Published : 29 Jul 2017 12:17 PM
Last Updated : 29 Jul 2017 12:17 PM
கரூர் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் முதலாவது புத்தகத் திருவிழா கரூர் கொங்கு திருமண மண்டபத்தில் 21-ம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது.
நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் புத்தக விற்பனை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைகிறது. கச்சிதமான திட்டமிடல் காரணமாக முதல் புத்தகத் திருவிழா வெற்றியடைந்திருக்கிறது.
மாதக் கடைசி என்றாலும், வாராது வந்த மாமணியாய் வந்த புத்தகத் திருவிழாவைக் கொண்டாடித்தீர்த்துவிட்டார்கள் வாசகர்கள். அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி என்றாலும், பள்ளி மாணவர்களுக்கு 2% கூடுதலாக மொத்தம் 12% தள்ளுபடி வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கூட்டத்தைவிடவும், மாணவர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
புத்தகக் கண்காட்சி அரங்கத்துக்கு மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அரங்கம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்ததுடன், 27-ம் தேதியன்று கலாமின் 2-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. போக்குவரத்து வசதியின்றி அரசு பள்ளிக் குழந்தைகள் இந்தப் புத்தகக் காட்சிக்கு வராமல் போய்விடக் கூடாது என்பதற்காக, அவர்களையும் தனியார் பள்ளி வாகனங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மற்ற ஊர்களும் பின்பற்ற வேண்டிய விஷயம்.
வெயில் கொடுமையைக் கருத்தில் கொண்டு, கண்காட்சிக்கு வந்திருந்த மாணவர்கள் அனைவருக்கும் கரூர் வீரராக்கியத்தைச் சேர்ந்த விகேஏ என்ற தனியார் பால் நிறுவனம் இலவசமாக மோர் வழங்கியது. சிற்றுண்டிச் சாலையிலும் உணவுகள் நியாயமான விலையில் விற்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பதுபோல் ஞாயிறு அன்று வாசகர் கூட்டம் வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும்!
வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆர்.பிரபு, கரூர்
முன்பெல்லாம் புத்தகத் திருவிழா என்றால், விடுமுறை எடுத்துக்கொண்டு அதற்கென நேரம் ஒதுக்கி வெளியூருக்குப் பயணப்பட வேண்டியதிருக்கும். இப்போது சொந்த ஊரிலேயே, கிடைக்கிற நேரத்தில் புத்தகம் வாங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் புத்தகக் காட்சியில் இறையன்புவின் ‘ஏழாவது அறிவு’ 3 தொகுதிகள் உட்பட 15 புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். புத்தகக் காட்சி முடிவதற்குள், இன்னொரு முறை வர வேண்டும்.
கவிதா ராமசுப்பிரமணியன், கரூர்
புதிய புதிய தலைப்புகளில் ஒரே இடத்தில் லட்சக்கணக்கான புத்தகங்களைப் பார்த்ததே பிரமிப்பாக இருந்தது. இருந்தாலும் என்னுடைய தேர்வு எல்லாம் கல்கியின் புத்தகங்களாகவே இருந்தன.
பெரிய அளவில் ஒரே புத்தகமாக வந்துள்ள, ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ உள்ளிட்ட புத்தகங்களை வாங்கினேன்.
குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தகங்களை அதிகம் பார்க்க முடியவில்லை. இந்துமதி, சிவசங்கரி ஆகிய பெண் எழுத்தாளர்களின் நாவல்கள் இல்லாதது ஒரு குறை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT