Published : 22 Nov 2013 12:59 PM
Last Updated : 22 Nov 2013 12:59 PM
வெறும் பாடப்புத்தகங்களை மட்டுமே அச்சிடும் பிரெயில் அச்சகங்களுக்கு மத்தியில், இலக்கியம் மற்றும் பொது அறிவுக்கு முக்கியத்துவம் கொடுத்த மதுரை பிரெயில் அச்சகத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
மதுரை சுந்தரராஜன்பட்டியில், இந்திய பார்வையற்றோர் சங்கம் சார்பில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மேல்நிலைப் பள்ளி மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. 2001 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் சிறந்த நிறுவனங்களுக்கான தேசிய விருது பெற்ற இந்தப் பள்ளியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிக்கும் வகையிலான பிரெயில் புத்தகங்களை வெளியிடும் அச்சகம் செயல்பட்டு வருகிறது.
1999-ல் தனது பிரெயில் புத்தகத் தயாரிப்புப் பணியைத் தொடங்கிய இந்த அச்சகம், தங்களுக்குத் தேவையான புத்தகங்களை மட்டுமின்றி, தமிழக அரசின் பள்ளிப்பாடப் புத்தகங்களுக்கான மூலப்பதிப்பை (சாப்ட் காபி) தயாரிக்கும் பணியையும் செய்து வருகிறது. படிப்படியாக பொதுவான புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கிய இந்த அச்சகம், 2007-ல் பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அனிதா தேசாய் எழுதிய கடற்புறத்துத்துக் கிராமம் நாவலின் தமிழாக்கம் உள்ளிட்ட 10 புத்தகங்களை வெளியிட்டது.
2010-ல் ‘Braillo Norway 200’ என்ற 25 லட்சம் மதிப்புள்ள நவீன அச்சுக்கருவியை ஸ்பான்ஸராக பெற்ற இந்த அச்சகம் பெரிய பெரிய புத்தகங்களையும் அச்சடிக்கத் தொடங்கியது. 2011 பிப்ரவரியில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி பிரெயிலில் வெளியிடப்பட்டது. இதன் மூலம் இந்திய மொழிகளிலேயே, 53 தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய தகவல் களஞ்சியத்தை வெளியிட்ட முதல் அச்சகம் என்ற பெயரை இது பெற்றது.
இந்தப் பணிகளை எல்லாம் பாராட்டி மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை மிகச்சிறந்த பிரெயில் அச்சகத்துக்கான தேசிய விருதுக்கு இந்த அச்சகத்தைத் தேர்வு செய்துள்ளது. வருகிற டிசம்பர் 3-ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் விழாவில் இந்த விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்க உள்ளார். தமிழகத்தில் சென்னையில் இரண்டு, மதுரையில் ஒன்று, கோவையில் ஒன்று என நான்கு அச்சங்கள் உள்ளன. இந்தியா முழுக்க சுமார் 80 அச்சகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதைச் சாதித்தது எப்படி என்று இந்திய பார்வையற்றோர் சங்கத்தின் நிறுவனர் எஸ்.எம்.ஏ.ஜின்னாவிடம் கேட்டபோது, இந்த விருது எங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல. இந்த அச்சகத்துக்கு உதவியவர்களுக்கும் பங்கு இருக்கிறது. பிரெயில் புத்தகங்களை அச்சிட வழக்கத்தைக் காட்டிலும், 20 மடங்கு அதிகம் செலவாகும் என்பதால், பாடப்புத்தகத்தைத் தவிர மற்றதை யாரும் முயற்சிப்பதில்லை. ஆனால் நாங்கள் தமிழ் இலக்கியம், இலக்கண நூல்கள், சிறுவர் இலக்கியங்கள், வாழ்க்கை வரலாறு, சமய நூல்கள், பொது நூல்கள், அகராதி உள்பட ஏராளமான புத்தகங்களை வெளியிட்டுள்ளோம். இதுதவிர பார்வையற்றவர்களுக்காக நாங்களே, பிரெயில் முறையில் மாதப் பத்திரிகை நடத்துகிறோம். இதில், கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம், பொது அறிவு, சமூக சிந்தனை, நடப்பு நிகழ்வுகள் மட்டுமின்றி பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் பார்வையற்றோர் தொடர்பான செய்திகளையும் மறுபிரசுரம் செய்கிறோம். தி இந்து தமிழின் நம்பிக்கை பகுதியில் வெளிவந்த பல செய்திகளை நாங்கள் மறுபிரசுரம் செய்திருக்கிறோம்.பார்வையற்ற வாசர்களின் கதை, கவிதை உள்ளிட்ட படைப்புகளுக்கும் இடம் கொடுத்தோம். அதுதான் எங்களுக்கு வெற்றியைத் தந்திருக்கிறது. இனி, எங்களது அச்சகத்தில் இன்னும் அதிக திறனுள்ள பிரெயில் அச்சு எந்திரத்தை கூடுதலாக நிறுவி, ஏராளமான புத்தகங்களை வெளியிட முடிவு செய்திருக்கிறோம். குழந்தைகளுக்கான அனைத்துப் புத்தகங்களையும் பிரெயிலில் தர வேண்டும் என்பது எங்கள் லட்சியம். எங்களுக்குள்ள ஒரே பிரச்சினை, டைப் செய்வதுதான். எனவே, நாளிதழ்கள், வாரப்பத்திரிகைகள் மற்றும் பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்கள் தொடர்பான மூலப்பதிவினை யுனிகோட் வடிவில் பெற்று அதை பிரெயில் எழுத்துருவாக மாற்றிப் பயன்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT