Published : 05 Nov 2016 09:36 AM
Last Updated : 05 Nov 2016 09:36 AM

என் உலகம்: நண்பர்கள்; வாசகர்கள்- அசோகமித்திரன்

மெஹ்பூப் காலேஜ் --அன்று அது ஒரு ஹைஸ்கூல்தான் -- மொத்தம் ஆயிரம் மாணவர்கள், அறுபது ஆசிரியர்கள் கொண்டது. ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளுக்குத் தலைமை ஆசிரியரே ஆங்கில வகுப்பு எடுப்பார். அங்கே பல நண்பர்களில் ஒருவன் கோபால். அவன் ஜீரா என்ற குடியிருப்புப் பகுதியில் வசித்தான். நான் இரண்டு மைல் சைக்கிள் மிதித்து அவன் வீட்டுக்குப் போனால் அவன் வீட்டு வெளியிலேயே பேசி அனுப்பிவிடுவான். பெரிய மர்மம் இல்லை. அவன் அப்பா இரண்டு பெண்டாட்டிக்காரர்; இருவரும் சகோதரிகள். அவன் வீட்டில் ஒரு கிரிக்கெட் கோஷ்டியே அமைக்கலாம் என்று வேடிக்கையாகச் சொல்வான். ஆனால், உள்ளூர வேதனை. அவன் ஒரு நாள் ‘டெய்லி நியூஸ்’ என்ற புதுப் பத்திரிகையைக் காட்டினான். அதில் நான் ஒரு வலுவான கிரிக்கெட் கோஷ்டியை என் பந்து வீச்சால் தோற்கடித்தது பற்றி ஒரு குறிப்பு வெளியாகியிருந்தது. அந்தக் குறிப்பு கோபால் எழுதியது. நான் ஒரு கட்டுரை எழுதி அப்பத்திரிகைக்குத் தபால் மூலம் அனுப்பினேன். இரண்டு நாட்களில் திரும்பி வந்துவிட்டது. நான்கணா அபராதம், நான் சரியான தபால்தலை ஒட்டாததால். என் அம்மா வைதாள். நான் சென்னைக்கு வந்தவுடன் அவன் தொடர்பு விட்டுப் போயிற்று. அவன் ரஷ்யா சென்று பெரிய இன்ஜினீயர் ஆகி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் மிகப் பெரிய அதிகாரியானான்.

நான் சென்னை வந்த பிறகு என் கதைகள் தபாலில் திரும்பி வரும்போதெல்லாம் என் அம்மா “தினத்தந்திக்கு அனுப்பேன்” என்பாள். அது யாருக்குப் பாராட்டு, யாருக்கு மட்டம் தட்டுதல் என்று தெரியாது.

என்.வி. ராஜாமணி என்ற ராமநரசு என்பவரைப் பார்த்த பிறகு நான் நாடகாசிரியனாக வேண்டும் என்று தீர்மானித்தேன். அப்போதுதான் என் அப்பா விட்டுச் சென்ற ‘இப்ஸன் நாடகங்கள்’ நூலைக் கவனித்தேன். ராஜாமணி, பெர்னார்ட் ஷா நாடகங்களைத் தந்தார். டபுள்யு.டபுள்யு. ஜேகப்ஸ் என்பவர் எழுதிய சிறுகதையை ‘குரங்கின் பாதம்’ என்ற ஒரு காட்சி, மூன்று பகுதிகள் உடைய நாடகமாக எழுதினேன். சுமார் ஒரு மணி நேரம் தேவைப்படும். திருத்தமாக ஒரு பிரதி எழுதி அதை ‘பைண்ட்’ செய்து வைத்திருந்தேன். அன்று பிரதி எடுக்கும் வசதி கிடையாது. மீண்டும் ஒரு முறை 60 பக்கங்கள் எழுத வேண்டும். நாடக ஆர்வம் கொண்ட அரசு என்ற இளைஞர் எடுத்துச் சென்றார். அவர் தயாரித்த பயிற்சி நாடகத்தில் கவிஞர் வைதீஸ்வரன் கூட நடித்தார் என்று ஞாபகம். அரசு, நான் எழுதிய நாடகப் பிரதியோடு அமெரிக்கா போய்விட்டார்!

‘சீஸரின் மனைவி’ என்றொரு நாடகத்தை ஆஙகிலத்தில் எழுதினேன். சீஸரின் மனைவி எவராலும் குற்றம் சொல்லப்படாதவளாக நடந்துகொள்ள வேண்டும். சீஸரின் சபையில் அப்பொலொடருஸ் என்பவன் சுருட்டிய பெரிய பாயை விரிக்கிறான் அதிலிருந்து கிளியோபாட்ரா எழுந்து நிற்கிறாள். நாடகத்தை ராஜாமணியிடம் காட்டுவதற்குள் அவர் பூனா போய்விட்டார். என் தமிழ்க் கதைகள் திரும்பி வந்த வண்ணம் இருக்கும். ஆனால் சளைக்காமல் நானும் மெலட்டூர் விசுவநாதன் என்ற நண்பருமாக சைக்கிளில் பத்திரிகை அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வருவோம். ஒரு கீழ்ப்பாக்கப் பத்திரிகைக்கு அனுப்பினால் அடுத்த நாளே திரும்பி வந்துவிடும். சுவரில் அடித்த பந்துபோல. அன்று மவுண்ட் ரோடாக சாலையில் இருந்த பத்திரிகைகள் மூன்று. இங்கு கதைகள் தொலைந்துவிடும். ஒரு நாள் நாங்கள் ரவுண்ட் டானா அருகில் பத்திரிகை அலுவலகத்துக்குப் போய், கொஞ்சம் நல்லவர் போலத் தோற்றமுடைய ஒருவரைச் சந்தித்து, “ஆறு மாதங்கள் முடிந்துவிட்டது,” என்றோம். அவருக்கு எங்கள் மீது அனுதாபம் ஏற்பட்டிருக்க வேண்டும்.

“எங்களால் தேடிக்கொண்டிருக்க முடியாது. நான் மாடிக்கு உங்களை அனுப்புகிறேன். நீங்களே தேடிப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார். மாடிக்குப் போனோம். அது மாடி என்பதை விட மைதானம் என்று கூறலாம். அங்கு மலைபோல ஆயிரக்கணக்கில் கையெழுத்துப் பிரதிகள்.

பன்னிரண்டு ஆண்டுகள் மெலட்டூர் விசுவநாதனும் நானும் மாதம் ஒரு கதை எழுதி அக்கதையின் பயணத்தைக் குறித்துக்கொள்வோம். நாங்கள் எந்த ஆசிரியர் மீதும் கோபம் கொள்ளவில்லை.

தமிழ் அனுபவம் விசேஷமாக இல்லாது போனாலும் நான் ஆங்கிலத்தில் எழுதிய கதைகள் திரும்பி வராமல் பிரசுரம் ஆயின. என்னுடைய இன்னொரு சக ஊழியர் ஆர். கே. ராமச்சந்திரன். ஆர். கே. நாராயணின் தம்பி, அவர் படம் வரைவார். அப்போது ‘சதர்ன் லாங்குவேஜஸ் புக் டிரஸ்ட்’ என்றொரு நிறுவனம் பல அமெரிக்க நாவல்களைத் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது. நானும் ராமச்சந்திரனுமாக ஒரு குழந்தைகள் புத்தகத்தை ‘டிசைன்’ செய்தோம். கதை நான் எழுதிய ‘மழை.’ பக்கத்துக்குப் பக்கம் வண்ணப் படங்களுடன் மொத்தம் 16 பெரிய அளவு பக்கங்கள். அந்த எஸ்.எல்.பி.டி. நிறுவனத்தின் டைரக்டர் ஐஸன்பர்ங் என்ற அமெரிக்கரைப் பார்த்தோம். “இந்த மாதிரி வெளியீடுகளுக்கு இங்கு தொழில்நுட்பம் இல்லை. ஆனால் ஓவியரைப் பயன்படுத்திக்கொள்ள முடியும், “ என்று கூறி ராமச்சந்திரனுக்கு ஒரு நூலைக் கொடுத்து இருபது கோட்டுப் படங்கள் வரைந்து தரச் சொன்னார். ராமச்சந்திரன் பத்து நாட்களில் அப்பணியைச் செய்து முடித்தார். நல்ல புத்தகம், நல்ல படங்கள்.

நான் மொழிபெயர்க்க வாய்ப்புக் கிட்டும் என்று காத்திருந்தேன். திடீரென்று ஒரு நாள் அந்த அலுவலகத்தை மூடிவிட்டார்கள். அது சி.ஐ.ஏ. நிறுவனம் என்றார்கள்.

நான் ஆங்கிலத்தில் எழுதி வெளிவந்த கதைகளை ராமச்சந்திரனும் படிப்பார், அவருடைய மனைவியாரும் படிப்பார். மெலட்டூர் விசுவநாதனைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. இப்படித்தான் என் எழுத்துலகப் பயணம் தொடங்கியது.

(தொடரும்)

-அசோகமித்திரன், தமிழின் முக்கியமான மூத்த எழுத்தாளர்களில் ஒருவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x