Published : 28 Oct 2016 08:40 PM
Last Updated : 28 Oct 2016 08:40 PM

நல் வரவு: மாற்றுக் கல்வி கொள்கைக்கான மக்கள் சாசனம்

மாற்றுக் கல்வி கொள்கைக்கான மக்கள் சாசனம்

விலை : ரூ.15 | வெளியீடு: கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு,
சென்னை - 86 | 044 -28113630

கல்வி குறித்து கல்வியாளர்கள் மட்டுமே பேச வேண்டுமென்கிற நிலையை மாற்றி, பொதுத்தளத் திலான விவாதங்கள் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். இதற்கான தொடக்கமாக 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழக, கல்லூரி, பள்ளி ஆசிரிய அமைப்புகள், மாணவ அமைப்புகள் சேர்ந்து கூட்டாக உருவாக்கப்பட்டதே கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு. அதன் சிறுவெளியீடாக வந்துள்ள இந்நூல் கல்வி பற்றி நாம் யோசிப்பதற்கான பரந்த வெளியை உருவாக்கித்தருகிறது.



தமிழ்க் கல்வெட்டுப் பாடல்கள் | செ. இராசு

விலை: ரூ. 200 | கொங்கு ஆய்வு மையம், ஈரோடு-638 011
0424-2262664.

வரலாறு குறித்த அக்கறை குறைவான நம் சமூகத்தில், ஆதாரபூர்வ வரலாற்றைப் பேசுவதற்கான முயற்சிகளை பல அறிஞர்கள் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறார்கள். அந்த வகையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டுத் துறை முன்னாள் தலைவரான செ. இராசு முக்கியமானவர். காலங்களைக் கடந்து நிற்கும் கல்வெட்டுகளில் பதிவான தமிழ்ப் பாடல்களை ஒரே தொகுப்பு நூலாக அவர் வெளியிட்டுள்ள குறிப்பிடத்தக்க நூல் இது.



தடம் பதித்த தலைவர்கள்: நினைவுகளும் நினைவகங்களும் | எஸ்.பி. எழிலகன்

விலை: ரூ.250 | சுரா பதிப்பகம் | சென்னை – 40 | 044-26162173

இந்திய வரலாற்றில் இடம்பெற்ற தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளுடன், அவர்களது நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் நினைவுச் சின்னங்களைப் பற்றிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மட்டுமல்லாது, காந்தி, அம்பேத்கர் போன்ற தேசத் தலைவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அவற்றைத் திறந்துவைத்தவர்கள், தேதி போன்ற தகவல்களும் உண்டு.



கல்வி சில கேள்வி | இதழாளர் அய்கோ

விலை: ரூ. 90 | தனு பதிப்பகம் | 16, காந்திநகர், ரெட்டியார்பட்டி, பாளையங்கோட்டை-7.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் கல்வி மீது தனியார்மயமும் அரசின் மெத்தனமும் தாக்குதல் நிகழ்த்துகின்றன. இந்நிலையில் அய்கோவின் இந்த நூல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. கல்விக் கொள்ளை, இடைத்தரகர்கள் பிரச்சினை, பிஹாரில் ஜன்னல்கள் வழியாக ‘பிட்டு’கள் கொடுத்துச் சேவையாற்றிய தந்தையர்கள், சுருங்கிப்போன கோடை விடுமுறை என்று பல முக்கியமான விஷயங்களை இக்கட்டுரைகள் தொட்டுச் செல்கின்றன.



பொற்காலப் பூம்பாவை | கோவி.மணிசேகரன்

விலை: ரூ. 450 | பூம்புகார் பதிப்பகம், சென்னை – 08 | 044-25267543

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரின் புதல்வி மோகனாங்கியைப் பிரதானக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் இது. பூம்பாவை எனும் பெயர் கொண்ட மோகனாங்கிக்கும், பாண்டிய இளவல் சந்திரசேகரனுக்கும் இடையிலான காதல், பாமினி சுல்தான்களின் சதி, ரெய்ச்சூர் போர் என்று பல சம்பவங்களையும், தருணங்களையும் புனைவு கலந்து எழுதியிருக்கிறார் கோவி.மணிசேகரன்.



108 வைஷ்ணவ திருத்தல மகிமை | எஸ்.எஸ்.மாத்ருபூதேஸ்வரன்,

விலை: ரூ.150 | நர்மதா பதிப்பகம் | சென்னை -17 | 044-24334397

வைணவத் திருத்தலங்களைப் பற்றிய தகவல்களின் தொகுப்பு இந்நூல். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தொடங்கி, மகாபலிபுரம், திருநின்றவூர், ஸ்ரீரங்கம், கும்பகோணம், ஸ்ரீ வில்லிப்புத்தூர், வட மதுரை, திருப்பாற்கடல் வரை தமிழகம், கேரளத்தில் உள்ள 108 வைணவக் கோயில்களின் தல வரலாறு, மூலவர் – தாயார் விவரங்கள் உள்ளிட்ட தகவல்களுடன், போக்குவரத்து வசதிகள் தொடர்பான குறிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x