Published : 06 Nov 2016 12:22 PM
Last Updated : 06 Nov 2016 12:22 PM
பால் பெய்ட்டி என்பவர் எழுதி சமீபத்தில் மேன் புக்கர் பரிசு பெற்றிருக்கும் ‘தி செல்அவுட்’ எனும் நாவலின் சாரத்தைப் புரிந்துகொள்வது இந்திய, தமிழக வாசகப் பரப்புக்குக் கொஞ்சம் சிரமமே. ஏனென்றால், கறுப்பு என்பது நமக்கு நிறம் மட்டுமே. ஆனால் அமெரிக்கர்களுக்கு அது ஒரு வரலாறு. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அது ஓர் அடையாளம்!
அந்த ஒரு காரணத்துக்காகவே, இந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க சுமார் 18 பதிப்பகங்கள் மறுத்துள்ளன. ‘உங்கள் கதை புரியவில்லை’, ‘அடிமைத்தனம் என்றால் என்ன?’, ‘நிறைய கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன’ எனப் பல விமர்சனங்களை அந்தப் பதிப்பகங்கள் முன்வைத்தன. இறுதியாக ‘ஒன் வேர்ல்ட்’ பதிப்பகம் இதைப் பதிப்பித்துள்ளது. இதே பதிப்பகம்தான் கடந்த ஆண்டு மேன் புக்கர் பரிசு பெற்ற ‘எ ஹிஸ்டரி ஆஃப் செவன் கில்லிங்ஸ்’ என்ற புத்தகத்தையும் வெளியிட்டது.
நிறவெறி பற்றி அங்கதத் தொனியில் பேசும் இந்தப் புத்தகத்துக்கு மேன் புக்கர் பரிசு கிடைத்திருப்பது ஆச்சரிய மல்ல. அமெரிக்காவில் பிறந்த ஒரு கருப்பரின எழுத்தாளர் நிறவெறி பற்றி எழுதிய புத்தகம் இந்த விருதை வென்றிருப்பதுதான் ஆச்சரியம்.
தலைதூக்கும் நிறவெறி
‘நிறவெறி’ என்ற பதமே அமெரிக்கர்களின் நினைவிலிருந்து மறைந்துபோன ஒரு தருணத்தில், மீண்டும் அடிமை முறையைப் பின் பற்றிய, வெள்ளையர்களுக்கும் கருப்பர் களுக்கும் இடையே பாகுபாடு கற்பித்த கருப்பர் ஒருவர், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவதில் தொடங்குகிறது இந்த நாவல்.
அவர் ஏன் அப்படிச் செய்தார் என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் பகுதியின் ஒரு ஓரத்தில் கிடக்கிறது டிக்கென்ஸ் எனும் இடம். சிறிய அளவில் வேளாண்மையில் ஈடுபட்டு வரும் கருப்பர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி அது. அந்தப் பகுதியில் சமூக அறிவியலாளர் ஒருவருக்கு மகனாகப் பிறக்கிறார் இந்த நாவலின் நாயகன். நாவல் அவர் பார்வையில் தான் சொல்லப்படுகிறது.
அவர் பிறந்து வளரும் அந்த இடம், திடீரென்று ஒரு நாள் அமெரிக்க வரைபடத்திலிருந்தே காணாமல் போகிறது. அதன் அடையாளம் அழிக்கப்பட்டுவிடுகிறது. டிக்கென்ஸ் என்ற அந்தப் பகுதியை நாயகன் எவ்வாறு மீட்டெடுக்கிறான் என்பது மீதிக் கதை. அந்த மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் நாயகனைப் புரிந்துகொள்ளாமல், அந்தப் பகுதி மக்கள் அவனுக்கு வைத்த பெயர்தான் ‘செல்அவுட்’. அதற்கு துரோகி என்ற பொருளும் உண்டு.
நிறவெறிக்கொரு சவுக்கடி
கெட்ட வார்த்தைகள் மிகுந்த அவதூறான மொழிநடையில் இந்த நாவல் விரிகிறது. நிறவெறியை அனுபவிக்காத வாசகர்கள் அதைப் படிக்கும்போது சாதாரண மாகத் தோன்றலாம். ஆனால், நிறவெறியில் பங்கெடுத்தவர்களுக்கு இந்த நாவல் ஒரு சவுக்கடி.
‘எனக்கான உத்வேகம் என்பது என்னுடைய இனப் பெருமையால் கிடைப்பதில்லை. மாறாக, காலம் காலமாக மிகப் பெரிய அதிபர்களை, மிகப் பெரிய பாசாங்குக்காரர்களை உருவாக்கிய ஏக்கத்திலிருந்து கிடைக்கிறது’, ‘என்னுடைய வாழ்க்கை யின் ஒவ்வொரு கணத்தையும் என்னுடையதாக உணரவில்லை. ஏற்கெனவே வாழ்ந்துவிட்டுச் சென்றவரின் கணங்களாக உணர்கிறேன்’, ‘குழந்தைகள்தான் பெற்றோர்களை வளர்க்கிறார்கள்’ என்பன போன்ற கவித்துவச் சிந்தனைகள் நம்மைக் கதையுடன் ஒன்றவைக்கிறது.
“கருப்பராகப் பிறந்தால் மட்டும் ‘தேன் நிறம்’, ‘டார்க் சாக்லெட் நிறம்’ எனப் பல வகையான உணவு வகைகளுடன் எங்களை ஒப்பிடுகிறார்கள். யாரேனும் வெள்ளையர்களை இப்படி உணவு வகைகளின் நிறங்களுடன் ஒப்பிட்டிருக்கிறார்களா?” என்ற சோகம் கலந்த நையாண்டியான கேள்விக்கு நம்மிடம் பதில் இருக்கிறதா?
அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் பராக் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் வெளியான இந்தப் புத்தகத்துக்கு, அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலகும் தருணத்தில் தரப்பட்டுள்ள இந்த விருது முக்கியத்துவம் பெறுகிறது.
ஜிம்பாவே நாட்டை உள்ளடக்கிய காமென்வெல்த் நாடுகள், அயர்லாந்து குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களுக்கு மட்டுமே விருது என்ற விதி இருந்தது. அது தளர்த்தப்பட்டு, அனைத்து நாடுகளைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர்களும் இதில் பங்கு பெறலாம் என்ற புதிய விதி விதிக்கப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து அமெரிக்க எழுத்தாளர் ஒருவருக்கு இப்பரிசு வழங்கப்பட்டிருப்பது, நிச்சயமாக வரலாற்றில் ஏதோ ஒரு கண்ணியை இணைக்கிறது.
நாவலில் சொல்லப்படுவதுபோல, ‘வரலாறு என்பதை அச்சிட்ட தாள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது அப்படியல்ல. அது ஒரு நினைவு, அது ஒரு காலம், அது ஒரு உணர்வு, அது ஒரு பாடல். வரலாறு என்பது எப்போதும் உங்களுடன் தங்கியிருக்கும் ஒன்று’.
புக்கர் பரிசு பெறும்போது, மேடையில் “இந்தப் புத்தகத்தை எழுத நான் மிகவும் சிரமப்பட்டேன். எனவே, இதைப் படிப்பதும் மிகவும் சிரமமாகத்தான் இருக்கும்” என்றார் பால் பெய்ட்டி. அது உண்மை!
இந்தக் கதையில் வரும் கதாபாத்திரம் ஒன்று குத்தலாக இப்படிச் சொல்கிறது: ‘உண் மையான சுதந்திரம் என்பது அடிமையாக இருப்பதற்கான உரிமையைப் பெற்றிருப்பதுதான்’. நகரங்களின் அடையாளம் அழிக்கப் படும்போது, மனிதர்களின் அடையாள மும் அழிக்கப்படுகிறது என்று சொல்லப்படு வதுண்டு. கருத்து, எழுத்து, மொழி, இனம் என நமக்குப் பல அடையாளங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் நாம் ஒவ்வொரு விதத்தில் இழந்துவருகிறோம். இந்தச் சமயத்தில், ‘உண்மையான சுதந்திரம் என்பது அதிகாரத்தின் கீழ் அடிமையாக இருக்கும் உரிமையைப் பெறுவதுதானா?’ என்ற கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ள வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT