Published : 24 Dec 2016 11:12 AM
Last Updated : 24 Dec 2016 11:12 AM

பிறமொழி நூலறிமுகம்: யார் ஆட்டமும் செல்லாது இங்கே!

யார் ஆட்டமும் செல்லாது இங்கே!

சீனாவின் வரலாறு பிரமிக்க வைப்பது. பல்வேறு அரச வம்சங்களின் படையெடுப்புகளில் சீனப் பேரரசுடன் இணைக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் வாழும் சுமார் 10 கோடி மக்கள் சீனாவின் முக்கிய இனமான ஹான் இனத்தைச் சேர்ந்தவர்களல்ல; அவர்கள் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 55 சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். “மலைகளோ உயரமானவை; பேரரசரோ தொலை தூரத்தில்!” என்கிறது இந்த எல்லைப் பகுதிகளில் நிலவிவரும் சீனப் பழமொழியொன்று; சீன மத்திய அரசின் அதிகாரம் செல்லாது என்பதையே அது குறிக்கிறது. சீன எல்லைப் பகுதிகளில் நூலாசிரியர் மேற்கொண்ட பயணங்களின் அனுபவங்கள் சிலிர்க்க வைப்பவை. இயற்கையோடு போராடிக்கொண்டு வாழும் இந்தச் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்கிறது இந்நூல்.

-வீ.பா.கணேசன்

த எம்பரர் ஃபார் அவே - ட்ராவல்ஸ் அட் த எட்ஜ் ஆஃப் சைனா
டேவிட் எய்மர் ப்ளூம்ஸ்பரி
விலை ரூ. 699

ஊர்ப் பெயரில் ஒரு சமூக ஆவணம்

வெட்டிக்காடு என்னும் தன்னுடைய ஊர்ப் பெயரில் பொறியாளர் ரவிச்சந்திரன் எழுதியுள்ள நூல் இது. பள்ளி மாணவர்கள் பலர் மாநில அளவில் நல்ல மதிப்பெண்கள் எடுத்துப் பாராட்டுப் பெறுவதை ஆண்டுதோறும் காண்கிறோம். இந்த மாணவ- மாணவியர் பிற்பாடு என்ன ஆனார்கள் என்பதை அவர்களே சொன்னால்தான் உண்டு. இந்நூல், பள்ளியில் பத்தாம் வகுப்பில் மாநில முதன்மை பெற்ற கிராமத்து மாணவரான ரவிச்சந்திரன், கல்வி தனக்கு ஏற்றம் தந்ததை விளக்கும் நூல்.

தம் கிராமத்து இளமைக் கால நினைவுகளையும் நிகழ்வுகளையும் சில புனைவுகளையும் தொகுத்து இந்த நூலை ஆக்கியிருக்கிறார் ஆசிரியர். வெட்டிக்காடு, காடுவெட்டி என்னும் ஊர்ப் பெயர்கள் பண்டைக் காலத்தில் மக்கள் காடு கரம்புகளை அழித்து ஊராக்கிய வரலாற்றைச் சொல்கின்றன. அந்த வகையில் வயலும் வயல் சார்ந்த பகுதியுமாக விளங்கும் வெட்டிக்காடு என்னும் சிற்றூரில் வாழ்ந்த சோமு என்னும் நெல் வணிகரின் மகனாகப் பிறந்து, படிப்புடன் ஊடுதொழிலாக ஆடு மாடுகளை மேய்ப்பது, ஏரோட்டுவது, பனங்காய் வெட்டுவது, நாவல்பழம் பறிப்பது என்று கிராமத்துக்குரிய அனைத்துப் பொழுதுபோக்குகளையும் பயின்ற ஒரு பட்டிக்காட்டுச் சிறுவனின் இளமைக் கால நிகழ்வுகள்தான் இந்த வெட்டிக்காடு நூலின் உள்ளடக்கம்.

கிராமப்புறத்து மாணவர்கள் கல்வி கற்பதில் உள்ள தடைகளையும் உதவிய ஆசிரியர்களின் செயல்பாடுகளையும் ரவிச்சந்திரன் இந்த நூலில் நினைவுகூர்ந்துள்ளார். வறுமையில் படித்து முன்னேறி, அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பொறியாளராக உயர்வு பெற்று, தான் படித்த பள்ளிக்குச் சிறப்பு விருந்தினராக வந்த நிலையை அழகிய கதையாக்கிக் காட்டியுள்ளார்.

பன்னிரண்டு தலைப்புகளில் அமையும் இந்த நூல், உழைக்கும் மக்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளது.

நம் உணவு முறை, பழக்கவழக்கம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை எத்தகைய மாற்றங்களைச் சந்தித்துள்ளன என்பதை எதிர்காலத் தலைமுறைகள் அறிந்துகொள்வதற்கு இந்த நூல் ஒரு சமூக ஆவணம்.

‘வெட்டிக்காடு’,

தன்வரலாறாகவும், குடும்ப வரலாறாகவும், ஊர் வரலாறாகவும் தமிழர் பண்பாட்டு வரலாறாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

- மு.இளங்கோவன், உதவி தமிழ்ப் பேராசிரியர்

வெட்டிக்காடு, ரவிச்சந்திரன்
விலை: ரூ. 150
வெளியீடு: ரவிச்சந்திரன், 14 ஏ, புளோரா சாலை,
# 08-02அளாளியா பார்க், சிங்கப்பூர்- 509 731
மின்னஞ்சல்: vssravi@gmail.com

எதுவுமே நிலை இல்லை!

ரிசல் மண் மக்களின் வாழ்க்கையை 1980-களின் காலத்தின் வழியாக விவரிக்கிறது இந்த நாவல். அந்த மக்களின் கலாச்சாரம், பருத்தி விவசாயம், ஜவுளி வியாபாரம், வியாபாரத்தின் சங்கேத பாஷைகள், சந்தையின் பேரங்கள், பேரத்தின் நுணுக்கங்கள், தீபாவளித் திருவிழா என்றெல்லாம் கிளைகளாய் விரிகிறது நாவல். காயல்பட்டணத்தில் வாழ்ந்து கெட்ட மக்களின் எஞ்சிய தொழில்தான் காயலாங்கடை என்பது போன்ற விவரங்களும் காணக்கிடைக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக மழையை மட்டுமே நம்பி மக்கள் வாழ்ந்தார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவுசெய்கிறது நாவல். கொடக்கோனார், ஏகாம்பரம் முதலியார், அருணாச்சலம் நாடார், உமர் சாயபு, மாடக்கண்ணு ஆசாரி, கோவணாண்டி நாயக்கர் உள்ளிட்ட பாத்திரங்களின் உரையாடல் வழியாக ஏராளமான தகவல்களைச் சொல்கிறார் ஆசிரியர். அலங்காரம் இல்லாத உரையாடல் ஈர்க்கிறது. ஏகாம்பரம் முதலியாரின் இளைய மகனுக்கு எடுப்பு கக்கூஸில் மலம் அள்ளும் பெண் மீது வரும் காதலும் அதற்குத் தடையாக இருக்கும் சாதியமும் இயல்பாக நாவலில் கையாளப்பட்டிருக்கின்றன. புதிதாக அறிமுகமாகும் உரம், விதைகளை வைத்து பசுமைப் புரட்சியின் பின்னணியில் இருந்த இருந்த முதலாளித்துவத்தைப் பாமரனின் பார்வையில் சொல்லியிருக்கும் விதம் கச்சிதம். மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். கவலைக்கிடமாக இருந்த காலகட்டமும், அதையொட்டி யமக்களின் மனநிலையும் எழுதப்பட்டிருக்கிறது. எதுவுமே நிலை இல்லை என்பதாகச் செல்லும் நாவலின் போக்கில் இறுதியாக வெறுமையை உணர முடிகிறது. அதுவே கதையின் சாரம் என்றும் சொல்லலாம்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்

கொடக்கோனார் கொலை வழக்கு,
அப்பணசாமி, விலை ரூ.180
எதிர் வெளியீடு, பொள்ளாச்சி-642002.
 9865005084

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x