Published : 19 Apr 2017 10:03 AM
Last Updated : 19 Apr 2017 10:03 AM
சென்ற கட்டுரையில், நம்மாழ்வார் எழுதிய ‘திருவிருத்தம்’ என்றிருக்க வேண்டும் ‘திருவருட்பா’ என்று தட்டச்சு செய்துவிட்டேன். சிந்தனையுடன் விரல் ஒத்துழைக்கவில்லை. மன்னிக்கவும்.
***********
தருண் விஜய் ‘எங்களுக்கு இன வெறி என்று எப்படிச் சொல்வீர்கள்? நாம் தென்னிந்தியர்களுடன் சுமுகமாக வாழவில்லையா?’ என்று கேட்டார் என்பதைக் கேட்டதும், எனக்கு உடனே ஷேக்ஸ்பியர் நாடகம் ‘ஜூலியஸ் சீஸர்’ நினைவுக்கு வந்தது.
புரூட்டஸ் சீஸரின் நெருங்கிய நண்பன். தன்னைக் கொல்லத் துணிந்த சதிகாரர்களில் புரூட்டஸ்ஸும் ஒருவன் என்றறிந்ததும் சீஸர் அவனைக் கேட்கிறான் ‘‘நீயுமா புரூட்டஸ்?’’
தருண், பா.ஜ.க. அரசியல்வாதி களிலே தம்மை வித்தியாசமானவராகக் காட்டிக்கொள்ள முனைந்தார். திருக் குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றார். உத்தராகண்டில் திருவள்ளுவருக்குச் சிலை எடுத்தார். ஆனால், பாவம் தமிழர்களின் ‘கருப்பு’ நிறம் அவர் அடிமனதை நெருடிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். அவ்வாறு நெருடவில்லை என்று தமக்குத் தாமே நிரூபித்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. சமயம் வந்ததும் சொல்லிவிட்டார், அவ்வளவுதான்!
ஆனால் ‘நாம்’ என்று அவர் யாரைக் குறிப்பிடுகிறார்? சக வட இந்தியரையா? பா.ஜ. கட்சியினரையா? வட இந்தியர் கள் பொதுவாக தம்மைத் தென்னிந்தி யர்களினின்றும் அந்நியப்படுத்திக் கொண்டு பேசுவது எனக்குப் புதிதில்லை. நான் டெல்லியில் 33 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். நான் டெல்லிக்குப் போன புதிதில் குடியிருக்க வீடு பார்க் கப் போனபோது வீட்டுக்காரர் தம் மனைவியிடம் சொன்னார்: ‘‘மதராஸிகள் நம்முடைய ஆட்கள் மாதிரி இல்லை. வாடகையை ஒழுங்காகக் கொடுத்து விடுவார்கள்!’’
அந்தக் காலத்திலேயே அவர் சொன்ன ‘நம்முடைய ஆட்கள்’ என்றது என்னை நெருடியது! அவர் அவ்வாறு சொன்னதன் இன்னொரு sub-text ‘மதராஸிகள் பயந்தாங்கொள்ளிகள்’. பாராட்டாக வைத்துக்கொள்ள வேண்டு மென்றால் ‘தர்மத்துக்குக் கட்டுப்பட்ட வர்கள்!’
இன்னொரு சம்பவம். 1984-ல் பல் கலைக்கழகக் கலாச்சாரப் பரிவர்த் தனை ஒப்பந்த அடிப்படையில் நான் கனடாவுக்குச் சில பல்கலைக்கழகங் களில் பேசுவதற்காக அழைக்கப் பட்டிருந் தேன். அப்போது வான்கோவரில், சில இந்தி எழுத்தாளர்கள் வேறொரு ஒப்பந்தந்தத்தின் கீழ் வந்திருந்தார்கள். அந்த இந்தி எழுத்தாளர்களுக்கும் கனடா எழுத்தாளர்களுக்கும் இடையே ஒரு சந்திப்பை இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
நானும் ஓர் எழுத்தாளன் என்பதால் என்னையும் அழைக்கலாம் என்று தூத ரகத்தைச் சேர்ந்த தமிழ் அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இந்தி எழுத்தாளர் களைக் கனடிய எழுத்தாளர்களுக்கு அறிமுகப்படுத்தியபோது, ‘‘இவர்கள் எங்கள் இந்திய எழுத்தாளர்கள்!’’ என்று சொன்ன வட இந்திய அதிகாரி, என்னைக் குறிப்பிடும்போது, ‘‘இவர் எங்கள் தமிழ் எழுத்தாளர்!’’ என்றார்.
‘‘நான் இந்திய எழுத்தாளன் இல் லையா?’’ என்று அவரைக் கேட்டேன். நான் கேட்டது அவருக்குச் சுத்தமாகப் புரியவேயில்லை. அவர் அடிமனத்தில் இந்தி எழுத்தாளர்கள்தான் ‘இந்திய எழுத் தாளர்கள்’, மற்ற மொழி எழுத்தாளர்கள், ‘பிராந்திய மொழி எழுத்தாளர்கள்’ என்ற கருத்து வேரூன்றியிருந்தது.
‘‘எஸ்... எஸ்... அஃப்கோர்ஸ்’’ என்று நான் சொன்னதைப் புரிந்துகொள்ள வில்லை என்ற முக பாவனையுடன், இயந்திரரீதியாகத் தலையை ஆட்டினார்.
‘இந்தியா’ என்ற ஓர் அரசியல் அமைப்பு, காலனி ஆட்சியினால் நமக்குக் கிடைத்த ஒரு நன்கொடை. ஆனால், பூகோளரீதியாக ‘பாரதம்’ என்ற ஒரு கருத்தமைதி மக்கள் மனதில் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. ‘பாரத வர்ஷே, பரதக் கண்டே’என்ற வழக்கினின்றும் இதை அறியலாம். ‘தென் குமரி’, வட பெருங்கல், குண குடா கடலா எல்லை’ என்கிறது புறநானூறு. ‘தென் கடற்கும், இமயமெனும் நடுப் பாரதமாம்’ என்று ‘கந்த புராணத்’தில் வருகிறது.
1947-க்குப் பிறகு உருவான இந்த அரசியல் அமைப்பு, இந்தியாவில் வெவ்வேறு பிராந்தியங்களில் மனதில், உணர்ச்சிபூர்வமாக ‘நாம் அனைவரும் இந்தியர்’ என்ற ஓர் ஒருமைப் பாட்டை உருவாக்கியிருக்கிறதா என்பது தான் கேள்வி. அப்படி உருவாக்கி யிருந்தால், ‘நாம்’, கருப்பினமாகிய தென்னிந்தியர்களுடன் வாழவில் லையா?’ என்பது போன்ற சிந்தனைக்கு இடமே இருந்திருக்காது.
முதலில், நாம் இந்தியா என்கிற அரசியல் ஏற்பாடு, பல மொழிகளையும், பல பண்பாட்டுக் கிளைப் பிரிவுகளையும் உடைய ஒரு கூட்டமைப்பு என்பதை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
‘ஒரு மொழி, ஒரு நாடு’ என்பது சோவியத் யூனியனில் தோற்றுவிட் டது. ‘ஒரு கோட்பாட்டைச் செயல்படுத்து கிறோம்’ என்று அதிகாரம் முழுவதையும் மத்திய அரசே கைப்பற்றிக்கொண்டது இதற்கு முக்கியக் காரணம்.
ஆனால், ஐரோப்பாவில் இருந்து வெவ்வேறு மொழிகளைப் பேசிய வெவ்வேறு இன மக்கள் அமெரிக்கா வுக்குச் சென்று ஒரு புதிய தேசத்தை உருவாக்க முடிந்திருக்கிறது. காரணம், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளின் பயம். கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளும் (சிவப்பிந்தியர்கள்) இருந்தார்கள். வெள்ளையர் யாருக்கும் அந்த இடம் சொந்தமில்லை, அனைவருமே குடியேறி யவர்கள் என்ற பொது உணர்வும், நிற ஒற்றுமையும் அவர்களை இணைத்து வைத்திருக்க வேண்டும். பெரும்பான்மையோர் ஆங்கிலோ - சாக்ஸன் இனத்தினர். ஆங்கிலம் அவர்களைக் கூட்டுவித்தது.
பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் இருந்து விடுதலை பெறப் போராடியதும் அவர்கள் ஒன்றுபடக் காரணமாயிற்று. தனிமனித உரிமைகளைப் பற்றித் தீவிரமாகச் சிந்திக்கவும், அதற்கேற்ப அரசியல் சாசனம் உருவாக்கவும் இந்த விடுதலைப் போர் உதவியது. ஆனால், அடிமைகளாக வந்த கருப்பர்களைப் பற்றி அவர்கள் அப்போது சிந்திக்க வில்லை என்பதும் உண்மைதான். காரணம், அவர்கள் வேறு நிறம்!
வெவ்வேறு மொழி, சமய, பண்பாட்டு இனங்களாக ஒரு நாடு இருந்தாலும், அனைவருக்கும் சம உரிமைகளும், வாய்ப்புக்களும் உறுதியானால் அந் நாடு ஒன்றுபட்ட ஒரு தேசமாக உருவாக முடியும். அமெரிக்க தேசத்தின் அரசியல் கோஷம் ‘Equal opportunity Employer’ என்பதுதான். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த உத்தரவாதம் அவசியம் தேவை. வெறும் ‘தேசபக்தி’, ‘தேசியம்’ போன்ற வரட்டுக் கோஷங்களி னால் மட்டும் பொருளாதார மேம் பாட்டை ஏற்படுத்திவிட முடியாது. நாட்டுக் குடிமகன் ஒவ்வொருவனும் இந்நாட்டு வளர்ச்சிக்கு எவ்வளவு அவசியமானவன் என்பதை அவனே மனப்பூர்வமாக உணர்வதற்கான அரசியல், சமூக சுமுகச் சூழ்நிலை உருவாக வேண்டும்.
இப்போது ‘நம்’ (உளப்பாட்டுப் பன்மை) நாட்டில் ஆட்சியிலும், சமூகத்திலும் காணும் மொழி சமய - சாதிப் பெரும்பான்மைவாதம் நாட்டை எங்கு கொண்டுசெல்லும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
- பயணம் தொடரும்… | எண்ணங்களைப் பகிர: parthasarathyindira@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT