Last Updated : 03 May, 2024 07:39 PM

 

Published : 03 May 2024 07:39 PM
Last Updated : 03 May 2024 07:39 PM

என்டிஏ Vs இண்டியா கூட்டணி - ஜார்க்கண்ட்டில் முந்துவது யார்? | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.

ஜார்க்கண்ட் என்றால் வனநிலம் என்று அர்த்தம். பிஹாரின் தெற்குப் பகுதியாக இருந்து வந்த இந்த பிரதேசம், வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 2000, நவம்பர் 15 அன்று ஜார்க்கண்ட் என்ற தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. மாநிலத்தின் முதல் முதல்வராக பாஜகவின் பாபுலால் மராண்டி பொறுப்பேற்றார். ராஞ்சியை தலைநகராகக் கொண்ட இந்த மாநிலத்தில் 24 மாவட்டங்கள், 14 மக்களவைத் தொகுதிகள், 81 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. காடுகளும் மலைகளும் அதிகம் நிறைந்த இந்த மாநிலத்தில், பழங்குடியின மக்கள் அதிகம் வாழ்கிறார்கள்.

பரப்பளவில் நாட்டின் 15வது பெரிய மாநிலமான ஜார்க்கண்ட், மக்கள்தொகையில் நாட்டின் 14வது பெரிய மாநிலமாக உள்ளது. 2011
மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஜார்க்கண்ட்டில், 3 கோடியே 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் 76% மக்களும், நகர்ப்புறங்களில் 24% மக்களும் வாழ்கிறார்கள். இவர்களில், இந்துக்கள் 67.83%, முஸ்லிம்கள் 14.53%, கிறிஸ்தவர்கள் 4.30%, பிற மதத்தவர்கள் 12.84% வசிக்கிறார்கள். பட்டியல் சமூக மக்கள் 12.08%, பட்டியல் பழங்குடியின மக்கள் 26.2`% வசிக்கிறார்கள்.

மாநிலத்தின் எழுத்தறிவு 66.41%. இதில், ஆண்களின் எழுத்தறிவு 76.84% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 55.42% ஆகவும் உள்ளது. பாலின விகிதத்தை கணக்கில் கொண்டால் இங்கு ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள். அங்கிகா, பெங்காளி, போஜ்பூரி, காரியா, மைதிலி என பல மொழிகள் இம்மாநிலத்தின் உள்ளூர் மொழிகளாக உள்ளன. அதேநேரத்தில், மக்களின் இணைப்பு மொழியாக இந்தி உள்ளது. அதுவே அலுவல் மொழியாகவும் உள்ளது.

மாநிலம் உருவானதில் இருந்து பாஜகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுமே இம்மாநிலத்தை ஆட்சி செய்து வருகின்றன. பாபுலால் மராண்டி, அர்ஜூன் முண்டா, மது கோடா, சிபு சோரன், ரகுபர் தாஸ், ஹேமந்த் சோரன் ஆகியோர் இம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சம்பாய் சோரன் முதல்வராக இருக்கிறார்.

தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பல மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என ஜார்க்கண்ட்டில் 60க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. எனினும், பாரதிய ஜனதா கட்சி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு(AJSU), ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை முக்கிய அரசியல் சக்திகளாக உள்ளன. ஜார்க்கண்ட்டின் தற்போதைய தேர்தல் களம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பாக, கடந்த சில தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பாஜக, 40.71% வாக்குகளுடன் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 9.42% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 13.48% வாக்குகளைப் பெற்ற போதிலும், ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை.

2014 சட்டப்பேரவைத் தேர்தல்: மக்களவைத் தேர்தலை அடுத்து நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக ஒரு அணியாகவும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒரு அணியாகவும், காங்கிரஸ் ஒரு அணியாகவும் போட்டியிட்டன. இந்த மும்முனைப் போட்டியில், 72 இடங்களில் போட்டியிட்ட பாஜக 35 இடங்களில் வெற்றி பெற்றது. 8 இடங்களில் போட்டியிட்ட பாஜகவின் கூட்டணி கட்சியான AJSU 5 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, பாஜகவின் ரகுபர் தாஸ் முதல்வராக பொறுப்பேற்றார். எதிர்க்கட்சிகள் தரப்பில் 79 இடங்களில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 17 தொகுதிகளிலும், 62 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், 73 தொகுதிகளில் போட்டியிட்ட ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில், பாஜக 13 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான AJSU ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. எதிர்தரப்பில் காங்கிரஸ்(7 தொகுதிகள்), ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா(4), ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா(2), ராஷ்ட்ரிய ஜனதா தளம்(1) ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில், பாஜக 51.60% வாக்குகளுடன் 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணி கட்சியான AJSU 4.38% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. 15.82% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், 11.66% வாக்குகளைப் பெற்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

2019 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தலை அடுத்து நவம்பரில் நடைபெற்ற இந்த பேரவைத் தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகியவை கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாஜக 79 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். பாஜக, 25 தொகுதிகளிலும், 81 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா 3 தொகுதிகளிலும், 53 தொகுதிகளில் போட்டியிட்ட AJSU 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில், ஜார்க்கண்ட்டில் தற்போதைய தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம். ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 13ம் தேதி 4 தொகுதிகளுக்கும், மே 20ம் தேதி 3 தொகுதிகளுக்கும், மே 25ம் தேதி 4 தொகுதிகளுக்கும், ஜூன் 1ம் தேதி 3 தொகுதிகளுக்கும் என தேர்தல் நடைபெறுகிறது.

2024 மக்களவைத் தேர்தல்: இந்த தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இண்டியா கூட்டணி என இரு அணிகள் மோதுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 13 தொகுதிகளிலும், AJSU ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இண்டியா அணியில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 5 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும், சிபிஐ(எம்எல்)(எல்) ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும், காங்கிரசும் கூட்டணி அமைத்திருப்பதால், போட்டி கடுமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

அதேநேரத்தில், மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதால், அது இண்டியா கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஒரு சிலர் கணிக்கின்றனர். ஹேமந்த் சோரனின் கைது பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்ற பிரச்சாரம் வலுவடையுமானால் அது இண்டியா கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்றும் ஒரு கணிப்பு உள்ளது.

கருத்துக் கணிப்பு முடிவுகள்: ஜார்க்கண்ட்டில் இதுவரை 7 கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்த கூட்டணி குறைந்தபட்சம் 9 தொகுதிகளிலும், அதிகபட்சம் 13 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இண்டியா கூட்டணி குறைந்தபட்சம் ஒரு தொகுதியிலும், அதிகபட்சம் 5 தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கணிப்புகள் கூறுகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குறைந்தபட்சம் 52% வாக்குகள் கிடைக்கும் என்றும் இண்டியா கூட்டணிக்கு குறைந்தபட்சம் 30% வாக்குகள் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரம்: பாஜக கூட்டணி மற்றும் இண்டியா அணியின் தேர்தல் பிரச்சாரம் ஜார்க்கண்ட்டில் தீவிரமடைந்துள்ளது. ஹேமந்த் சோரன் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கல்பனா சோரன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் 51வது நிறுவன தினமான கடந்த மார்ச் 4ம் தேதி கட்சியில் இணைந்த அவர், தற்போது காண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எம்டெக், எம்பிஏ பட்டதாரியான கல்பனா சோரனின் பிரச்சாரம், ஹேமந்த் சோரனின் இடத்தை இட்டு நிரப்பக்கூடியதாக உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் ஜார்க்கண்ட் முதல்வராவார் என்றும் கூறப்படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹேமந்த் சோரன் அநீதியான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வரும் கல்பனா சோரன், பாஜகவின் கொடுங்கோன்மை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும், ஹேமந்த் சோரனுக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். தேர்தலுக்கு முன்பாக ஹேமந்த் சோரன் ஜாமினில் வெளியே வருவார் என்றும், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் கல்பனா சோரன் உறுதிபட கூறி வருகிறார்.

இதனிடையே, கல்பனா சோரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஷிபு சோரனின் மூத்த மகன் மறைந்த துர்கா சோரனின் மனைவியும், ஜாமா சட்டப்பேரவை உறுப்பினருமான சீதா சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். இதையடுத்து, தும்கா மக்களவைத் தொகுதியில் பாஜக அவரை களமிறக்கியுள்ளது.

ஜார்க்கண்ட்டின் சிங்பூம் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் வெள்ளிக்கிழமை(மே 3) உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, "ஜார்க்கண்ட் தனி மாநிலம் வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய கட்சி பாஜக. எனது பிணத்தின் மீதுதான் ஜார்க்கண்ட் மாநிலத்தை உருவாக்க முடியும் என கூறிய தலைவர்கள்(லாலு பிரசாத் யாதவ்), தற்போது இண்டியா கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள்.

ஜார்க்கண்ட்டின் நீர், காடு, ஆட்சி அதிகாரம் ஆகியவை மாநிலத்தின் ஆதிவாசி சகோதர சகோதரகளுக்கானது. ஆனால், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் காங்கிரசும் அவற்றை தங்களுக்கானவை என கருதுகின்றன. அதனால்தான், அனைத்து வளங்களையும் வெளிப்படையாக சூறையாடுகின்றனர். சாராய ஊழல், மணல் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. சிறிய தலைவர்கள் முதல் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் (ஹேமந்த் சோரன்) வரை இதில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள் எந்த முகத்தோடு வாக்கு கேட்க வருகிறார்கள். ஊழலில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்ட பின்னரும் அவர்களுக்கு வெட்கமில்லை. இவர்கள்தான் தற்போது மத்தியில் ஆட்சி அமைக்க முயல்கிறார்கள். 2014க்கு முன்பு அவர்கள் நாட்டை கொள்ளையடித்ததைத் தவிற வேறு எதையும் செய்யவில்லை" என பேசினார்.

இரு அணிகளும் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், ஜார்க்கண்ட் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பது ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x