Published : 20 Jun 2015 10:33 AM
Last Updated : 20 Jun 2015 10:33 AM
எழுத்துச் சீரமைப்பையும், மொழி உருவாக்கத்தையும் ஒரு சில புத்தகங்கள் வெகு இயல்பாக நம் முன்னே எடுத்து வைக்கும். அப்படியான புத்தகங்களில் ஒன்றாகத்தான் டாக்டர் வா.செ. குழந்தைசாமி எழுதிய ‘தாய்மொழி பெறாததைச் சமுதாயம் பெறாது’ என்ற புத்தகத்தைப் பார்க்கிறேன். மொழியின் வழியே சமுதாய வளர்ச்சியை எந்த அளவுக்குப் பிரதிபலிக்கவைக்க முடியும் என்பதற்குச் சிறந்த அடையாளம் இப்புத்தகம்.
அதேபோல தமிழில் வர வேண்டும் என்று நான் விரும்பும் புத்தகம் மால்ட்டா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் எட்வர்ட் டி போனோ எழுதிய ‘சில்ட்ரன் சால்வ் பிராப்ளம்ஸ்’. ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு நூலகத்தில் இந்நூலைப் படித்தேன். குழந்தைகளிடம் இருக்கக்கூடிய கற்பனைத்திறன் பற்றிய புத்தகம் இது. குழந்தைகள் வளர வளர பெரியவர்களால் அளிக்கப்படும் பாடப் புத்தகங்கள், கல்வி முறைகள் எல்லாம் அவர்களது கற்பனைத் திறனை எப்படி முடக்கிப்போடுகின்றன என்பதை விவரிக்கும் புத்தகம்.
ஒரு அறை முழுக்க 100 குழந்தைகளையும், 100 பெரியவர்களையும் வைத்து, ஆராய்ச்சி அடிப்படையில் ஒரு பயிற்சி வகுப்பு நடக்கிறது. அந்த கலந்துரையாடலின்போது, ‘ஒரு பூனையும் நாய்க்குட்டியும் ஒன்றாக இருக்கும்போது சண்டை போட்டுக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை வரைந்து காட்டுங்கள்’ என்று இரு தரப்பினருக்கும் ஒரு தேர்வு வைக்கப்படுகிறது.
அந்தத் தேர்வில் கலந்துகொண்ட ஒட்டுமொத்த பெரியவர்களுமே நான்கு விதமான யோசனைகளை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்களின் யோசனை, பூனையை ஒரு அறையிலும் நாய்க்குட்டியை மற்றொரு அறையிலும் அடைத்து வைக்க வேண்டும் என்கிற முறையிலேயே இருந்தது. ஆனால், குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு அளவேது! 75 விதமான யோசனைகளை அவர்கள் வரைந்திருந்தார்கள்.
அதில் ஒரு குழந்தை, ‘அறையில் இருக்கும் பூனையின் வாலில் எலும்புத்துண்டையும், நாய்க்குட்டியின் வாலில் மீனையும் கட்டிவிட வேண்டும்’என்பதைச் சித்தரிக்கும் ஓவியத்தை வரைந்தது. மற்றொரு குழந்தை, ‘அறையின் நடுவே ஒரு கண்ணாடியை வைத்துவிட்டால் இரண்டும் சண்டை போட முயற்சி செய்து தோற்றுவிடும். பிறகு, அந்தக் கண்ணாடியை எடுத்துவிட்டாலும், இடையில் கண்ணாடி இருக்கிறது என்றே நினைத்து சண்டை போட்டுக்கொள்ளாது’என்று யோசித்திருந்தது.
அந்த அறையில் இருந்த பூனை, நாய்க்குட்டிக்குப் பதிலாக நாளை இரண்டு குழந்தைகளை வைத்துப் பார்க்கலாம். அல்லது இரண்டு உயர் பதவியில் உள்ள அதிகாரியை எடுத்துக்கொள்ளலாம். ஏன், இரண்டு நாடுகளைக்கூட எடுத்துக்கொள்ளலாமே. அப்படியான சூழலுக்குத் திறமையான யூகங்களை வெளிப்படுத்திய குழந்தைகளின் ஆற்றல் எத்தனை சிறப்பானது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துவைத்தது.
- ம. மோகன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT