின்றனர். இந்தியா அப்படியல்ல. 42 கோடி மக்கள் இந்தி பேசுகிறார்கள். வங்க மொழியை 8 கோடி மக்களும் தெலுங்கை 7.4 கோடி மக்களும், தமிழை 6 கோடி மக்களும் தங்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். அதாவது, இந்தி பேசும் மக்களைவிட, இந்தி அல்லாத மற்ற இந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்தான் அதிகம் (40 : 60). இத்தகைய சூழலில், தங்கள் தாய்மொழியைத் தவிர, மற்றொரு மொழியை இந்தியர்கள் அனைவரும் அறிந்துகொள்வது மிக அவசியம். அந்த மொழி ஆங்கிலமாக இருக்கும் என்றால், அதனுடைய பயனும் வாய்ப்புகளும் மிக அதிகம்.
இன்று உலகின் 99 நாடுகளில், 33.5 கோடி மக்கள் பேசும் மொழி ஆங்கிலம். இதுதவிர 50.5 கோடி மக்கள் இன்று உலகில் ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் அறிவு பெற்றுள்ளவர்கள்.
2020-ம் ஆண்டு முடியும்போது, உலக மக்கள்தொகையில் 200 கோடி மக்கள் ஆங்கிலம் பேசவும் எழுதவும் தெரிந்தவர் களாக இருப்பார்கள். தொழில்துறைகள் தொடர்பான பரிமாற் றங்கள் உலக அளவில் 55% ஆங்கிலத்திலேயே இருக்கும்.
இப்படிப்பட்ட சூழலில், ஐ.ஏ.எஸ். தேறி, நாளை பல்வேறு மாநிலங்களிலும் பணியாற்றச் செல்லவிருப்பவர்களுக்கு 10-ம் வகுப்பு மாணவர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆங்கில அறிவுகூடத் தேவையில்லை என்று எங்கள் பிரதமரே நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?
தேர்தல்கள் வரும், போகும். ஆனால், தலைமுறைகள் என்னவாகும்?
- சா. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT