Published : 29 Dec 2023 12:41 PM
Last Updated : 29 Dec 2023 12:41 PM

சர்ச்சை ஆளுநர் முதல் பொம்மனும் பெள்ளியும் வரை: 2023-ல் கவனம் ஈர்த்தவர்கள் @ தமிழ்நாடு

சர்ச்சை ஆளுநர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் வாசித்த ஆளுநர் உரையில், சில வாக்கியங்களைத் தவிர்த்ததும் புதிதாகச் சிலவற்றைச் சேர்த்ததும் சர்ச்சையானது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தன்னிச்சையாக அமைச்சரவையிலிருந்து ஆளுநர் நீக்கினார். பிறகு, அந்த உத்தரவை அவரே நிறுத்தி வைத்தார். உச்சக்கட்டமாக சட்டப்பேரவையில் அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆண்டுகள் கடந்தாலும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

பதவியிழந்த அமைச்சர்: அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையில் இருக்கும் நிலையில், இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வது சர்ச்சையானது. இதேபோல 2006-2011 ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறை மற்றும் கனிமவளத் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, ரூ.1.72 கோடி சொத்துக் குவித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திமுக அரசில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியிழந்த முதல் நபராகியிருக்கிறார் பொன்முடி.

வாழ்வியலைப் பதிவுசெய்தவர்: 2023ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதுக்குத் தமிழில் தேவிபாரதியின் ‘நீர்வழிப்படூஉம்’ நாவல் தேர்வானது. நாவிதர் சமூகத்தின் வாழ்வியலைத் தன்னுடைய இந்நாவலில் தேவிபாரதி பதிவுசெய்திருந்தார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக, எளிய மக்களின் வாழ்வியலை யதார்த்த நடையில் எழுதிவரும் தேவிபாரதியின் ‘நிழலின் தனிமை’, ‘நட்ராஜ் மகராஜ்’ நாவல்களும் புகழ்பெற்றவை.

சனாதனமும் சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவும்: சென்னையில் நடைபெற்ற ‘சனாதன ஒழிப்பு மாநா’ட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் பேசுபொருளானது. உதயநிதியின் பேச்சைக் கையிலெடுத்த பாஜக, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் அதை இண்டியா கூட்டணிக்கு எதிராகப் பயன்படுத்தியது.

தமிழ்நாட்டின் நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் திடீரெனத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக மாற்றப்பட்டது அரசியல்ரீதியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக தலைமை குறித்துப் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவின் நீட்சியாக இத்துறை மாற்றம் நடைபெற்றதாகவும் அரசியல் அரங்கில் சர்ச்சைகள் எழுந்தன.

சிகரம் தொட்ட தமிழ்ப் பெண்: விருதுநகர் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி (34). உலகில் உயரமான, எவரெஸ்ட் சிகரத்தை (8,850 மீட்டர்) எட்டிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார். மே 23 அன்று நள்ளிரவு 12 மணிக்குச் சிகரத்தை எட்டினார். கையிருப்பில் இருந்த ஆக்சிஜன் தீரும் நிலையில் இருந்ததால், உயிரைப் பணயம் வைத்து இச்சாதனையை அவர் படைத்தார்..

விண்வெளிச் சாதனையாளர்கள்: நிலவின் தென் துருவத்தைச் சென்றடைந்த நாடு என்ற பெருமை ‘சந்திரயான் 3’ மூலம் இந்தியாவுக்குக் கிடைத்தது. இத்திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் பி.வீரமுத்துவேல். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியில் படித்தவர்.

இஸ்ரோவில் திட்டப் பொறியாளர், திட்ட மேலாளர் எனப் படிப்படியாக உயர்ந்து ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் ஆனார். இதேபோல சூரியனை ஆராய ஏவப்பட்ட ‘ஆதித்யா எல் 1’ விண்கலத் திட்டத்தின் இயக்குநராக, தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த நிகர் ஷாஜி செயல்பட்டுவருகிறார்.

முழு மதிப்பெண்கள்: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில், 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று சாதனையுடன் முதலிடம் பிடித்தார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன். இந்த ஆண்டு பிளஸ் டூ பொதுத் தேர்வில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்றுச் சாதனை படைத்தார். மேல்நிலைக் கல்வியில் அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்களை இதுவரை யாரும் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாள் வீராங்கனையின் வெற்றி: மேற்கத்திய விளையாட்டாகவே கருதப்படும் வாள்வீச்சு விளையாட்டில் 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம் இந்தியர்களும் அந்த விளையாட்டில் கோலோச்ச முடியும் என்பதை சென்னையைச் சேர்ந்த பவானிதேவி நிரூபித்தார். சீனாவின் வுக்ஸியில் இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதிசெய்தார்.

பாம்பு பிடி வல்லுநர்கள்: பாம்பு பிடிப்பதில் வல்லவர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றனர். செங்கல்பட்டு அருகே சென்னேரி கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். விஷம் கொண்ட பாம்புகளைப் பிடிப்பதில் கைதேர்ந்த இவர்கள், உலகம் முழுவதும் பயணம் செய்து பாம்புகளைப் பிடித்துள்ளனர்.

பொம்மனும் பெள்ளியும்: நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகளைப் பராமரிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன்-பெள்ளி தம்பதியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ என்ற குறு ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தத் தம்பதிக்கும் யானைகளுக்கும் இடையிலான பாசப் பிணைப்பு ஆவணப்படத்தில் பதிவாகியிருந்தது.

தொகுப்பு: வெ.சந்திரமோகன், டி.கார்த்திக், ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x