Published : 18 Jan 2017 09:35 AM
Last Updated : 18 Jan 2017 09:35 AM

வாசிப்பு வழிகாட்டி | ‘பெண் ஏன் அடிமையானாள்?’ வாசித்திருக்கிறீர்களா?- பெருந்தேவி, கவிஞர்.

பெண் இருப்பையும் குரலையும் பேசும் பல நூல்கள் தமிழில் இருக்கின்றன. பெண்களால் எழுதப்பட்ட நூல்களைப் பற்றிச் சொல்லும் முன், ஓர் ஆணால் எழுதப்பட்ட நூலை முதலில் குறிப்பிட வேண்டும் என்று நினைக்கிறேன். தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ (பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு). பதின்ம வயதில் நான் வாசித்த, என் சிந்தனையை ஆற்றுப்படுத்திய நூல் இது.

மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் ‘காலந்தோறும் பெண்’(காலச்சுவடு வெளியீடு). ஆணின் உடைமைப் பொருளாய்ப் பெண் கருதப்படும் நிலை, திருமணச் சடங்குகளின் அரசியல் போன்றவற்றை இடதுசாரி அரசியல் பெண்ணியம் சார்ந்து அணுகுகிறார் ராஜம் கிருஷ்ணன்.

வரலாற்றை ஆண்-மையப் போக்கிலிருந்து அணுகும் பொதுத்தன்மைக்கு மாறாகப் பெண் ணின் வாழ்வனுபவங்களை, பார்வைக் கோணங் களை மையமாகக் கொண்டிருக்கும் ஒரு முக்கிய மான நூல், லட்சுமி அம்மாவின் ‘லட்சுமி என்னும் பயணி’(மைத்ரி வெளியீடு). அன்றாடத்திலிருந்து விலகாத தொழிற்சங்க நடவடிக்கைகளிலிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்த் தேசியம் என்று தன் நேரடி அரசியல் அனுபவங் களையும் தோழமைகளின் சிறப்பையும் பேசுகிற நூல் இது. புனைவெழுத்தில் பெண் இருப்பை அழுத்தமாகப் பதிவுசெய்திருப்பவர் அம்பை. பால் பாகுபாடு எனும் பண்பாட்டுக் கயிற்றால் நெரிக்கப்பட்ட பெண் குரலை மீட்டெடுக்கப் பார்க்கும் எழுத்து அவருடையது. வாழ்க்கையோடு பெண் நோக்கிலிருந்து சிறிதாவது பரிச்சயம் வேண்டும் என நினைப் பவர்கள் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ (க்ரியா வெளியீடு) நூலை வாசிக்க வேண்டும். சாதி அதிகாரப் படிநிலையை, செயல்பாடுகளை விசாரணைக்கு உட்படுத்துபவை சிவகாமியின் நாவல்கள். ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வுக் களங்களையும் நுணுக்கமான பரிமாணங் களையும் எடுத்துரைப்பவை. சிவகாமியின் ‘ஆனந்தாயி’ (தமிழ்ப் புத்தகாலய வெளியீடு) பாலினப் பாகுபாட்டு வாதைகளின் ஊடாகக் கட்டப்படும் பெண் சுயத்தின் குரலாக ஒலிக்கிறது.

பெண் சுயத்தின் வாழ்வுப் போராட்டப் பதிவுகள் பிற மொழிகளிலிருந்தும் தமிழுக்கு வந்திருக்கின்றன. கவிஞர் கீதா சுகுமாரனின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் அமெரிக்கக் கவிஞர் சில்வியா பிளாத்தின் கவிதைகள் - ‘தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி’ (காலச்சுவடு வெளியீடு), அ. மங்கையின் மொழிபெயர்ப்பில் வந்திருக்கும் பெளத்தப் பெண் துறவிகளின் பழம் பாடல்கள் - ‘தேரி காதை - பௌத்தப் பிக்குணிகளின் பாடல்கள்’(சந்தியா வெளியீடு) இரண்டும் அவற்றில் மிக முக்கியமானவை!

- பெருந்தேவி, கவிஞர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x