Last Updated : 02 Jul, 2017 11:43 AM

 

Published : 02 Jul 2017 11:43 AM
Last Updated : 02 Jul 2017 11:43 AM

சிவகுமார்: தூரிகையால் பேசும் நடிகன்

நடிகராகவும் பேச்சாளராகவும் மட்டுமே பெரிதும் அறியப்பட்டிருக்கும் சிவகுமாரின் இன்னொரு முகத்தைப் பொதுவெளிக்குத் தொகுத்துக் காட்டுகிறது `பெயிண்டிங்ஸ் ஆஃப் சிவகுமார்` புத்தகம்.

சிவகுமாரின் ஓவிய உலகை அவருடைய ஓவியங்களுக்கு வெளியிலும் அறிந்தவன் நான். பதின்ம வயதில் சென்னை வந்து ஓவியக் கல்லூரியில் ஓவியம் கற்கத் தொடங்குவதற்கு முன்பாகவே, ஓவியக் கலையில் நல்ல தேர்ச்சி அவரிடம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் வரைந்த ஓவியங்களே அதற்குச் சாட்சி. சென்னை ஓவியக் கல்லூரியில் சந்தானராஜ், ராம்கோபால், பணிக்கர், தனபால் என்று மிகச் சிறந்த ஓவியக் கலைஞர்களிடம் பயின்றதன் மூலம் தனது கலையைச் செழுமைப்படுத்திக்கொண்டார் சிவகுமார். கோட்டோவியம், நீர் வண்ண ஓவியம், தைல வண்ண ஓவியம் என்று அத்தனை அம்சங்களையும் கற்றுத் தேர்ந்தார்.

நம்மிடம் நேரடியாக உரையாடும் கோடுகள் சிவகுமாருடையவை. வேகம் நிறைந்த கோடுகள் அவருடையவை. மிக விரைவாக ஓவியம் வரையும் திறமை கொண்டவர் சிவகுமார். கோயில்கள் முதல் நீர்நிலைகள் வரை தமிழகத்தின் பல முக்கியமான நிலவியல் அடையாளங்கள், ஆளுமைகளை சிவகுமார் தன் ஓவியங்களுக்குள் அடைத்திருக்கிறார்.

ஓவியர் ஆதிமூலமும் சிவகுமாரும் நல்ல நண்பர்கள். ஆதிமூலம் மூத்தவர். அவர்மீது சிவகுமாருக்குப் பிரியம் அதிகம். ஆதிமூலத்தை ரெம்ப்ராண்ட் பாணியில் தைல வண்ண ஓவியமாக வரைந்திருக்கிறார் சிவகுமார். காந்தி, பெரியார், காமராஜர் என்று தான் மதிக்கும் அரசியல் தலைவர்களையும் வரைந்திருக்கிறார். தனக்குப் பிடித்த கலைஞர்களை வரைந்திருக்கிறார். அவர் வரைந்திருக்கும் குற்றால அருவி ஓவியம் இந்தப் புத்தகத்தில் என்னை அதிகம் கவர்ந்த ஓவியங்களில் ஒன்று. அதேபோல, தமிழகக் கோயில்களின் ஓவியங்களின் வெளிப்படும் வண்ணத்தெறிப்புகள் பிரமிப்பூட்டுபவை.

மரபையும் நவீனத்தையும் உள்வாங்க முனைந்த மனம் சிவகுமாருடையது என்று சொல்லலாம். அவர் ஓவியக் கல்லூரியிலிருந்து வெளியேறி நவீன ஓவியம் நோக்கி நகர்ந்த தருணத்தில் சினிமா உலகம் அவரை முழுமையாக உள்வாங்கியதை ஒரு விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் நவீன ஓவியப் போக்கை ஒரு தீவிர நிலை நோக்கி சந்தானராஜ், பணிக்கர், தனபால் போன்றோர் எடுத்துச்செல்ல ஆரம்பித்த காலகட்டத்தில் சிவகுமார் திரை நட்சத்திரமாகப் பிரகாசிக்கத் தொடங்கியிருந்தார். ஒருவேளை தொடர்ந்து ஓவியத் துறையில் அவர் இயங்கியிருந்தால் நவீன ஓவியத்திலும் அவர் பரிமளித்திருப்பார் என்பதை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஓவியங்கள் உறுதிப்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் இப்படியான ஓவியங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாகப் பொதுவெளிக்கு வருவது அரிதான நிகழ்வு. ஓவியப் புத்தகங்களை வாங்குவோர் குறைவு. தமிழ்ச் சமூகத்தின் ஞாபகங்களின் கடைசி அடுக்குகளில் புதைந்துக் கிடப்பவர்களுள் ஒருவன் ஓவியன் என்பதால், ஓவியர்களின் புத்தகங்களுக்கு இங்கே சந்தை என்பதே கிட்டத்தட்ட இல்லை. சினிமா வாயிலாக ஒவ்வொரு தமிழக வீட்டுக்கும் அறிமுகமானவர் சிவகுமார் என்பதால், இந்தப் புத்தகம் தமிழக அலமாரிகளைச் சென்றடையும் ஒரு வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. மரபான ஓவியங்களில் தொடங்கி நவீன ஓவியங்களின் தொடக்கம் வரையிலான ஒரு பயணத்தையும் இந்தப் புத்தகம் தன் இயல்பில் கொண்டிருப்பதால், ஒரு நல்ல ஓவிய அறிமுக நூலாகவும் இது அமையும் வாய்ப்பைப் பெறுகிறது. பள்ளி, கல்லூரிகளில் பாடமாக வைக்கக்கூடிய ஒரு நூலாக இது வந்திருக்கிறது எனலாம்.

சிவகுமாரிடம் மெச்ச வேண்டிய இன்னொரு விஷயம், தன் உடலை யோகா மூலம் பராமரிப்பதுபோலவே ஓவியங்களையும் தொடர்ந்து பாதுகாத்துப் பராமரித்து வந்திருக்கிறார் - இது நம்மூரில் அனைத்து ஓவியர்களும் மனதில் கொள்ள வேண்டிய, பின்பற்ற வேண்டிய ஒரு ஒழுங்காக எனக்குத் தோன்றுகிறது. 1960-களில் வரையப்பட்ட ஓவியங்கள்கூட இன்றைய ஓவியங்களின் பொலிவுடன் தோற்றம் அளிக்கின்றன. உயர்ந்த தரத்துடன் அவற்றைப் புத்தக வடிவில் கொண்டுவந்திருக்கும் `அல்லயன்ஸ் பதிப்பகத்தார்` பாராட்டுக்குரியவர்கள்!

வீர சந்தானம், மூத்த ஓவியர்.



ஓவியரை நடிகர் வெல்லவில்லை!

- சிவகுமார் குறும் பேட்டி

* நடிகர் சிவகுமார், ஓவியர் சிவகுமாரை விழுங்கிவிட்டாரா?

அப்படி நினைக்கவில்லை. ஏழு ஆண்டு ஓவியத்தில் தொட்ட எல்லையை நாற்பதாண்டு நடிப்பில் தொட்டதாகச் சொல்ல மாட்டேன்.

* சிவகுமாரின் முதன்மை அடையாளம் எது என்று இன்று நினைக்கிறீர்கள்? நடிகரா, ஓவியரா, பேச்சாளரா?

தூரிகையைக் கையில் ஏந்தியுள்ள பேச்சாளன்.

* சினிமாதான் உங்கள் ஓவிய உலகைப் பறித்துக்கொண்டது. இப்போதுதான் நடிப்பதில்லை என்று முடிவெடுத்துவிட்டீர்களே, ஏன் மீண்டும் ஓவியத்தைக் கையில் எடுக்கவில்லை?

ஓவியத்தைவிட 'திருக்குறள்-100' போன்ற உரைகள் மக்களுக்கு அதிகம் பயன்படும் என்பதால் அதைக் கையில் எடுத்துவிட்டேன்.

* உங்களுடைய பல ஓவியங்களை ஒரே அமர்வில் பத்து, பதினைந்து மணி நேரம் உட்கார்ந்து வரைந்திருக்கிறீர்கள். எப்படிச் சாத்தியமானது?

16 வயதிலிருந்து சுவாசத்துக்கு இணையாக இன்றும் தொடர்ந்து செய்துவரும் யோகா. தவம் செய்பவன் தனிமையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அமர முடியும்.

* தமிழ் ஓவியத் துறையின் இன்றைய போக்கை எப்படிப் பார்க்கிறீர்கள்?

மக்களுக்குப் புரியாத எந்தக் கலையும் வளராமல் போய்விடும் என்ற அச்சம் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகள் மூலமாகவாவது கோபுலு, மணியம், சில்பி, எஸ்.ராஜம் போன்றோர் ஓவியக் கலையை மக்களிடம் சேர்த்தார்கள். இன்றைய சூழல் அச்சமூட்டுகிறது.

-கேள்விகள்: ஜெயந்தன்



பெயிண்டிங்ஸ் ஆஃப் சிவகுமார் எ யுனீக் கலெக்‌ஷன்

தொகுத்தவர்: ஜி. தனஞ்ஜெயன்

விலை: ரூ. 2000

வெளியீடு: அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை-4 தொடர்புக்கு: 044- 2464 1314

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x