Published : 11 Dec 2016 12:25 PM
Last Updated : 11 Dec 2016 12:25 PM

குழந்தைகள் பேசும் அரசியல்

குழந்தைகளைப் பற்றிய இக்கவிதைக்குள் / அவர்களை இழுத்து வந்து அடைத்துவிடாதீர்கள் / அவர்கள் / சுதந்திரமாய் எதையாவது செய்துகொண்டோ செய்யாமலோ இருக்கட்டும்...

உறுத்தலற்று நாட்டையே திறந்தவெளி குப்பைத்தொட்டியாக்கி நாறடிக்கும் நமக்கு, குப்பை பொறுக்கும் சிறார்கள் ஒரு பொருட்டல்ல. கவனத்துக்குள் கொண்டுவர விரும்பாமல் நழுவவிடப்படும் இவர்களது குழந்தைப் பருவம், ஏக்கம், கல்வி வேட்கை குறித்த கரிசனத்தை முதற்காட்சியாகக் கொண்டு தொடங்குகிறது ‘பதனம்’ நாடகம். அகதிகளாக வந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பெருநகரத்தின் விளிம்பில் உதிரிகளாக அலைகிற வங்க தேசத்தவர்களின் அவல வாழ்வும் தாயக ஞாபகங்களும் இவர்களினூடாகப் பேசப் படுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கைச் சூழல் அனுமதித்துள்ள அளவுக்கு அப்பால் மீறிச் செல்லும் எதிர்பார்ப்புகளை இவர்கள் கற்பனையால் கடக்க விரும்புகிறார்கள்.

ஏதாவதொரு அறைக்குள்ளேயே அடைந் திருக்கும் நடுத்தர, மேற்தட்டுக் குழந்தைகள் சொற்கள், எழுத்துகள், சத்தங்களாலான, இடத்தை விட்டு நகராத அலுப்பூட்டும் விளையாட்டுகளையே அறிந்திருக்கின்றனர். வெட்ட வெளியில் விடப்பட்டாலும் வேறு விளையாட்டுகளை அறியாதவர்களாகவே இருக்கின்றனர். தொட்டுப் பிடித்துக் கட்டிப்புரளும் அந்நியோன்னியத்தையும் உற்சாகத்தையும் ஆரோக்கியத்தையும் உருவாக்கக்கூடியதே விளையாட்டு என்பதை அவர்களுக்குச் சொல்லித்தருகிறாள் குப்பத்துச் சிறுமி. கற்றுத்தருபவர் இங்கே இடம் மாறுகிறார். தம்மிலும் குறைந்த அந்தஸ்திலுள்ள அவளோடு விளையாடுவதால் தமது கவுரவத்துக்குக் குந்தகம் நேருமெனப் பிள்ளைகளை இழுத்துச் செல்லும் பெற்றோர் அவர்களைத் தம் வழிக்குத் திருப்புகிறார்கள்.

செப்டிக் டேங்க் சுத்திகரிப்பில் விஷவாயு தாக்கி இறந்துபோன ஒருவரின் மகனான இளவரசனைத் தன் மகனின் பள்ளித் தோழனாக, சமதையானவனாக எந்தச் செல்வந்தரால் பார்க்க இயலும்? அதை அவர் வஞ்சப் புகழ்ச்சியாக்குகிறார். அவனுடைய தந்தை இறந்த விதத்தைத் திரும்பத் திரும்ப அவனைச் சொல்லவைப்பதன் மூலம் அவனது ஆளுமை குன்றிப்போவதைக் குரூரமாக ரசிக்கிறார். அது அவனைத் தனிமைப்படுத்தும் உத்தியும்கூட.

இவ்விடத்தில் புழங்குவதற்கான தகுதி தனக்கில்லை என்று அவனாகவே வெளியேறிவிட வேண்டும் என்கிற வன்மத்துடனான அவரது அவமதிப்பை எளிதில் கண்டுகொள்ளும் இளவரசன் நியாயாவேசத்துடன் அவரை எதிர்கொள்கிறான். சமூக, பொருளாதார நிலையில் சமதையற்றவர்களிடம் பழகக் கூடாது என்ற போதனையை மகனுக்குள் ஏற்றுவதற்கான அவரது முயற்சியில் இரு சிறுவர்களுக்குமிடையிலான நட்பு பலியாகிறது.

மாப்பிள்ளை வீட்டாரை அசத்துவதற்காகக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஆடல் பாடல் இசை பயிலும் பெண்கள், கணவனுக்குப் பிடிக்காது என்பதால் - விரும்பிப் படித்துவந்த சமஸ்கிருத நூல்களை எடைக்குப் போட்டுவிடுகிற - சம்பாத்தியத்தை உதறித்தள்ளுகிற மனைவி, அம்மாவைப் போலவே தானும் சுயத்தை இழந்துவிட நேருமோ என்று மருகும் மகள், தம்பியையும் தன்னையும் பாரபட்சம் காட்டி வளர்க்கும் பெற்றோரிடம் நியாயம் கேட்கும் மகள் - என்று நாடகத்தின் பெண் பாத்திரங்கள் நம்மோடு அரங்குக்கு வெளியேயும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நிலைமீறிச் சிந்திக்கும் துணிவற்று ஒவ்வொரு தலைமுறையும் தமது சந்ததியினரைத் தம்மின் நகலாகக் குறுக்கும் பேரவலம் உங்களுக்குச் சம்மதமா என்கிற கேள்வியை எழுப்பிக்கொண்டேயிருக் கிறார்கள்.

குழந்தைகளுக்கு என்ன தெரியும், நாம்தான் எல்லாவற்றையும் போதித்தாக வேண்டும் என்ற கடமையுணர்வுக்குள் மறைந்திருக்கும் அதிகாரமும் வன்முறையும் குழந்தைகளின் தனித்துவத்தை அழிக்கின்றன; அவர்களை நமது நகல்களாக்குகின்றன. நகல்களுக்கான முன்மாதிரியை நம்மிலிருந்தே உருவாக்குகிறோம் - நம்மை நம் பெற்றோரும் உற்றார் உறவாரும் உருவாக்கியது போல - என்பதைச் சித்தரிக்கிறது நாடகம்.

முந்தைய தலைமுறையின் அடையாளங்களையும் மதிப்பீடுகளையும் ஏற்காது சுயத்தைத் தக்கவைத்துக்கொள்ளத் திமிறும் குழந்தையை வசக்கித் தொழுவத்தில் அடைக்கும் குற்றத்தின் பங்குதாரிகளாக நாம் ஒவ்வொருவரும் கூடக்குறைய இருப்பதை உணர்த்துகிறது நாடகம்.

கேள்விகளும் விமர்சனங்களுமற்ற, கீழ்ப்படிதலுள்ள, வித்தியாசங்களை வெறுக்கிற, ஏற்றத்தாழ்வை இயல்பென நம்புகிற, நிலைமீறிச் சிந்திக்கத் துணியாத மொண்ணைகளாகத் தாங்கள் மாற்றப்படுவதால் ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் விடுபடுவதற்கான விழைவுகளையுமே ஓசூர் டி.வி.எஸ். அகாடமியின் மாணவ மாணவியர் ‘பதனம்’ நாடகமாக நவம்பர் 14 அன்று நிகழ்த்தினர்.

மையக்கருவைத் தெரிவு செய்வது, வசனங்களையும் பாடல்களையும் கதாபாத்திரங்களையும் உருவாக்குவது, ஒளியமைப்பு, இசையமைப்பு என நாடகச் செயல்பாடு அனைத்தையும் மாணவர்களே செய்வதற்கான தூண்டுதலைக் கொடுத்துவிட்டு அவர்களை ஒருங்கிணைப்பவராக இயங்கியிருக்கிறார் பிரளயன். உண்மையைச் சொல்லி மனங்களைத் திரட்டுவதும் செயலுக்குத் தூண்டுவதும்தான் அரசியல் என்றால், குழந்தைகள் தமது உலகத்திற்கான அரசியலையே அப்பட்டமாகப் பேசுகிறார்கள், பேசுவார்கள் என்கிறது பதனம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x