Published : 29 Jul 2017 11:47 AM
Last Updated : 29 Jul 2017 11:47 AM
சென்னை ராயப்பேட்டை ஒஎம்சிஏ மைதானத்தில் தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்தின் சார்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகத் திருவிழா கடந்த 21-ஆம் தேதி அன்று தொடங்கியது.
250-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ள இந்தப் புத்தகத் திருவிழாவில், சமூகம், வரலாறு, கல்வி, கலை-இலக்கியம், அறிவியல், அரசியல், ஆன்மீகம், விளையாட்டு, சமையல் தொடர்பான பல்லாயிரக்கணக்கான தலைப்புகளில் பல லட்சம் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இங்கு வாங்கும் அனைத்து நூல்களுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடி தரப்படுகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் வாசகர்களுக்கு இந்த ஆண்டு ‘அனுமதி இலவசம்’ என்பது மகிழ்ச்சியான செய்தி.
தினமும் மாலை நேரங்களில் சிறப்பு நிகழ்வுகளாக தமிழ் சினிமா-100, மார்க்ஸ்-200, ராமானுஜர் - 1000 ஆகிய நிகழ்வுகளோடு கவிதை வாசிப்பும், சென்னை நூலகங்கள் பற்றிய கலந்துரையாடலும் இதுவரை நடைபெற்றுள்ளன. தினமும் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை எழுத்தாளர்கள் பங்கேற்கும் ‘எழுத்தாளர் முற்றம்’ எனும் நிகழ்ச்சி சிற்றரங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இன்று (ஜூலை-29, சனிக்கிழமை) மாலை ‘பெண்களும் அதிகாரமும்’ எனும் தலைப்பிலும், நாளை (ஞாயிறு) சிந்துவும் மக்களும், சட்டமும் மக்களும், தாய்மொழிச் சவால்கள் எனும் தலைப்பிலான கருத்தரங்கங்கள் நடைபெறவுள்ளன. நாளை மறுநாள் (திங்கள்) நிறைவு விழாவில், தேசிய சுகாதாரக் குழும இயக்குநர் தரேஷ் அகமது, மலையாள எழுத்தாளர் அசோகன் செருவில், எழுத்தாளர் பிரபஞ்சன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொளுத்தும் வெயில் எல்லாவற்றையும் கடந்து, மக்கள் ஆர்வமாக புத்தகத் திருவிழாவிற்கு வருகிறார்கள் என்பதே வாசிப்பின் மீதான ஆர்வம் என்றைக்கும் குறையாது என்பதை உணர்த்துவதாக உள்ளது.
புத்தகத் திருவிழா துளிகள் :
தரமான வரலாற்றுத் தடங்கள்…
35 ஆண்டுகளாக வரலாற்று நூல்களைத் தரமான தயாரிப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்டு வரும் ‘தி ஆசியன் பப்ளிகேஷ்னஸ்’ நிறுவனத்தின் புத்தக அரங்கும் இந்தப் புத்தகத் திருவிழாவில் கவனிக்கத்தக்க அரங்காக அமைந்தது.
டெல்லியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளாக சென்னையிலும் கிளை அலுவலகத்தைத் தொடங்கியுள்ளது. இந்திய வரலாற்றை, அதன் பன்மைத்துவத்தைப் பறைசாற்றும் 800-க்கும் மேற்பட்ட நூல்களை இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அறிவியல் கற்றல் உபகரணங்கள்…
பஞ்சாபைச் சேர்ந்த ‘சந்து சயின்டிஃபிக் எஜிகேஷன்’ எனும் நிறுவனத்தின் அரங்கில் 500-க்கும் மேற்பட்ட எளிய அறிவியல் கற்றல் உபகரணங்கள் இடம்பெற்றுள்ளன. சிறிய கத்தரி தொடங்கி, விதவிதமான வடிவில், வேறுவேறு வண்ணங்களில் லென்ஸ், பைனாக்குலர் போன்ற அறிவியல் கற்றல் செயல்பாடுகளுக்குப் பயன்படும் பொருட்கள் குவிந்து உள்ளன.
5 ரூபாய் மதிப்புள்ள காந்தம் முதல், ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள பைனாக்குலரும் விற்கப்படுகின்றன. 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் முதல்முறையாக சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்றுள்ளது.
‘ தி இந்து’ சிறப்பு விற்பனை அரங்கு எண்:
30-இல் இடம்பெற்றுள்ள ‘தி இந்து’ அரங்கில் பழைய வெளியீடுகளுக்கு 50 சதவீத சிறப்புத் தள்ளுபடியும், புதிய நூல்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் தரப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல், வாசகர்கள் ஆர்வமாக வந்து சந்தா செலுத்திச் செல்வதையும் ‘தி இந்து’ அரங்கில் காண முடிந்தது.
இளம் தம்பதியினரின் புத்தகக் காதல்
தர்மபுரியிலிருந்து புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்திருந்தனர்
இளம் தம்பதிகள் சங்கர் – லெட்சுமி. கைகள் நிறைய புத்தகங்களோடு நின்றிருந்தவர்களிடம் பேசியபோது, ”கிராமங்களில் கல்விப் பணி செய்துவரும் தொண்டு நிறுவனத்தில் நான் வேலை செய்கிறேன். அதனால் கல்வி தொடர்பான நூல்களையும் குழந்தைகளுக்கான நூல்களையும் வாங்கும் ஆவலில் வந்திருக்கிறேன்” என்று சங்கர் சொல்ல, “என் வாழ்நாளில் நான் இவ்வளவு புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பது இப்போதுதான்..!” என்று விழிகளை அகல விரித்துச் சொன்னார் லெட்சுமி.
சாரலிலிருந்து திருவிழாவிற்கு…
6-வது ஆண்டாக புத்தகத் திருவிழாவில் நூல்கள் வாங்குவதற்கென்றே குற்றாலத்திலிருந்து வந்திருந்தார் முகிலன். ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான முகிலன் 4 நாட்கள் சென்னையில் அறை எடுத்து தங்கி, தினமும் வந்து நூல்களை வாங்கிச் செல்கிறார். “ஆண்டு முழுவதும் பத்திரிகைகளில் வரும் நூல்களைக் குறித்து வைத்துக்கொள்வேன். அவற்றை புத்தகத் திருவிழாவிற்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்வேன்” என்றவர், மூன்று நாட்களில் 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் வாங்கி விட்டாராம். “இந்த முறை புதிய புத்தகங்களின் வரவு கொஞ்சம் குறைவு தான். சில பதிப்பகங்களின் புத்தக விலை அதிகமாக இருக்கு” என்றார்.
விற்பனை எப்படி..?
பொதுவாகவே இந்த முறை வாசகர் வருகை கொஞ்சம் குறைவுதான். வாசகர் வருகை குறைவு விற்பனையையும் பாதித்தது. போதிய அளவிற்கு விளம்பரங்கள் செய்யாததும் ஒரு குறை. புத்தகத் திருவிழாவிற்கு வந்த பிறகுதான், அன்றைய மாலை நிகழ்ச்சி என்னவென்பதை வாசகர்கள் அறிந்து கொண்டார்கள். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் மக்கள் அதிக அளவில் வரவில்லை. மேலும், பெற்றோர்களுக்கு குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கும் செலவுகள் வேறு அதிகமாக இருந்ததால் புத்தகம் வாங்குவதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை” என்றார் புத்தகத் திருவிழாவின் முதல் அரங்கான ‘போதிவனம்’ பதிப்பக உரிமையாளர் கருணா பிரசாத்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT