Published : 29 Jul 2017 11:15 AM
Last Updated : 29 Jul 2017 11:15 AM

புத்தக வாசிப்பு நலமா?

ண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இடையிலான உரையாடல்கள் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொள்வதை அடுத்து, அவ்வப்போதைய அரசியல் பரபரப்புகள், சினிமா, விளையாட்டு ஆகியவற்றைப் பற்றியே அதிகமும் இருக்கிறது. கடைசியாகப் படித்த புத்தகங்களைப் பற்றி உரையாடும் பழக்கம் ஏன் நம்மிடம் குறைந்துபோனது?

தொலைக்காட்சித் தொடர்களின் வருகைக்கு முன்பு, பெண்கள் தாங்கள் பார்த்த சினிமாக்களைப் போல படித்த கதைப் புத்தகங்களைப் பற்றியும் தோழிகளுடன் உரையாடும் வழக்கம் இருந்தது. மாணவர்களும் இளைஞர்களும் தாங்கள் வாங்கிப் படித்த புத்தகங்களை நண்பர்களிடம் படிக்கக் கொடுக்கிற வழக்கமும் இருந்தது. ஊழியர் கள் அலுவலகங்களில் உணவு வேளையின்போது தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றிப் பேசுகின்ற சூழல் இருக்கத்தான் செய்தது. கல்கி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுஜாதா என்று தமிழின் முக்கியமான பல எழுத்தாளர் கள் இப்படித்தான் புதிய வாசகர்களுக்கு அறிமுகமானார்கள். கச்சேரியில் கேட்ட பாடல்களையும் பாடகர்களையும் பாராட்டிப் பேசுவதுபோல, படித்த புத்தகங்களில் பிடித்த வரிகளையும் அதை எழுதியவர்களையும் பற்றிப் பேசும் ரசனை மரபை இன்றைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருக்கிறோம். நவீனக் கைபேசிகள் வசதி வந்துவிட்ட பிறகு படித்த, ரசித்த நகைச்சுவைத் துணுக்குகளைப் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறோம். ஆனால், படித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களிடம் பேசுவதற்கு, விவாதிப்பதற்கு நாம் நேரம் ஒதுக்குவதில்லை.

புத்தக வாசிப்பு என்பது கல்வித் துறையினருக்கும் இலக்கியவாதிகளுக்கும் மட்டுமே உரியதல்ல. அவர்கள் புத்தகங்களை எழுதலாம். ஆனால், வாசகப் பரப்பு என்பது எழுதுபவர்களை மட்டுமே உள்ளடக்கியதல்ல. புத்தகங்களின் இலக்கு வாசகர்கள்தான். புத்தகங்களால் அதிகமாகப் பயனடைபவர்களும் அவர்களே. புத்தக வாசிப்பு என்பது தனிப்பட்ட அனுபவமாக இருக்கலாம். ஆனால், படித்த புத்தகங்களைப் பற்றி நண்பர்களிடம் விவாதிக்கும்போதுதான் புத்தகங்களில் இடம்பெற்ற தகவல்களையும் கருத்துகளையும் பற்றி மேலதிகமாகத் தெரிந்துகொள்ள முடியும், மாறுபட்ட கருத்துகளையும் அறிந்துகொள்ள முடியும். விவாதங்கள் இல்லாத புத்தக வாசிப்பு அதன் முழுப் பயனை அடைவதில்லை.

பத்திரிகைகளில் வெளிவரும் நூல் விமர்சனங்களும் அறிமுகங்களும் வாசகர்களுக்கு நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தலாம். ஆனால், அதையும் தாண்டி வாசகப் பரப்பு பரந்து விரிந்தது. பொதுச் சமூகம் முழுவதும் புத்தகக் கலாச்சாரத்தில் முனைப்புடன் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசும்போது அவர்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேச வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் தாங்கள் படித்த நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும். நண்பர்கள் தாங்கள் படித்ததில் பிடித்த புத்தகங்களைப் பரஸ்பரம் அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். நண்பர்களுடன் புத்தகங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். நம்மிடம் ஏற்கெனவே இருந்த நல்லதொரு வழக்கத்தை இன்றைக்கு மீட்டெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். வாசிப்பு அனுபவத் தைப் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை இன்றே தொடங்குவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x