Published : 02 Apr 2014 02:59 PM
Last Updated : 02 Apr 2014 02:59 PM

நூல் வெளி: பரணி பற்றிய ஓர் ஆவணம்

ஜெயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணியின் உரையை டாக்டர் ப. சரவணன் எழுதியுள்ளார். இதை ட்ராட்ஸ்கி மருதுவின் அழகிய அட்டை வடிவமைப்புடன் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனின் வீரத்தைச் சிறப்பித்துப் பாடப்பட்டது பரணி. பரணி என்பது தமிழின் 96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. கலிங்கத்துப் பரணியே முதலில் பாடப்பட்ட பரணி வகைச் செய்யுள். இந்நூலில் குலோத்துங்கனது படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானின் வெற்றி பாடப்பட்டுள்ளது.

போர்த் தெய்வமாகிய கொற்றவையின் நாள் பரணி. இந்நாளில் நடத்தப்படும் வழிபாடு காரணமாகப் பரணி நூல் என அழைக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர். பரணியின் நோக்கம் கொற்றவையைப் போற்றுதல் என்றும் அரசனின் வெற்றியைப் போற்றுதல் என்றும் சொல்லப்படுகிறது.

கடவுள் வாழ்த்து, தேவியைப் பாடியது, காளிக்குக் கூளி கூறியது என கலிங்கத்துப் பரணி 13 படலங்களைக் கொண்டுள்ளது. இதில் 599 தாழிசைப் பாடல்கள் உள்ளன. படலங்களின் பெயர் களில் கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திர சாலம், காளிக்குக் கூளி கூறியது ஆகிய நான்கும் காளியோடு தொடர்புடையவை. இராச பாரம்பரியம். அவதாரம் ஆகியவை சோழன் குலோத்துங்கனோடு தொடர்புடையவை.

கலிங்கத்துப் பரணி முதன் முதலில் 1840-ல் திருப்பாதிரிப் புலியூர் கா. சுப்பராய முதலியாரால் பதிப்பிக்கப்பட்டுள்ளது. மூலப் பதிப்பும் சுருக்கப் பதிப்பும் இருந்த நிலை மாறி ஆழமான, விரிவான உரையுடன் கூடிய பதிப்பை 1941-ல் ஆ.வீ.கன்னையா நாயுடு வெளியிட்டார். இதைத் தொடர்ந்து 1950-ல் பெ. பழனிவேல் பிள்ளை, 1958-ல் புலியூர்க்கேசிகன் உள்ளிடோர் கலிங்கத்துப் பரணிக்கு எழுதிய உரைகள் வெளிவந்துள்ளன. இப்படி வெளிவந்த இன்னும் பல பதிப்புகளையும் மேற்பார்வை பார்த்த பின்னரே இந்தப் பதிப்பை உருவாக்கியுள்ளார் பதிப்பாசிரியர் ப. சரவணன்.

இந்நூலில் முதலில் பதவுரையும் அதைத் தொடர்ந்து பதவுரை, உரை ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்னர் வெளிவந்துள்ள உரைகளில் காணப்பட்ட ஒருசில பிழைகளைக் கவனத்தில் கொண்டு அவற்றை நீக்கி, இந்நூலைப் பதிப்பித்துள்ளதாகப் பதிப்புரை தெரிவிக்கிறது. பாடல்களைத் தேடிப் பார்ப்பதற்கு வசதியாகப் பின்னிணைப்பில் பாடல் முதல் குறிப்பகராதி தரப்பட்டுள்ளது. பரணி இலக்கிய வகை நூல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. சோழர் வரலாறும் சாளுக்கிய வம்சத்துக்கும் சோழ வம்சத்துக்கும் இடையேயான உறவும் விவரிக்கப்பட்டுள்ளது.

கலிங்கத்துப் பரணி பற்றிய முழுமையான ஆவணமான நூல் எனப் பதிப்புரை சொல்வதை உண்மை என்றே உணர்த்துகிறது

கலிங்கத்துப் பரணி பதிப்பும் உரையும்:

டாக்டர் ப. சரவணன்

சந்தியா பதிப்பகம்

எண் 77, 53வது தெரு

9-வது அவென்யூ அசோக் நகர்

சென்னை 600 083

தொலைபேசி: 2489 6979

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x