Published : 07 Sep 2023 06:16 AM
Last Updated : 07 Sep 2023 06:16 AM
1959 ஜனவரி 2 அன்று ஏவப்பட்ட சோவியத் விண்கலம் லூனா 1, நிலவின் அருகே சென்ற முதல் விண்கலம். அப்போது முதல் தொடங்கிய மனிதனின் நிலவுப் பயணம், 1959 செப்டம்பர் 14 அன்று நிலவில் மோதிய லூனா 2 விண்கலத்தின் வழியாக அடுத்த கட்டத்தை அடைந்தது. 1966 பிப்ரவரி 3 அன்று மென்மையாக நிலவில் தரையிறங்கிய லூனா 9, நிலவில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற பெயரைப் பெற்றது. ஜூலை 1969இல் அமெரிக்காவின் அப்போலோ 11 விண்கலம் முதன்முதலில் நிலவுக்கு மனிதர்களை ஏந்திச் சென்றது.
1970 செப்டம்பரில் ஏவப்பட்ட சோவியத் லூனா 17விண்கலம் நிலவில் தரையிறங்கி, அங்கிருந்து கல், மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பியமுதல் தானியங்கி விண்கலம். இப்படிப் பற்பல விண்கலங்களை சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் 1960-70களில் போட்டி போட்டுக்கொண்டு நிலவை நோக்கி ஏவின. கடைசியில், 98ஆவது விண்கலமாக 1976இல் சோவியத் ஒன்றியம் ஏவிய லூனா 24, நிலவில் தரையிறங்கிக் கல், மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் திரும்பியது.
மீண்டும் நிலவு: அதன் பிறகு நிசப்தம். யாரும் பல பத்தாண்டுகள் நிலவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை. திடீரென மறுபடி நிலவுக்கு அடித்தது யோகம். 1976க்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் நிலவில் மறுபடி விண்கலத்தைத் தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சந்திரனில் தரையிறங்க நடந்த ஏழு முயற்சிகளில் ரஷ்யாவின் லூனா 25, இஸ்ரேலின் பெரேஷீட், ஜப்பானின் ஹகுடோ-ஆர், இந்தியாவின் சந்திரயான் 2 ஆகிய நான்கும் தோல்வியடைந்தன.
சீனாவின் சாங்’இ 4, சாங்’இ 5 ஆகிய இரண்டு விண்கலங்கள், இந்தியாவின் சந்திரயான் 3 ஆகிய மூன்று மட்டுமே வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளன. ஆகஸ்ட் மாத இறுதியில் ஜப்பானின் ஸ்லிம் எனும் விண்கலம் நிலவில் தரையிறங்க முயலும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சாதகமற்ற வானிலை காரணமாக அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (செப்டம்பர் 7) அதிகாலை அது விண்ணில் ஏவப்பட்டது.
மோகத்தின் பின்னணி: நிலவு குறித்த பல கேள்வி களுக்கு விடையில்லை. நிலவின் வயது என்ன? நிலவில் நடுக்கங்கள் எப்படி ஏற்படுகின்றன? இந்தக் கோள் எதிலிருந்து பிறந்தது? ஏன் ஆண்டுதோறும் சுமார் மூன்று செ.மீ. பூமியைவிட்டு நிலவு விலகிச் செல்கிறது? இப்படிப் பல மர்மங்கள் உள்ளன. இவற்றை அறிந்துகொள்ளும் அறிவியல் ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், நிலவில் அபரிமிதமாகக் கிடைக்கும் அரிய மண் தாதுக்கள் மீதான மோகமும் தற்போது நடைபெற்றுவரும் முயற்சிகளுக்கு முக்கியக் காரணம்.
நாம் பயன்படுத்தும் கைபேசியின் தொடுதிரையில் இண்டியம் எனும் அரிய தனிமம் (rare earth element) உள்ளது. லாந்தனம், காடோலினியம், பிரசியோடைமியம், யூரோபியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம் முதலிய அரிய தனிமங்கள் காட்சித் திரையில் உள்ளன.
நாம் பயன்படுத்தும் மின்னணுக் கருவிகளில் நிக்கல், கேலியம், டான்டலம், மின்கலத்தில் லித்தியம், நிக்கல், கோபால்ட், கைபேசியின் உறைப் பெட்டியில் நிக்கல், மெக்னீசியம், ஒலிவாங்கி - ஒலிபெருக்கிக் கருவிகளில் நிக்கல், பிரசோடைமியம், நியோடைமியம், காடோலினியம், டெர்பியம், டிஸ்ப்ரோசியம் ஆகிய அரிய தனிமங்கள் உள்ளன.
நான்காம் தொழிற்புரட்சியின் அடிப்படை: இந்தத் தனிமங்கள் பூமியில் கிடைப்பது அரிது. ஆனால், வண்டிக்கு அச்சாணிபோல மின்னணுக் கருவிகளுக்கு இவை இன்றியமையாதவை. நவீன நான்காம் தொழிற்புரட்சிக் கருவிகளான முப்பரிமாண அச்சிடும் இயந்திரம், காற்றாலைகள் போன்றவற்றை உற்பத்திசெய்ய அரிய தனிமங்கள் அவசியம்.
உணவில் உப்பு போடுவதுபோலச் சிறிதளவுதான் இந்த அரிய தனிமங்கள் தேவை. என்றாலும், உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பதுபோல, இந்தத் தாதுக்கள் இல்லை என்றால் மிகக் குறைந்த மின் அழுத்தத்தில் கையடக்க அளவில் திறம்பட வேலை செய்யும் நவீன மின்னணுக் கருவிகள் இல்லை.
ஒருகாலத்தில் நிலக்கரியும் பெட்ரோலியமும் எஃகும் இல்லாமல் தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை என்ற நிலை இருந்தது. அதேபோல அரிய தனிமங்களே நான்காம் தொழிற்புரட்சியின் அடிப்படை.
சூரியனில் நடக்கும் அணுக்கருப் பிணைவு வழியே ஆற்றலைத் தயாரிக்க இந்தியா, சீனா உள்பட 20 நாடுகள் கூட்டாக பிரான்ஸ் நாட்டின் கடராஷ் நகரத்தில் கட்டப்பட்டுவரும் ஈடெர் எனும் பன்னாட்டு வெப்ப அணுக்கருப் பிணைவு ஆய்வுலையை (International Thermonuclear Experimental Reactor [ITER]) நிறுவி வருகிறார்கள். ‘செயற்கைச் சூரியன்’ எனக் கூறப்படும் இந்த உலையில், இலகுத் தனிமங்களைப் பிணைத்துக் கன தனிமத்தை உருவாக்கி, ஆற்றலைப் பெறுவதுதான் நோக்கம்.
ஹீலியம் 3 எனும் ஹெலிய ஐசோடோப்பு பயன்படுத்தினால் இந்த உலையை இயக்க முடியும். பூமியில் பத்து லட்சம் ஹெலிய அணுக்களில் சுமார் 300 அணுக்கள் மட்டுமே ஹீலியம் 3 ஐசோடோப்பு ஆகும். ஆனால், ரிகோலித் எனப்படும் நிலவின் மேல் மண்ணின் ஒரு கிராமில் 30 மைக்ரோ கிராம் ஹீலியம் 3 உள்ளது. வெறும் ஒரு டன் ஹீலியம் 3 கொண்டு ஈடெர் அணுவுலை அணுக்கருப் பிணைவு மூலம் ஒரு ஆண்டுக்கு இந்தியாவின் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்துவிடலாம்.
நிலவின் மண்ணில் சுமார் 8% டைட்டானியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் செறிவாக உள்ள மணல் பகுதியில் அரிய தனிமங்கள் இருக்கும். எதிர்காலத்தில் நிலவில் நிரந்தரக் குடியிருப்பை அமைத்து அரிய தனிமங்களையும் ஹீலியம் 3 போன்ற விலைகூடிய கனிமங்களையும் வெட்டியெடுத்து வந்துவிடலாம் எனக் கருதப்படுகிறது.
அமெரிக்காவும் ஆர்டிமிஸ் எனும் திட்டத்தின் பகுதியாக மறுபடி மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுவருகிறது. சீனாவும் சில ஆண்டுகளில் நிலவில் தளம் அமைப்போம் எனக் கூறிவருகிறது. பல்வேறு நாடுகளும் நிலவை நோக்கிய பயண முனைப்பைக் காட்டுவது இதன் தொடர்ச்சியாகத்தான்.
நிலவு அரசியல்: வணிகம் என்று வந்தாலே அரசியலைத் தவிர்த்துவிட முடியுமா என்ன? இதுவரை நிலவு மனிதகுலத்தின் பொதுச் சொத்து; யாருக்கும் சொந்தம் இல்லை என்கிற சர்வதேசச் சட்டம்தான் நிலவிவருகிறது. ஆனால், இந்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்; தனியார் நிறுவனங்கள் எடுக்கும் கனிமவளங்கள் மீது உரிமை கொண்டாட வழிவகுக்க வேண்டும் என்ற குரல்கள் எழத் தொடங்கிவிட்டன.
ஏழை சொல் அம்பலம் ஏறுமா? நிலவில் கால் பதிக்காத நாடுகளின் கூக்குரலை யார் செவிமடுக்கப் போகிறார்கள்? நிலவில் உள்ள கனிம வளங்கள் யாருக்குச் சொந்தம் என்கிற பங்கு பிரிப்பில் நமக்கும் பங்கு வேண்டும் என்றால் நாமும் நிலவைச் சென்றடைந்திருக்க வேண்டும். நிலவில் உள்ள விலை மதிப்பில்லாத கனிமவளம் தரும் ஈர்ப்பே நிலவு நோக்கிய இந்த திடீர் மோகத்துக்கு அடிப்படைக் காரணம்.
- தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT