Published : 27 Nov 2016 12:11 PM
Last Updated : 27 Nov 2016 12:11 PM

நவம்பர் 20: ஃபைஸ் அஹமத் நினைவு தினம் - காலம் தந்த மக்கள் கவிஞன்!

‘பாகிஸ்தான் கவிஞர்’ என்று சொல்லி அவரை அறிமுகப் படுத்துவது அவரது ஆளுமைக்குச் சற்றும் பொருந்தக்கூடிய அடைமொழி அல்ல. காரணம், இந்தியா, ரஷ்யா, லண்டன், பெய்ரூட், பாலஸ்தீனம், ஈரான், ஈராக் எனப் பல பகுதிகளிலும் தனது கவிதைகள் மூலம் தாக்கத்தை ஏற்படுத்திய‌ உலகக் கவிஞர் அவர். அதனால்தான் அவரை ‘எங்கள் ஃபைஸ்’ என்று மக்கள் கொண்டாடு கிறார்கள்.

மறைந்துபோன கவிஞர்களை ‘காலஞ்சென்ற கவிஞர்’ என்று அழைப்பதுண்டு. ஆனால், ‘காலம் தந்துவிட்டுச் சென்ற கவிஞர்’ எனும் பெருமை ஃபைஸ் அஹமத் ஃபைஸுக்கு மட்டுமே உண்டு. மகாகவி இக்பாலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் தோன்றிய மாபெரும் கவிஞர் ஃபைஸ் அஹமத் ஃபைஸ். அவருக்குப் பிறகு அங்கிருந்து சொல்லிக்கொள்ளும்படியாக யாரும் வரவில்லை என்பது, பாகிஸ்தானின் புவி அரசியலாகக்கூட இருக்கலாம்!

அதே புவி அரசியல்தான் ஃபைஸ் அஹமத் ஃபைஸ் எனும் ஒளி, பல காத தூரத்துக்குச் சுடர்விடக் காரணமாக அமைந்தது. ஒரு கவிஞனை, அவனது படைப்புகளை அவன் வாழும் காலத்துடன் பொருத்தி வைத்துத்தான் எடைபோட வேண்டும். அப்போதுதான் அவன் படைப்புகள் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை அறிய முடியும். அப்படிப் பார்க்கும்போது, ஃபைஸ் வாழ்ந்த காலம், ரத்தம் சிந்தி விளைவிக்கப்பட்ட விடுதலையின் காலம்.

புரட்சியில் மலர்ந்த கவிஞன்

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி, இரண்டு உலகப் போர்கள், பாகிஸ்தான் பிரிவினை, வங்கதேசப் பிரிவினை, பாகிஸ்தானின் ராணுவ ஆட்சி எனப் புரட்சியும் ஒடுக்குமுறையும் ஒருசேரக் கொந்தளித்த காலத்தில்தான் ஃபைஸ் எனும் கவிஞன் உருவெடுக்கிறான். அல்லது, காலம் ஃபைஸ் அஹ்மத் தைக் கவிஞனாக மாற்றியது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட கவிஞ னின் 32-வது நினைவு ஆண்டு இது!

இந்த ஆண்டில் ஃபைஸை நினைவு கூர்வதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, ஃபைஸின் வாழ்க்கை குறித்து அவருடைய பேரன் அலி மதீஹ் ஹாஷ்மி எழுதியிருக்கும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இன்னொரு காரணம், சமீபத்தில் மும்பையில் நடந்த ‘மும்பை அகாடமி ஆஃப் தி மூவிங் இமேஜஸ்’ அமைப்பு நடத்திய 18-வது மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவில், ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் திரைக்கதை எழுதி 1959-ம் ஆண்டு வெளியான‌ ‘ஜாகோ ஹுவா சவேரா’ எனும் திரைப்படம், ‘இது பாகிஸ்தான் படம்’ எனும் காரணத்தால் திரையிட மறுக்கப்பட்டது.

அலி மதீஹ் ஹாஷ்மி எழுதி, ரூபா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ‘லவ் அண்ட் ரெவல்யூஷன்’ எனும் புத்தகத்தில் இந்தத் திரைப்படம் குறித்து ஒரு சிறிய பதிவு உண்டு.

திரைத் துறையுடன் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸுக்குப் பெரிய அளவில் தொடர்பில்லை. 1947-ம் ஆண்டு மும்பையில் தயாரிக்கப்பட்ட ‘ரோமியோ ஜூலியட்’ எனும் திரைப்படத்தில் அவரது கவிதை ஒன்று பாடல் காட்சியாக வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு, திலீப் குமார் நடித்த ‘மஸ்தூர்’ உள்ளிட்ட பல இந்தித் திரைப்படங்களில் அவரது கவிதைகள் பாடல்களாகப் பயன்படுத்தப்பட்டன.

திரைக்கதை எழுதிய ஃபைஸ்

இந்நிலையில், பாகிஸ்தான் திரைப்பட உலகின் முன்னோடி ஏ.ஆர்.கர்தார் எனும் பிரபல திரைப்பட இயக்குநரின் மகன் ஏ.ஜே.கர்தார், வங்க எழுத்தாளர் மானிக் பந்தோபாத்யாய எழுதிய ‘பத்மா நாதிர் மாஜி’ எனும் நாவலைத் திரைப்படமாக்க விரும்பினார். அதற்குத் திரைக்கதை எழுதித் தரும்படி ஃபைஸிடம் கேட்டார். அந்தப் படத்தில் இடம்பெற்ற‌ பெரும்பாலான பாடல்களையும் அவரே எழுதினார். விமர்சகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை ஈட்டித் தரவில்லை.

“ஒரு திரைப்படம் யதார்த்தமாகவும் அதே சமயம் களிப்பூட்டக்கூடியதாகவும் இருக்க முடியும் எனும் உண்மையை எந்த இயக்குநரும் புரிந்துகொள்வதாக இல்லை” என்று கவலையுடன் சொன்ன ஃபைஸிடம், ஒரு முறை ‘பாகிஸ் தானில் எப்போது நல்ல திரைப் படங்கள் வரும்?’ என்று கேள்வி எழுப்பியதற்கு அவர் இப்படிக் கிண்ட லாகச் சொன்னார்: “படத்தை ‘ஷூட்’ செய்வதற்குப் பதிலாகப் படமெடுப்ப வர்களை ‘ஷூட்’ செய்யும் போது!”

மக்களின் நன்மதிப்பு

கவிஞராக அறியப்பட்ட அதே நேரத்தில், சிறந்த பத்திரிகை யாளராகவும், பண்பான பேராசிரி யராகவும், துணிச்சல் மிக்க தொழிற் சங்கவாதியாகவும் அவரால் செயல்பட முடிந்தது. அதனால்தான் ஒருமுறை, “எனக்குக் கடிதம் எழுதும்போது, முகவரியில் ‘ஃபைஸ் அஹமத் ஃபைஸ், பாகிஸ்தான்’ என்று எழுதி னால் மட்டும் போதும். அந்தக் கடிதம் என்னிடம் சேர்ந்துவிடும்” என்று சொல்ல முடிந்தது. அந்த அளவுக்கு மக்களிடையே அவர் பெயர் பெற்றிருந்தார்.

“உண்மை வாழ்கிறது, நீ பேசு நீ பேச வேண்டியதைப் பேசிவிடு!” என்று எழுதிய ஃபைஸ், ‘சிறை, கவிதை செய்வதற்கான ஆய்வகம்’ என்று கொண்டாடியவர். அவர் ஒடுக்குமுறைக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட காலத்தில் அதிகமாகக் கவிதைகளை எழுதவில்லை. அப்படி எழுதிய கவிதைகளிலும் ‘ஃபாசிஸம்’ குறித்து எந்த எதிர்வினையும் தென்படவில்லை. இதுகுறித்து அவருடைய நண்பர்கள் கேட்டதற்கு, “அந்தக் காலத்தில் நாங்கள் ஃபாசிஸத்தை நேரடியாக எதிர்கொண்டோம். அதாவது நாங்கள் போராடினோம். அதனால் எனக்குக் கவிதை எழுத நேரம் கிடைக்கவில்லை. அதற்கான தேவையும் எழவில்லை” என்றார்.

காலிப், இக்பால், மிர் எனப் புகழ் பெற்ற உருதுக் கவிஞர்களுக்குப் பின் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸின் பெயர் வரலாற்றில் நிற்கக் காரணம், அவரது கவிதைகளில் புழங்கிய எளிமையும் வலியும்! “படைப்பாளியின் வலி ஆழமாக இருக்கும்போது, அவன் உருவாக்கும் கலை மிகச் சிறப்பாக வரும்” என்று அவர் சொல்லியிருப்பதை இந்த இடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x