Published : 28 Jun 2017 10:20 AM
Last Updated : 28 Jun 2017 10:20 AM

திசையில்லாப் பயணம் 12: இயந்திர முகம்!

மனிதாபிமானச் சிந்தனையின் கொடுமுடி மார்க்சிய சித்தாந்தம்! ஆனால், சோவியத் ஆட்சியில் அது செயல்பட்ட முறையின் காரணமாக வீழ்ச்சி அடைந்தது. மனித முகமற்ற இயந்திர முக ஆட்சி!

நம் நாட்டிலும் இப்போது நம்மை அடையாள அட்டைகளாக ஆக்கும் முயற்சிதான் நடந்தேறி வருகிறது!

சோவியத் யூனியனில் கம்யூனிஸம் வீழ்ச்சி அடையுமென்று எனக்கு 1984 ஜூலை மாதத்திலேயே தெரிந்துவிட்டது. அப்போது தான் நான் வார்ஸாவில் இருந்து மாஸ்கோ வழியாக டெல்லிக் குச் சென்றேன் ஏரோஃப்ளூட் விமானத்தில் (சோவியத் ஏர் லைன்ஸ்) வார்ஸாவில் இருந்து மாஸ்கோவுக்கு. போலிஷ் ஏர்லைன்ஸில் மாஸ்கோவில் இருந்து டெல்லிக்கு ஏரோஃப்ளூட்.

போலிஷ் விமானங்களிலும், ஏரோஃப்ளூட்டிலும் ரிசர் வேஷன் வசதி கிடையாது. டார்வினின் சித்தாந்தம் செயல்முறை யில். ‘வலிமையுடையது எஞ்சும்!' கும்பகோணத்தில் இருந்து நாச்சியார்கோயில் போக பஸ் பிடிப்பதற்கு ஓடுவது போல், வேகமாகச் சென்றால் வசதியான இடத்தில் உட்கார முடியும்.

என்னுடன் வார்ஸா பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த இளம் மாணவத் தம்பதியர் இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்தார்கள். ஏவா, ததாவூஷ். இருவரும் இந்திய மொழிவியல் துறை மாணவர்கள்.

மாஸ்கோவில் ஓர் இரவு தங்கி, அடுத்த ஆள் அரசாங்க ஏற்பாட்டில் மாஸ்கோவை ஒரு பேருந்தில் (கீழே இறங்காமல்) சுற்றிப் பார்த்துவிட்டு அடுத்த நாள் இரவு டெல்லி போவது என்பது திட்டம். எனக்கு ரஷ்ய மொழி தெரியாததால், ததாவூஷ் எனக்கு உதவி செய்வதாகக் கூறியிருந்தான்.

மாஸ்கோவில் இறங்கியதும் எங்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சோவியத் யூனியனைச் சேர்ந்தவர்களும், கீழ் ஐரோப்பிய கம்யூனிஸ நாட்டைச் சேர்ந்தவர்களும், மற்றைய நாட்டுப் பயணிகளுடன் ஒன்றாகப் விமான நிலையத்தினின்றும் வெளியேற முடியாது. எங்களைப் பிரித்துவிட்டார்கள்.

என்னுடன் வந்த மாணவர்களுக்கும் எனக்கும் ஒரே ஹோட்டலில்தான் தங்கு வதற்கு ஏற்பாடு. பிறகு எங்களை ஏன் பிரிக்க வேண்டுமென்று புரியவில்லை.

இமிக்ரேஷன் கவுண்டரில் என்னையும், என் பாஸ்போர்டில் இருந்த புகைப்படத்தையும் ஐந்து நிமிஷங்கள் தொடர்ந்து உக்கிரமாகப் பார்த்தார் பிரம்மாண்டமாக இருந்த ரஷ்ய அதிகாரி. எனக்கு பயமாக இருந்தது.

அவர் என் பாஸ்போர்ட்டைத் திரும்பக் கொடுத்ததும், இரண்டு மிலிட்ஸியா (போலீஸ்) அதிகாரிகள் என்னைத் தொடர்ந்தார்கள். இன் னொரு கவுண்டரில் நிற்கச் சொன்னார்கள். அங்கு என் பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு இலக்கமிட்ட ஒரு சீட்டைக் கொடுத்தார்கள். என்னைக் கைது செய்திருக்கிறார்களா, என்ன வென்று எனக்குப் புரியவில்லை. ரஷ்யத் தாய்மொழியில் ஆங்கிலம் பேசிய ஒருவர் அடுத்த நாள் நான் திருப்பிப் போகும்போது, அவர்கள் கொடுத்திருக்கும் சீட்டைக் காண் பித்து என் பாஸ்போர்ட்டைப் பெற்றுக் கொள்ள லாம் என்றார். அதாவது, நான் எங்கும் தப் பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்!

போலீஸ்காரர்கள் இருவரும் என்னை நீண்ட ஒரு பெரிய பேருந்துக்கு அழைத்துச் சென் றார்கள். அந்த பேருந்தில் இருந்த நான்கு போலீஸ்காரர்களிடம் என்னை ஒப்படைத் தார்கள்.

“எங்கே போகிறோம்?’’ என்று நான் சைகை மொழியில் கேட்டேன்.

‘‘ஹோத்தல்’’ என்று ஓட்டுநர் சொன்னார். ரஷ்ய மொழியில் ‘ட'கரம் கிடையாது. நான் ஒரு வன்தான் பயணி. எனக்கா நாலு போலீஸ் காரர்கள்?

ஹோட்டலுக்குப் போன பிறகுதான் தெரிந் தது, ததாவூஷும் ஏவாவும் அங்குதான் தங்கி யிருக்கிறார்கள் என்று. ஆனால்,என்னையும் அவர்களையும் ஒரு பெரிய sound-proof கண்ணாடித் தடுப்பு பிரித்தது. கம்யூனிஸ நாட்டைச் சேர்ந்த விசுவாசமான குடிமக்களை வெளிநாட்டார், மாஸ்கோவில் தங்கியிருக்கும் வரை கெடுத்துவிடக்கூடாது!

நான் கண்ணாடித் தடுப்புக்கு இந்தப் பக்கம், அவர்கள் இருவரும் அந்தப் பக்கம்! ‘Pantomime' மொழியில் உரையாடினோம்!

என் அறைக்குத் திரும்பியதும் நான் திடுக் கிட்டேன். என் திகைப்பு ஆறரை அடி உய ரத்தில், வாட்டச்சாட்டமான உடல்வாகுடன் இன்னொரு கட்டிலில் பள்ளி கொண்டிருந்தது. ‘கருகரு’ என்று வளர்ந்திருந்த அடர்த்தியான தாடி, மீசை. மார்பில் கருப்பு வயல். சிவந்த மேனி. ஆஃப்கானியர் என்று தெரிந்தது.

நான் ரிசப்ஷனுக்குச் சென்று, ‘‘என் அறையில் இன்னொருவர் படுத்திருக்கிறார்…’’ என்றேன்.

‘‘ஆமாம். இங்கு எல்லாமே டபிள் ரூம் தான்’’ என்றார் அவர் உடைந்த ஆங்கிலத்தில்.

நான் அறைக்குத் திரும்பியபோது, அவர் கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.

என்னை உற்றுப் பார்த்தார். தாடியைப் பரிவுடன் நீவினார். என் பேரைச் சொல்லிக் கொண்டே என் கையை அவரிடம் நீட்டினேன். அவர் கைக் குலுக்கவில்லை. ‘‘அயூப்…’’ என்றார்.

அவர் என்னுடன் சிநேகபாவத்துடன் இருக்க விரும்பவில்லை என்று எனக்குத் தோன்றிற்று.

நான் குளியலறைக்குச் சென்று முகத்தைக் கழுவிக்கொண்டு, பிறகு சாப்பிடச் சென்றேன். கூப்பன் கொடுத்திருந்தார்கள்.

ஒரு பணிப்பெண் வந்து நின்றாள்.

‘‘வெஜிடேரியன்’’ என்றேன் நான்.

‘‘வெஜிடேரியன்?’’

‘‘ஆமாம்!’’

கால் மணி நேரம் கழித்து உப்பு மிளகு போட்டு அழகாக நாலு துண்டுகளாக வெட்டப்பட்ட, ஒரு தக்காளியைக் கொண்டு வைத்தாள் அந்தப் பெண்.

‘‘திஸ் ஈஸ் ஆல்?’’ என்றேன் நான்.

‘‘மோர்?’’

‘‘எஸ்.’’

அவள் இன்னொரு தக்காளிப் பழத்தைக் கொண்டு வைத்தாள். இன்னும் கொஞ்சம் என்றால் இன்னொரு தக்காளி வருமென்று எனக்குத் தெரிந்தது.

இரண்டு தக்காளி சாப்பிட்டுவிட்டு இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டேன்.

அறைக்குத் திரும்பியபோது ஆஃப்கானிய நண்பர் தூங்கிக்கொண்டிருந்தார். அவர் கம்யூனிஸ்ட் ஆப்கானியராக இருக்க வேண்டுமென்று தோன்றியது. மாஸ்கோவில் பயிற்சி முடித்துக் கொண்டு காபூலுக்குப் போய்க்கொண்டிருக்கக் கூடும்.

அடுத்த நாள் காலை நான் எழுந்தபோது அவர் இல்லை.

மாஸ்கோவைச் சுற்றிப் பார்க்க பஸ் வந்ததும் அதில் ஏறிக்கொண்டேன். பயணிகளைக் காட்டிலும் போலீஸ்காரர்கள் அதிகமாக இருந்தார்கள்.

மாஸ்கோ ஓர் அழகான நகரம். ஆனால், கீழே இறங்கி நம் விருப்பப்படி சுற்றிப் பார்க்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. இயந்திர ரீதியாக ஒரு பெண் ஒவ்வொரு கட்டிடத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போனாள். அவள் ஆங்கில உச்சரிப்பில் பாதிதான் புரிந்தது.

என் கூட இருந்த சக பயணிகளில் ஒருவர்கூட ரஷ்யரோ அல்லது கீழை ஐரோப்பிய தேசத்தைச் சேர்ந்தவரோ இல்லை. முக்கால்வாசி பேர் வயதான ஜப்பானியர். அவர்களுக்குஆங்கிலம் தெரியுமா என்று கூட அந்த ‘கைடு' கேட்கவில்லை. அவர்களில் சிலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். சுற்றிக் காண்பித்துக்கொண்டிருந்த பெண்மணி சோவியத் சொர்க்க பூமியில், ஏகாதிபத்ய - முதலாளித்துவ நாடுகளில் இல்லாத சாதனைகளை எல்லாம் கம்யூனிஸ்ட் அரசாங்கம் நிகழ்த்திருக்கிறது என்று சொல்லிக்கொண்டே போனாள்.

திடீரென்று பஸ் நின்றுவிட்டது. ஓட்டுநர் எவ்வளவோ முயன்றும் அது நகர மறுத்தது. அந்தப் பெண் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறதோ என்று எனக்குத் தோன்றியது.

ஆண் பயணிகள் இறங்கித் தள்ளலாமே என்று ஒரு வயதான ஜப்பானியப் பெண்மணி சொன்னார். போலீஸ்காரர்கள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டார்கள். அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி நிரலில் இந்த ஏற்பாடு இல்லை!

ஒரு மணி நேரம் கழித்து வேறொரு பஸ் வந்தது.

ஹோட்டலுக்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.

தக்காளி ‘டின்னர்' முடிந்ததும், போலீஸ் புடை சூழ விமான நிலையம் சென்றேன்.

ததாவூஷும் ஏவாவும் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

‘‘போலந்து ஒரு சொர்க்க பூமி, சந்தோஷப்படுங்கள்!’ என்றேன் நான் அவர்களிடம்.

- பயணிப்போம்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x