Published : 03 Dec 2016 11:24 AM
Last Updated : 03 Dec 2016 11:24 AM

எது உண்மையான விடுதலை?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இறந்து இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அம்பேத்கரின் குரல் மேலும் மேலும் ஓங்கி ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. சாதி ஒழிப்புக்கு எதிராக அவர் நடத்திய மகத்தான போராட்டத்தின் சாட்சிகள் அவரது புத்தகங்களும் உரைகளும். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது தேர்ந்தெடுத்த உரைகளின் தொகுப்பு 'நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்' என்ற தலைப்பில் 'தலித் முரசு' வெளியீடாக வந்திருக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் உரைகளிலிருந்து சில பகுதிகள் இங்கே…

இந்துவாக சாக மாட்டேன்!

கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக்கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன்.

பரிவு, சமத்துவம், சுதந்திரம்

தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்துவிடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத்திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்கவில்லை. தான் மேம்பாடு அடைவதற்காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்துகொள்ளப்பட்டதாலேயே வளர்ந்த நாடுகளிலெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடிவதில்லை. தனி மனிதனுக்கு எந்தவொரு பாத்திரமும் வழங்காத மதம் எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் தனி மனிதனை ஏற்றுக்கொள்ளாத இந்து மதம் எனக்கு ஏற்புடையதாயில்லை.

ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கல்வி பெற முடியும், இரண்டாம் வகுப்பினர் ஆயுதம் ஏந்தவும், மூன்றாவது வகுப்பினர் வாணிபம் செய்யவும், நான்காவது வகுப்பினர் அடிமைகளாக இருக்கவும் வேண்டும் என்று சொல்லும் எந்த மதத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லோருக்கும் கல்வி அவசியம், எல்லோருக்கும் ஆயுதம் அவசியம், எல்லோருக்கும் வாணிபம் செய்வது அவசியம். இந்த அடிப்படையை மறந்த மதம் ஒரு வகுப்பாருக்கு மட்டும் கல்வி கொடுத்து, பிறரை அறியாமை இருட்டில் தள்ளிவிடுவது மதமே அல்ல. அது அவர்களை எப்போதும் அடிமைகளாகவே வைத்திருப்பதற்கான (வஞ்சக) ஏற்பாடு…

ஒரு மதத்தின் அடிப்படையான கோட்பாடு என்பது, ஒரு தனி மனிதனின் ஆன்ம வளர்ச்சிக்கு ஏதுவான சூழலை உருவாக்கித் தருவதே. இதை நீங்கள் ஒப்புக்கொண்டால் இந்து மதத்தில் இருந்து கொண்டு உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முடியாது என்பது தெளிவு. ஒரு மனிதனின் வளர்ச்சிக்கு அவசியமானவை மூன்று. அவை பரிவு, சமத்துவம் மற்றும் சுதந்திரம். இவற்றில் ஏதாவது ஒன்று இந்து மதத்திலிருந்து உங்களுக்குக் கிட்டும் என்று உங்கள் அனுபவத்தை வைத்துச் சொல்ல முடியுமா?

சுதந்திரச் சிந்தனையே உண்மையான விடுதலை

தீண்டத்தகாதவர்களுக்கு சட்டம் வழங் கும் உரிமைகளைக் காட்டிலும் சமூக விடு தலையே தேவை. அந்த சமூக விடுதலை உங்களுக்குக் கிடைக்காத வரைக்கும் சட்டம் வழங்கும் எந்த உரிமைகளும் எதற் கும் பயன்படாது. சிலர் உங்களுக்கு உடல் சார்ந்த (Physical) சுதந்திரம் முழு மையாக இருக்கிறது என்று அறிவுறுத்த விளைவார்கள். உண்மைதான். நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எங்கு வேண்டுமானா லும் போகலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அந்தச் சுதந்திரத்தால் என்ன ஆகப்போகிறது? ஒரு மனிதன் உடம்பினால் மட்டுமல்ல சிந்தனைகளி னாலும் ஆக்கப்பட்டவன். வெறும் உடல் சார்ந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

சிந்தனைகளின் விடு தலையே அவசியமான விடுதலை. 'உடல் சார்ந்த சுதந்திரம்' என்பதன் உண்மை யான பொருள் என்ன? அவன் தன் விருப்பத் திற்கேற்றபடி எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ள உரிமை இருக்கிறது என்பது தானே? ஒரு கைதியின் விலங்கு ஏன் கழற்றப்படுகிறது? அதன் கோட்பாடு என்ன? விலங்கு கழற்றப்பட்டதால் விடுதலை பெற்ற அவன் இனி தன் விருப்பப்படியே தன் நடத்தைகளை அமைத்துக்கொள்ளவும் தனக்கு இருக்கும் ஆற்றல்களைத் தடையின்றி முற்றும் முதலாகப் பயன்படுத்திக்கொள்ளவுமே. ஆனால் தன் சிந்தனைகளில் விடுதலையை அடையாத ஒருவனுக்கு உடல் சார்ந்த விடு தலை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் என்ன பயன்? சுதந்திர சிந்தனையே உண்மையான விடுதலை. சிந்தனைகள் சுதந்திரமானவையாக இல்லையென்றால் கை விலங்கிடப்படாவிட்டாலும் அவன் அடிமைதான்! உயிரோடு இருந்தாலும் அவன் பிணம்தான்.

நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன் | டாக்டர் அம்பேத்கர் | தமிழில்: தாயப்பன் அழகிரிசாமி | விலை: ரூ. 150 | வெளியீடு: தலித் முரசு, சென்னை-34. | தொடர்புக்கு: 044-28221314

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x