Last Updated : 09 Apr, 2017 10:59 AM

 

Published : 09 Apr 2017 10:59 AM
Last Updated : 09 Apr 2017 10:59 AM

நாடகம் காண்டவ வனம்: யுகங்களைக் கடந்து எதிரொலிக்கும் கூக்குரல்கள்

மனித இனம் இயற்கையுடன் ஓயாமல் போராடிவந்துள்ளது. புதிய குடியிருப்புகள், போக்குவரத்து வசதிகள், அணைக்கட்டுக்கள், தொழிற்சாலைகள், வானளாவிய கட்டிடங்கள் என நாகரிக வளர்ச்சியில் அது எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் இயற்கையின் உயிர்த் தன்மையின் மீது விழும் பேரிடியாகவே இருக்கிறது. இதை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது மனிதன், இதர உயிரினங்கள், உயிர்ச் சூழல் ஆகிய அனைத்துத் தரப்புக்குமான விவேகம் என்ற புரிந்துணர்வைச் சூழலியல் அறிவு நமக்குச் சொல்கிறது. ஆனால், மனித இனம் இயற்கையுடனான தனது போரை நிறுத்தவில்லை. அதன் வேகத்தையும் குறைக்கவில்லை.

இது நவீன மனிதனின் இயல்பு மட்டும்தானா? யோசித்துப் பார்த்தால் மனித இன வரலாறு நெடுகிலும் இத்தகைய தாக்குதல்கள் நிரம்பியிருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளலாம். மனிதர்கள் மட்டுமல்ல, கடவுளர்களும் இதற்கு விலக்கல்ல என்பதைப் புராண, இதிகாசங்கள் நமக்குக் கூறுகின்றன. பரந்து விரிந்திருந்ததொரு ராஜ்ஜியத்தில் காட்டை அழித்துப் புதிய நகரை நிர்மாணிக்க வேண்டிய தேவை என்ன வந்தது? ஆனால், அர்ஜுனன் கிருஷ்ணனின் துணை கொண்டு அக்கினி தேவனின் உதவியோடு அதைத்தான் செய்கிறான். பாண்டவர்களும் தெய்வங்களும் சேர்ந்து காண்டவ வனம் என்னும் காட்டையும் அதிலிருந்த உயிர்களையும் அழித்து இந்திர லோகத்துக்கொப்பான நகரையும் மாளிகைகளையும் அமைத்தார்கள்.

இயற்கையின் மீது கடவுளர்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைச் சமகாலத்துடன் பொருத்திப் பார்க்கிறது ப்ரஸன்னா ராமஸ்வாமியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காண்டவ வனம்’ நாடகம். ந. முத்துசாமியின் பிரதிக்கு மேடை வடிவம் கொடுத்துள்ள ப்ரஸன்னா, இயற்கையின் மீதான தாக்குதல் இன்று விஸ்வரூபம் எடுத்துத் தன் அழிவுக் கரங்களைச் சகல திசைகளிலும் பரவவிடுவதை மகாபாரதக் கதையை முன்வைத்துப் பேசுகிறார்.

காலம் மாறலாம். கருவிகள் மாறலாம். ஆனால், இயற்கையை அழிப்பதில் மனிதனுக்குள்ள ஆவேசம் மாறவில்லை. அதற்குப் பின் உள்ள மேலாதிக்க உணர்வும் அதிகார வேட்கையும் சொகுசு நாட்டமும் மாறவில்லை. அன்றிலிருந்து இன்றுவரை தொடரும் கதை இது. கிருஷ்ணனும் அர்ஜுனனும் இயற்கையைத் தாக்க திவ்யாஸ்திரங்களையும் தெய்வீக ஆயுதங்களையும் மட்டும் பயன்படுத்தவில்லை. இயற்கையின் மீதான அதிகார உணர்வும் அவர்களுடைய தாக்குதலுக்குப் பின் இருப்பதை நாடகப் பிரதி காட்டுகிறது.

திவ்யாஸ்திரங்கள் நவீன தொழில் நுட்பங் களாகின்றன. கிருஷ்ணார் ஜுனர்கள் அரசாங்கங்களாகவும் பெருநிறுவனங்களாகவும் அவதாரம் எடுக்கிறார்கள். ராஜ்ய நிர்மாணம், துஷ்ட மிருகங்கள் களையெடுப்பு என்னும் காரணங்கள் வளர்ச்சி என்னும் வசீகர முகமூடி அணிந்து கொள்கின்றன. இந்த வேட்டைக்கு இலக்காகும் வனங்களும் பழங்குடி இன மக்களும் காட்டுயிர்களும் மட்டும் மாறவே இல்லை.

காலத்தினூடே முன்னும் பின்னும் பயணிக்கும் நாடகத்தில், காட்சிப் பின்புலங்களுக்கேற்ப வசனங்களும் உடல் மொழிகளும் மாறுகின்றன. பாரதக் கதையையும் பிற புராணக் கதைகளையும் சித்தரிக்கும் பகுதிகளில் வசனங்கள் முழுமையான நம்பகத்தன்மையுடன் வெளிப்படுகின்றன. நடிகர்கள் வசனங்களை அவற்றின் பின்னணி களோடு நன்கு உள்வாங்கியிருப்பதை அவர்கள் பேச்சிலும் நடிப்பிலும் உணர முடிகிறது.

ஒப்பனைகள் குறைந்தபட்சமாக, புராண காலத்துக்கான உணர்வை ஏற்படுத்துமளவுக்கு மட்டுமே இருக்கின்றன. பிரதி காலத்தினூடே முன்னும் பின்னும் பயணிப்பதற்குப் பொருத்தமாகவே இது இருக்கிறது. வசனங்களும் கால மாற்றத்துக்கேற்ப மாறுகின்றன. சில சமயங்களில் அடுத்தடுத்த நிமிடங்களிலேயே இந்த மாற்றம் நிகழ்கிறது. காண்டவ வனத்துக்குள் சமகால மலை, வன ஆக்கிரமிப்புகளும், வீடிழந்த இன்றைய கட்டிடத் தொழிலாளர்களுக்குள் காண்டவ வனத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட விலங்குகளும் இயல்பாக ஊடுருவுகின்றன. வனங்களை அழித்துவிட்டு மரங்களை நடுவதன் அபத்தம் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்லப்படுகிறது. புராண காலமும் சமகாலமும் ஒன்றன் மீது ஒன்று படரும் விதம் படைப்பூக்கத்துடன் காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது. இயற்கையின் மீதான மனித ஆக்கிரமிப்புதான் இரு காலங்களையும் இணைக்கும் கண்ணி.

ஓவியர் நடேஷின் ஒளியமைப்பும் அரங்க அமைப்பும் நாடகத்தின் பரிமாணங்களைக் கூட்டுகின்றன. ப்ரஸன்னாவின் நாடகங்கள் எப்போதுமே பல்லூடகங்களைத் தம் மொழியாகக் கொண்டவை. இந்நாடகத்திலும் ஓவியங்கள், நாட்டு நடப்பைச் சித்தரிக்கும் ஒளிப்படங்கள், இசை, ஆகியவை நாடக மொழியோடு இரண்டறக் கலந்திருக்கின்றன. ரமேஷ் பாரதி பாடியிருக்கும் பாடல்கள் தரும் உணர்வு நாடக அனுபவத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது. இசையமைப் பையும் ஒருங்கிணைத்திருக்கும் இயக்குநர் ப்ரஸன்னா, காட்சிகளின் தன்மைக்கேற்பச் செவ்வியல் இசையையும் நாட்டுப்புற இசையையும் கலந்து பயன்படுத்தியிருக்கிறார்.

காண்டவ வனங்கள் இன்னமும் எரிந்துகொண்டுதான் இருக் கின்றன. காட்டுயிர்களும் பழங்குடி யினரின் வாழ்வும் உயிர்ச் சூழலும் சூறையாடப்படுகின்றன. சீரழிக்கப் படும் இயற்கையின், விலங்குகளின், மனிதர்களின் கூக்குரல் திசைகள் அதிர யுகங்களைக் கடந்து எதிரொலிக்கிறது. அதைக் கேட்பதற்கான காதுகளும் பார்ப்பதற்கான கண்களும் அவற்றைக் காப்பதற்கான கரிசனமும் திராணியும் நமக்கு இருக்கின்றனவா என்னும் கேள்வியை வலுவாக எழுப்புகிறது இந்த நாடகம்.

தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x