Published : 25 Jan 2014 12:00 AM
Last Updated : 25 Jan 2014 12:00 AM
பொதுவாக இலக்கியவாதிகளுக்கு வழங்கப்பட்டுவந்த இயல் விருது, 2013ஆம் ஆண்டுக்குத் திரைப்பட வரலாற்று ஆய்வு, சூழலியல் துறை சார்ந்து எழுதி வரும் சு.தியடோர் பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டுள்ளது. கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் விருது இது.
திரைப்பட வரலாற்று ஆய்வு, சூழலியல் சார்ந்து கடந்த 40 ஆண்டுகளாக அவர் எழுதி வருகிறார். தமிழ் சூழல் சார்ந்து மேற்கண்ட இரண்டு துறைகளில் முதலில் ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த அவர், தொடர்ச்சியாகத் தமிழிலும் எழுதிவருகிறார். நீண்ட காலமாகத் தமிழ் இலக்கியவாதிகள், சிற்றிதழ்கள், மாற்றுச் சிந்தனை அமைப்புகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டு இயங்கிவருகிறார். தலைமை அஞ்சல் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பின்னர்தான், தமிழில் அதிகமாக எழுத ஆரம்பித்தார்.
வரலாற்று ஆய்வுக்குத் தமிழகத்தில் பெரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. இந்நிலையில் திரைப்படங்களின் வரலாற்று பின்னணியை ஆராயும் ஒரு சிலருள் தியடோர் பாஸ்கரன் முதன்மையானவர். அதிலும் திரைப்படங்களைச் சமூகத்துடன் இணைத்துப் பார்க்கும் இவரது ஆய்வு முறை, மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
திரைப்படங்களை ஒரு சமூகத்தின் அடையாளமாக, காலத்தின் பிரதிபலிப்பாக, அந்தந்தக் காலத்தின் வரலாற்று ஆவணமாக இவரது எழுத்து முன்வைக்கிறது. தமிழகம் எப்படித் தென்னிந்திய சினிமாவின் மையமாக இருந்தது, தமிழ் சினிமாவின் தொடக்கம், அந்தக் கால ஆளுமைகள், பின்னணி அரசியல் பற்றி அவரது திரைப்பட எழுத்துகள் பேசுகின்றன.
தமிழ்த் திரைப்படங்கள் பற்றி அவர் எழுதிய The Eye of the Serpent நூலுக்குத் தங்கத் தாமரை தேசிய விருது (1997) கிடைத்தது. சித்திரம் பேசுதடி, எம் தமிழர் செய்த படம், தமிழ் சினிமாவின் முகங்கள் ஆகிய திரைப்படம் சார்ந்த நூல்களை எழுதியிருக்கிறார்.
ஆரம்பத்தில் அவருடைய திரைப்பட வரலாற்று ஆய்வுக்கே கவனம் கிடைத்துவந்தாலும், சமீப ஆண்டுகளாகச் சூழலியல் எழுத்தாளராகவும் அவர் அடையாளம் பெற்றிருக்கிறார். அவர் எழுதிய சுற்றுச்சூழல் கட்டுரைகளின் முதல் தொகுப்பு ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’. இந்த நூல் தமிழ் இலக்கியத் தோட்டப் பரிசை (2010) பெற்றிருக்கிறது. அதற்குப் பின்னர் அவரது இரண்டு சூழலியல் கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.
சூழலியலைச் சுவாரசியம் இல்லாத அறிவியலாக எழுதாமல், சுயஅனுபவம், இலக்கியம், பண்பாடு ஆகிய பின்னணிகளைச் சேர்த்து, தான் கவனப்படுத்த நினைக்கும் விஷயத்தை வேறொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுவிடுவார். அது மட்டுமில்லாமல் உரிய இடங்களில் பண்டைய தமிழ்ச் சொற்கள் (பல்லுயிரியம்), எளிய மக்கள் பயன்படுத்தும் பாரம்பரியச் சொற்கள் (ஓங்கில் - Dolphin), ஆவுளியா (Dugong-கடல் பசு), புதிய சொற்கள் (காட்டுயிர்-Wildlife) என மொழியை மறுகட்டமைப்பு செய்வதில் தீவிர கவனம் செலுத்துபவர். அவருடைய இந்தப் பண்பு சூழலியல் எழுத்துக்கான மொழியைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவரது இந்தப் பணி தமிழில் சூழலியல் சார்ந்த பசுமை எழுத்தை முன்னெடுக்கும் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகவும் காரணமாக இருந்துள்ளது.
அவரது தேர்ந்த மொழிபெயர்ப்பை ‘கானுறை வேங்கை’ என்ற நூலில் காணலாம். தமிழின் முதல் இயற்கையியல் எழுத்தாளர் மா. கிருஷ்ணனின் தமிழ்க் கட்டுரைகளை மழைக்காலமும் குயிலோசையும் என்ற பெயரில் அவர் தொகுத்துக் கொண்டுவந்த பணி குறிப்பிடத்தக்கது.
சூழலியலை அறிமுகப்படுத்திக் குழந்தைகளுக்கும் எழுதியிருக்கிறார். மா.கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் குழந்தைப் பதிப்பு, நம்மைச் சுற்றிக் காட்டுயிர் ஆகிய நூல்கள் அந்த வகையைச் சேர்ந்தவை. அடுத்த தலைமுறைக்குச் சூழலியலின் முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலமே, அதை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்.
திரைப்பட வரலாறு சார்ந்தும் சூழலியல் சார்ந்தும் பல விஷயங்களை கவனத்துக்குக் கொண்டு வந்ததுடன் புதிய சொற்களைப் பயன்படுத்துவதிலும், மொழிநடையை உருவாக்குவதிலும் அவர் முன்னோடியாக இருந்திருக்கிறார். இந்த இரண்டு துறைகள் சார்ந்தும் பரவலான வாசகர்களின் கவனத்தை ஈர்த்ததில் அவரது எழுத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அதை அங்கீகரிக்கும் வகையில் படைப்பிலக்கியம் சாராத ஒருவரது பன்முகப் பங்களிப்புக்காக இயல் விருது வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத் தகுந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT