Published : 04 Jan 2024 06:13 AM
Last Updated : 04 Jan 2024 06:13 AM

புத்தகத் திருவிழா 2024 | செம்மை: 100 சிறுகதைகள்

செம்மை: 100 சிறுகதைகள்
இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு
பதிப்பு: வீ.அரசு
சீர் வாசகர் வட்டம்
விலை: ரூ.500

1930களில் புதுமைப்பித்தனில் தொடங்கி 2000 வரை எழுபது ஆண்டுகளில் தமிழில் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர்கள் நூறு பேரின் சிறந்த கதைகளை, ‘இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு’ என்கிற தலைப்பில் சீர் வாசகர் வட்டம் மக்கள் பதிப்பாக வெளியிட்டுள்ளது.

1,064 பக்கங்கள் கொண்ட இந்நூலின் பதிப்பாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு. முதல் 2,000 படிகள் ரூ.300 சலுகை விலையில் விற்கப்பட்டன; அடுத்த பதிப்பு ரூ.500க்கு விற்கப்படுகிறது.

ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நூலின் ஒவ்வொரு பகுதியிலும் 20 கதைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சிறுகதையின் அனைத்து வடிவங்களையும் வகைமைகளையும் கவனத்தில் கொண்டு, ஒரு விரிவான அறிமுகத்தோடு இந்நூல் உருவாகியிருக்கிறது.

சிறப்பு: ஆணவக் கொலைகளின் கள சாட்சியம்
சாதியின் பெயரால்
இளங்கோவன் ராஜசேகரன்
தமிழில்: மருதன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ.260

சாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. இதுவரை இந்த ஆணவக் கொலைகளுக்குச் சாதி மட்டுமே காரணமாகக் கருதப்பட்டுவந்த நிலையில், ஒடுக்கப்பட்ட ஒரே சாதிக்குள்ளே ஆணவக் கொலைகள் 2023இல் அரங்கேறியதன் மூலம், சாதியோடு பொருளாதாரமும் ஆணவக் கொலைகளுக்குக் காரணமாக இருப்பது தெளிவாகிவிட்டது.

40 ஆண்டு கால அனுபவம் பெற்ற இதழியலாளரான இளங்கோவன் ராஜசேகரன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த ஆணவக் கொலைகள் குறித்துக் கள ஆய்வு செய்து, சமூகமும் அரசும் செய்யத் தவறியவை என்னென்ன, செய்ய வேண்டியவை என்னென்ன என்பதை ‘ஃபிரன்ட்லைன்’ இதழில் எழுதிய கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இந்நூல்.

எப்படி ஒரு விஷயத்தை அணுக வேண்டும் என்கிற பாடத்தையும் இன்றைய இதழியலாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது இந்நூல். ஒவ்வொரு கட்டுரை முடியும்போதும் கொலையுண்டவர்கள் ‘எங்களை ஏன் கைவிட்டீர்?’ என்று நம்மை உலுக்கியெடுக்கிறார்கள்.

இந்து தமிழ் திசை வெளியீடு: கணை ஏவு காலம்
பா.ராகவன்
விலை: ரூ.230
அரங்கு எண்கள்: 50, 51 / 540, 541

இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து எழுத்தாளர் பா.ராகவன் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் எழுதிய ‘கணை ஏவு காலம்’ தொடரின் புத்தக வடிவம் இந்நூல். இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே இப்பிரச்சினையின் பின்னணியை விரிவாக எழுதியவர்.

யுத்த பூமியில் அமைதி திரும்பும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் தவறாது வாசிக்க வேண்டிய நூலாக ‘கணை ஏவு காலம்’ வெளிவந்துள்ளது.

அயல் செல்லும் தமிழ் - ‘சாதியும் சமயமும்’ ஆங்கிலத்தில்...
Caste and Religion
A.Sivasubramanian
ஆங்கிலத்தில்: S.Thillainayagam
வெளியீடு: கலப்பை பதிப்பகம்
விலை: ரூ.80

நாட்டார் வழக்காற்றியல் முன்னோடி நா.வானமாமலையின் மாணவரான பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், தமிழ்நாட்டின் முக்கியமான பண்பாட்டு ஆய்வாளர். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்தும் ஆவணப்படுத்தியும் வரும் சிவசுப்பிரமணியனின் ‘சாதியும் சமயமும்’ (பரிசல் வெளியீடு) நூலைப் பேராசிரியர் தில்லைநாயகம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

பெரியார், மறைமலையடிகள், ஆறுமுக நாவலர், பண்பாட்டுக் கருத்தியல், தீண்டாமை, உணவு முறை, தமிழ் நிலத்துச் சமய வழக்கம், கடலோடிகளின் வாழ்க்கை முறை எனப் பலதரப்பட்ட தலைப்புகளில் அமைந்துள்ள இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து சிவசுப்பிரமணியனின் எழுத்துகள் ஆங்கிலத்துக்கு அதிகம் செல்ல வேண்டும்.

முத்துகள் 5

இசைத் தமிழும்
நாடகத் தமிழும்
முனைவர் அரிமளம் சு.பத்மநாபன்
எழுத்து பிரசுரம்
விலை: ரூ.370

இந்தியாவில் இடதுசாரியம்
ச.ஜனார்த்தனன்
படி வெளியீடு
விலை: ரூ.400

வெல்கம் டு மில்லெனியம்
அரவிந்தன்
காலச்சுவடு
விலை: ரூ.180

1919ல் இது நடந்தது: ஸாதத் ஹஸ்ஸன் மண்டோ சிறுகதைகள்
உருது மூலம் தமிழில்: பென்னேசன்
சுவாசம் வெளியீடு
விலை: ரூ.320

தமிழ் நாடக சாமி
பேரா. சு.சண்முகசுந்தரம்
காவ்யா
விலை: ரூ.200

47 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறும் அனைத்து நாள்களும் ‘இந்து தமிழ் திசை’ கருத்துப்பேழைப் பக்கத்தில் சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளிவந்துள்ள புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படும். பதிப்பகங்கள், தங்களுடைய புதிய நூல்களை இந்து தமிழ் திசையின் சென்னை அலுவலகத்துக்கு இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். அனுப்பப்படும் புத்தகங்கள் மட்டுமே புத்தகக் காட்சி சிறப்புப் பக்கத்தில் அறிமுகம் செய்யப்படும். புத்தகங்களை அனுப்ப வேண்டிய முகவரி: இந்து தமிழ் திசை, 124, கஸ்தூரி மையம், வாலாஜா சாலை, சென்னை 600 002.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x