Last Updated : 18 Jan, 2024 06:19 AM

 

Published : 18 Jan 2024 06:19 AM
Last Updated : 18 Jan 2024 06:19 AM

இதய வால்வு சிகிச்சையில் புதிய ஒளி!

தீவன் சிங் டார்டி ஹரியாணா மாநிலத்தவர். பேருடல் (Morbid obesity) கொண்டவர். வயது 87. ஏற்கெனவே இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு பைபாஸ் அறுவைசிகிச்சையில் உயிர் பிழைத்திருக்கிறார். பித்தப்பையிலும் புராஸ்டேட் சுரப்பியிலும் பிரச்சினை வந்து அறுவைசிகிச்சை செய்யப்பெற்றிருக்கிறார். ஒருமுறை குடலிறக்கம் ஏற்பட, அதற்கும் அறுவைசிகிச்சைதான் தீர்வு கொடுத்துள்ளது.

டார்டிக்கு இப்போதைய பிரச்சினை சுவாசிப்பதில் சிக்கல். படுத்தால் மூச்சு முட்டுகிறது. இருமல் தொடர்ந்து தொல்லை தருகிறது. கண்ணுக்குக் கீழே, முகம், பாதம் ஆகியவற்றில் நீர் கோத்து வீங்கியுள்ளன. உள்ளூரில் இரண்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார். குருகிராமில் உள்ள ‘மெதாந்தா இதயநல நிறுவன’த்துக்குப் (Medanta Heart Institute) பரிந்துரைக்கப்பட்டார்.

ஆசியாவிலேயே புதிது: டார்டிக்கு எக்ஸ்-ரே, எக்கோகார்டியோகிராம் (Echocardiogram) உள்ளிட்ட இதயநலம் தொடர்பான எல்லாப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அவருக்குக் கடுமையான ‘இதயச் செயலிழப்பு’ (Congestive Heart Failure) ஏற்பட்டிருக்கிறது என்று அவை முடிவுகட்டுகின்றன; இதயத்தில் இரண்டு வால்வுகள் படுமோசமாகப் பழுதாகியுள்ளதுதான் காரணம் என்கின்றன.

‘உடனடியாக அறுவைசிகிச்சை செய்து பழுதான வால்வுகளைச் சீராக்க வேண்டும்’ என்கிறார் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் பிரவின் சந்திரா. ஆனால், அறுவைசிகிச்சைக்கான உடல் தகுதி டார்டிக்கு இல்லை என்கின்றனர் மயக்க மருத்துவர்கள். எனவே, அறுவைசிகிச்சைக்குப் பதிலாக, பழுதான வால்வுகளைக் ‘கிளிப்’ போட்டுச் சரி செய்யலாம் என்று முடிவுசெய்கிறார் மருத்துவர் சந்திரா. தென்கிழக்கு ஆசியாவிலேயே முதல் முறையாக மேற்கொள்ளப்பட்ட புதிய சிகிச்சை முறை அது.

இதயத்தில் இயற்கைக் ‘கதவுகள்’! - வீட்டில் அறைக் கதவுகள் இருப்பதைப் போல் இதயத்திலும் கதவுகள் இருக்கின்றன. ஒரு பக்கமாகவே திறக்கும் இயற்கைக் கதவுகள் இவை. ‘வால்வுகள்’ என்று பெயர். இதயத்தின் வலது மேலறைக்கும் (Right Atrium) கீழறைக்கும் (Right Ventricle) நடுவில் ‘மூவிதழ் வால்வு’ (Tricuspid valve) இருக்கிறது.

இடது மேலறைக்கும் (Left Atrium) கீழறைக்கும் (Left Ventricle) நடுவில் ‘ஈரிதழ் வால்வு’ (Mitral valve) இருக்கிறது. இந்த வால்வுகள் இரண்டும் கீழ்நோக்கி மட்டுமே திறப்பதால், மேலறைகள் சுருங்கும்போது, அவற்றிலிருந்து கீழறைகளுக்கு ரத்தம் வரும். ஆனால், கீழறைகள் சுருங்கும்போது இந்த வால்வுகள் மூடிக்கொள்வதால், ரத்தம் மேலறைகளுக்குச் செல்ல முடியாது.

வலது கீழறையில் நுரையீரல் தமனி (Pulmonary artery) புறப்படும் இடத்திலும், இடது கீழறையில் மகாதமனி (Aorta) புறப்படும் இடத்திலும் ‘பிறைச்சந்திர வால்வுகள்’ (Semilunar valves) இருக்கின்றன. இவை மேல்நோக்கித் திறக்கும் வால்வுகள். அதனால், கீழறைகள் சுருங்கும்போது, அவற்றிலிருந்து ரத்தம் மேல் நோக்கித் தள்ளப்படுகிறது.

அப்போது நுரையீரல் தமனி வழியாக நுரையீரல்களுக்கும், மகாதமனி வழியாக உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் ரத்தம் செல்கிறது. அதேவேளையில், மேலறைகள் சுருங்கும்போது நுரையீரல் தமனியிலிருந்தும் மகாதமனியிலிருந்தும் ரத்தம் கீழறைகளுக்குத் திரும்பி வர முடியாது. இந்த வால்வுகள் மூடிக்கொள்வதே அதற்குக் காரணம்.

வால்வுகளில் என்ன பிரச்சினை? - டார்டியின் இதயத்தில் ஈரிதழ் வால்வும், மூவிதழ் வால்வும் பழுதாகியிருந்தன. மருத்துவ மொழியில் சொன்னால், கடுமையான ஈரிதழ் வால்வு ஒழுக்கு (Massive Mitral Valve Regurgitation); மோசமான மூவிதழ் வால்வு ஒழுக்கு (Massive Tricuspid Valve Regurgitation). ஈரிதழ் வால்வுப் பிரச்சினை மூட்டுவாதக் காய்ச்சல் (Rheumatic fever) பாதிப்பால் வருகிறது. மூவிதழ் வால்வுப் பிரச்சினை பெரும்பாலும் வயது மூப்பு காரணமாகவே வருகிறது.

டார்டிக்கு ஏற்கெனவே இருமுறை பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் இதய வால்வுகள் மோசமாகப் பழுதாகியிருந்தன. அதன் விளைவாக, மேலறைகளிலிருந்து கீழறைகளுக்கு ரத்தம் ஒழுகத் தொடங்கியது. கீழறைகள் சுருங்கும் போது ஈரிதழ் வால்வும், மூவிதழ் வால்வும்மேலறைகளைச் சரியாக அடைத்து, அவற்றிலிருந்து ரத்தம் ஒழுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமல்லவா? ஆனால், டார்டிக்குச் சரியாக மூடப்படாததண்ணீர்க் குழாய் ஒழுகுவதைப் போல, மேலறைகளிலிருந்து கீழறைகளுக்கு ரத்தம் ஒழுகி ஒழுகிக் கீழறைகள் இரண்டும் பலூன்போல் வீங்கிவிட்டன. கீழ் இதயத்தின் உந்துவிசை குறைந்துவிட்டது. உடலுக்குள்ளும் நுரையீரல்களுக்கும் தேவையான ரத்தம் செல்ல முடியவில்லை.

உயிரைக் காப்பாற்றிய புதிய சிகிச்சை! - பொதுவாக, பெரும்பாலான பயனாளிகளுக்கு ஈரிதழ் வால்வு மட்டும் பிரதானமாகப் பழுதாகியிருக்கும். அப்போது அறுவைசிகிச்சை மேற்கொள்வார்கள். அல்லது ‘மைட்ராகிளிப்’ (MitraClip) எனும் சிறப்பு கிளிப்பைப் பொருத்திச் சரி செய்வார்கள். ஆனால், டார்டிக்கு வித்தியாசமாக ஈரிதழ் வால்வும் பழுது; மூவிதழ் வால்வும் பழுது. இரண்டையும் ஒரே சமயத்தில் சீராக்கினால்தான் அவருக்கு இதயப் பிரச்சினை தீரும்; உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

ஆனால், இந்தியாவில் ஈரிதழ் வால்வைச் சீராக்க மட்டுமே ‘மைட்ராகிளிப்’ உள்ளது. மூவிதழ் வால்வைச் சீராக்கும் கிளிப் அமெரிக்காவில்தான் கிடைக்கிறது. அதை இந்தியாவுக்கு வரவழைக்கும்வரை டார்டியின் உடல்நிலை தாங்காது என்ற நிலையில், ஈரிதழ் வால்வைச் சீராக்கும் ‘மைட்ராகிளிப்’பையே மூவிதழ் வால்வைச் சீராக்கவும் பயன்படுத்தலாம் என்று மருத்துவர் சந்திரா சமயோசிதமாக முடிவு செய்தார்.

வேறுபட்ட இரண்டு வால்வுகள் இதயத்தில் ஒரேவேளையில் பழுதாகும்போது, இப்படியொரு சிகிச்சையை மேற்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை. காரணம், இந்த வால்வுகள் இரண்டும் ஒன்றுபோல் இருப்பதில்லை. அவற்றின் அமைப்பில் வித்தியாசம் உண்டு. ஆனால், மருத்துவர் சந்திரா துணிச்சலுடன் செயல்பட்டார்.

எப்படிச் சாத்தியமானது? - ‘மைட்ராகிளிப்’பை உடலுக்குள் செலுத்தத் தனிக் கருவி இருக்கிறது. அதிலுள்ள வழிகாட்டு வயரின் (Guide wire) முனையில், துணி காயவைக்கும் கிளிப் வடிவத்தில் ஒரு ‘கிளிப்’ பொருத்தப்பட்டிருக்கிறது. டார்டிக்குக் காலில் உள்ள சிரைக்குழாய் வழியாக ஒரு வளைகுழாயை (Catheter) நுழைத்து, அதனுள் வயருடன் கூடிய ‘மைட்ராகிளிப்’பைச் செலுத்தி இதயத்தை நோக்கித் தள்ளினார் மருத்துவர் சந்திரா. அது செல்லும் பாதையை எக்ஸ்-ரேயிலும் மீயொலி அலை ஸ்கேனிலும் (Ultra sound scan) சரிபார்த்துக்கொண்டார்.

மைட்ராகிளிப் இதயத்தை அடைந்ததும், முதலில் ஈரிதழ் வால்வில் அதைச் சரியாகப் பொருத்தினார்; பிறகு, மூவிதழ் வால்வில் பொருத்தினார். மூவிதழ் வால்வில் மூன்று இதழ்கள் உண்டு. ஆகவே, அங்கு மட்டும் மூன்று ‘கிளிப்’களைப் பொருத்தினார். ஒழுகும் மூக்கைக் ‘கிளிப்’ கொண்டு அடைத்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்துகொள்ளுங்கள். அதுபோலத்தான் டார்டியின் ஒழுகும் வால்வுகளை மருத்துவர் சந்திரா கச்சிதமாக அடைத்தார்.

அதன் பலனால், அவரின் இதயத்தில் ரத்த ஒழுக்கு நின்றது. அடுத்த மூன்று நாள்களில் அவருக்கு மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறையத் தொடங்கின. இப்படி, இந்தியாவில் ஒரு மருத்துவரின் சமயோசிதமான முடிவால் இறப்பின் விளிம்பிலிருந்த ஓர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அது, இதய வால்வு அறுவைசிகிச்சை மேற்கொள்ள உடல் தகுதி இல்லாதவர்களுக்குப் புதிய ஒளியைப் பாய்ச்சியுள்ளது.

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

To Read in English: A beacon of hope in heart valve surgery

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x